விஜய் பேச்சு vs விசிக புகார்!! தேர்தல் களத்தில் வெடித்த புதிய சர்ச்சை - முழு விவரம் இதோ...
பெற்றோரிடம் ஓட்டு கேட்க குழந்தைகளைத் தூண்டியதாக நடிகர் விஜய் மீது கோவையில் விசிக நிர்வாகி அதிரடி மனு

குழந்தைகளிடம் பெற்றோரிடம் வாக்கு கேட்க வலியுறுத்தியதாகக் கூறி, விஜய் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி விசிக நிர்வாகி நிர்வாகி கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார்.
கோவை கணபதி பகுதியைச் சேர்ந்த வி.சி.க. தொண்டரணி மாவட்ட அமைப்பாளர் பாலகிருஷ்ணன் அளித்த மனுவில், கடந்த 21ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற இறுதிக்கட்ட பரப்புரைக் கூட்டத்தில் விஜய், “குழந்தைகள் சாக்லேட் அல்லது கிண்டர் ஜாய் கேட்டு அடம்பிடிப்பது போல, பெற்றோரிடம் தமக்கு வாக்களிக்குமாறு வலியுறுத்த வேண்டும்” என்று பேசியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த பேச்சு, குழந்தைகளின் மனநிலையை தேர்தல் ஆதாயத்திற்காக தவறாக பயன்படுத்தும் வகையில் உள்ளதாக மனுவில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதன் தாக்கமாக தனது 5 வயது மகன், த.வெ.க.க்கு வாக்களிக்குமாறு தொடர்ந்து வற்புறுத்தியதாகவும், மறுத்தபோது அழுது உணவைத் தவிர்த்ததாகவும் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
மேலும், குழந்தையின் மனஅழுத்தத்தை சமாளிக்க தாம் அக்கட்சிக்கு வாக்களித்ததாக பொய் சொல்ல வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும், இதுபோன்ற சூழல் பல குடும்பங்களில் குழந்தைகளுக்கு உளவியல் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்றும் மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தேர்தல் விதிமுறைகள் மற்றும் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்துக்கு முரணானது எனக் குறிப்பிட்டுள்ள அவர், விஜய் மீது உரிய சட்டநடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், சம்பந்தப்பட்ட வீடியோ காட்சிகளை சமூக வலைதளங்களில் இருந்து அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரியுள்ளார்.
மேலும், இதுகுறித்து தேர்தல் ஆணையத்திற்கும் புகார் அனுப்பியுள்ளதாகவும், நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் நீதிமன்றத்தை அணுக உள்ளதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புகார் தொடர்பாக காவல் துறை மற்றும் தேர்தல் ஆணையம் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் குறித்து அரசியல் வட்டாரங்களில் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
ட்ரெண்டிங் செய்திகள்






















