4 மகன்கள் கொரோனாவால் உயிரிழந்ததை கேட்ட அதிர்ச்சியில் தாயும் மரணம் - திருப்பூரில் சோகம்
திருப்பூர் மாவட்டத்தில் தனது 4 மகன்கள் மற்றும் மருமகள் கொரோனாவால் உயிரிழந்ததை கேட்டு, அதிர்ச்சியடைந்த தாயும் உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் அருகே உள்ள வெள்ளிரவெளி பகுதியைச் சேர்ந்தவர் நடராஜ், இவரது மனைவி, பாப்பாள். அவருக்கு வயது 70. இவர்களுக்கு தங்கராஜ், 52, ராஜா, 50, சவுந்திரராஜன் 40 மற்றும் தெய்வராஜன் 45 என நான்கு மகன்கள். நான்கு பேரும் திருமணமாகி குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இந்த நிலையில், கோவையில் உறவினர் ஒருவரின் இறப்பிற்காக துக்கம் விசாரிப்பதற்காக தெய்வராஜ் சென்றுள்ளார். பின்னர் வீடு திரும்பிய அவர் சில தினங்களாக உடல்நிலை சரியில்லாமல் அவதிப்பட்டு வந்தார். இதையடுத்து, அவருக்கு மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது, அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து, பெருந்துறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த தெய்வராஜ், சிகிச்சை பலனின்றி கடந்த மாதம் 9-ஆம் தேதி உயிரிழந்தார். அவரது மறைவைத் தொடர்ந்து, அவரது மனைவி சாந்தா (35) அவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. அவரும் சிகிச்சை பலனின்றி கொரோனாவால் உயிரிழந்தார். இவர்கள் மட்டுமின்றி, தெய்வராஜின் சகோதரர்களான தங்கராஜ், ராஜா, சவுந்தரராஜன் ஆகியோருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டது. ஆனால், துரதிஷ்டவசமாக அவர்கள் அனைவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
இவர்களின் தாயார் பாப்பாள் மிகவும் வயதானவர் என்பதால் மகன்கள் 4 பேரும் கொரோனாவால் உயிரிழந்த தகவலை அவரிடம் உறவினர்கள் கூறவில்லை. இருப்பினும் மகன்கள் யாரும் பார்க்க வராததால் சந்தேகம் அடைந்த பாப்பாள் உறவினர்களிடம் தொடர்ந்து தனது மகன்களை பற்றி கேட்டுள்ளார். அப்போது, உறவினர்கள் பாப்பாளிடம் அவரது 4 மகன்களும், ஒரு மருமகளும் கொரோனா ஏற்பட்டு உயிரிழந்த தகவலை கூறியுள்ளனர். இதைக் கேட்ட அதிர்ச்சியடைந்த பாப்பாள், அன்று இரவே உடல்நலக்குறைவு ஏற்பட்டு அதிர்ச்சியில் மரணம் அடைந்தார். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், மகன்கள் 4 பேர், மருமகள் என 6 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுமட்டுமின்றி அதே பகுதியில் வாழும் சகோதரர்கள் ஈஸ்வரமூர்த்தி மற்றும் செந்தில்குமார் ஆகிய இருவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். ஒரே ஊரில் அடுத்தடுத்து 7 பேர் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உயிரிழந்திருப்பது அப்பகுதி மக்களை மிகுந்த அச்சத்திற்கு உள்ளாக்கி உள்ளது. தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் கோவை, திருப்பூர் ஆகிய பகுதிகளில் கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த சூழலில், இதுபோன்ற உயிரிழப்புகளை தடுப்பதற்காக அப்பகுதி மக்களுக்கு கொரோனா வைரஸ் மற்றும் தடுப்பூசி பற்றிய விழிப்புணர்வை அரசு சார்பில் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக தடுப்பூசி செலுத்திக்கொள்ள விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.