(Source: ECI/ABP News/ABP Majha)
பாஜகவுடன் கூட்டணி இல்லை என்ற நிலைப்பாட்டில் மாற்றமில்லை - எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்
"தமிழ்நாட்டின் உரிமைகளை பாதுகாக்கவே தனித்து போட்டியிடுகிறோம். பல மாநிலங்களில் பிரதமர் வேட்பாளர் அறிவிக்கவில்லை. எங்கள் நிலைப்பாட்டை நான் ஏற்கனவே தெளிவுபடுத்தி விட்டேன்"
கோவை விமான நிலையத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “காலங்காலமாக காலதாமதமாக வீட்டு வரி செலுத்தினாலும், அதற்கு எந்த வட்டியும் வசூல் செய்யப்படாமல் இருந்தது. தற்போது விடியா திமுக அரசு காலம் தாழ்த்தி வீட்டு வரி செலுத்தினால் வட்டி என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 2021 தேர்தலின் போது திமுக தேர்தல் அறிக்கையில் இடைநிலை ஆசிரியர்களுக்கு வாக்குறுதிகளை நிறைவேற்றுவது அரசின் கடமை. இடைநிலை ஆசிரியர்கள் வைத்த கோரிக்கைகளை அரசு பரிசீலித்து நிறைவேற்ற வேண்டும். திமுக அரசு சர்வதிகார போக்குடன் உள்ளது. நாட்டில் உள்ள பிரச்சனைகளை எடுத்து சொன்னால், பொறுத்துக் கொள்ளமுடியாமல் அதிமுக ஐடி விங்க் நிர்வாகிகள் மீது பொய் வழக்கு போடுகிறார்கள். இதற்கு ஒரு காலத்தில் பதில் சொல்லியாக வேண்டும்.
அரசே குளறுபடியாக உள்ளதால், காவல் துறையும் குளறுபடியாக உள்ளது. அரசு நன்றாக இருந்தால் தான், காவல் துறை சிறப்பாக செயல்படும். தலைமை சரியில்லை. தினமும் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமைகள் அதிகமாக நடக்கிறது. அரசாங்கம் மொத்தனப்போக்குடன் செயல்படுகிறது. நிர்வாக திறமையற்ற அரசாங்கமாக உள்ளது. பொம்மை முதலமைச்சர் நாட்டை ஆண்டு கொண்டு இருக்கிறார். மக்களுக்கு பாதுகாப்பு இல்லை” எனத் தெரிவித்தார். திமுக - பாஜக இடையே தான் நாடாளுமன்ற தேர்தலில் போட்டி என்ற அண்ணாமலை கருத்து குறித்த கேள்விக்கு, “அவர் சொல்வதற்கு நான் என்ன சொல்ல முடியும்? நீங்கள் அவரைத் தான் கேட்க வேண்டும். மக்களிடம் போய் கேளுங்கள். யாருக்கு யார் எதிரி என்பதை மக்கள் தெளிவாக சொல்வார்கள். அதிமுக தான் பிரதான எதிர்கட்சி. 30 ஆண்டுகள் ஆட்சி செய்த கட்சி. வேண்டுமென்றே சிலர் திட்டமிட்டு சொல்வதற்கு நாங்கள் என்ன சொல்ல முடியும்?” எனப் பதிலளித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “உதயநிதி மாய உலகத்தில் மிதந்து கொண்டு இருந்தார். நாடாளுமன்ற தேர்தலில் வரும் போது உரிய பதில் கிடைக்கும். பாஜகவினர் அதிமுகவினர் இடையே பேச்சுவார்த்தை ஒருபோதும் கிடையாது. அதிமுக தெளிவான முடிவு எடுத்து அறிவித்துவிட்டது. எங்கள் நிலைப்பாட்டை நான் ஏற்கனவே தெளிவுபடுத்தி விட்டேன். பல மாநிலங்களில் பிரதமர் வேட்பாளர் அறிவிக்கவில்லை. தமிழ்நாட்டின் உரிமைகளை பாதுகாக்க வேண்டும். தமிழ்நாடு வளர்ச்சி பெற புதிய திட்டங்கள், அதிக நிதி, சிறுபான்மை மக்களுக்கு முழுமையான பாதுகாப்பு தர வேண்டும் என்பதை யார் ஆட்சிக்கு வந்தாலும் அதிமுக அதிக இடங்களில் வெற்றி பெற்று நாடாளுமன்றத்தில் முன்னிறுத்தும். தமிழ்நாட்டு மக்களின் குரலை அதிமுக நாடாளுமன்றத்தில் ஒலிக்கும்.
தேசிய கட்சிகள் மாநில பிரச்சனைகளை தான் முன்னெடுக்கிறார்கள். கர்நாடகாவில் காங்கிரஸ், பாஜக தமிழ்நாட்டிற்கு தண்ணீர் தர எதிர்க்கிறார்கள். தமிழ்நாட்டில் காங்கிரஸ், பாஜக தண்ணீர் தர வேண்டும் என்கின்றனர். இதுதான் தேசிய அரசியல். தமிழ்நாட்டின் உரிமைகளை பாதுகாக்கவே தனித்து போட்டியிடுகிறோம். டிடிவி தினகரனை நாங்கள் பொறுட்படுத்துவதில்லை. தேர்தலுக்கு பிறகு அவரது கட்சி விலாசம் தெரியாத கட்சியாகும். அனைத்து மக்களுக்கும் பாதுகாப்பான, சிறுபான்மை மக்களை காக்கும் ஒரே கட்சி அதிமுக. கண்ணை இமை காப்பதை போல சிறுபான்மை மக்களை காப்போம். அதிமுக பொதுச்செயலாளர் தொடர்பான வழக்கின் மேல்முறையீட்டை சட்ட ரீதியாக சந்தித்து வெல்வோம். திமுக ஆட்சிக்கு வந்த பிறகு மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். சிறு, குறு நடுத்தர தொழில்கள் மின்கட்டணத்தினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு திமுக அரசு மேலோட்டமாக சலுகை வழங்கியுள்ளது. நாடாளுமன்ற தேர்தலுக்கு ஆறு, ஏழு மாதங்கள் உள்ளது. எந்த கட்சி எந்த கூட்டணியில் சேரும் என்பது அப்போது தான் தெரியும். அதிமுக தலைமையிலான கூட்டணி வலிமையான கூட்டணியாகவும், வெற்றி கூட்டணியாகவும் அமையும்” எனத் தெரிவித்தார்.