கோவை அருகே காரோடு கடத்தப்பட்ட தொழிலதிபர் குடும்பம் -36 மணிநேரத்தில் மீட்ட போலீஸ்
கீரணத்தம் பகுதியில் அவர்கள் வந்த காரைக் கொண்டு தனது காரை வழி மறித்து மிரட்டி தன்னை இருந்து இறக்கி விட்டு விட்டு, அவர்களுடன் வந்தவர்கள் தன்னுடன் காரில் இருந்த மகன் மற்றும் உறவினரை கடத்திச் சென்றனர்.
கர்நாடக மாநிலம் பெங்களூர் ஹோலி கிராஸ் பகுதியைச் சேர்ந்தவர் முகமது ஷாஸாத். இவர் எலெக்ரிக்கல் ஸ்கிராப் வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் முகமது ஷாஸாத் நேற்று கோவை மாவட்டம் கோவில்பாளையம் காவல் நிலையத்தில் ஒரு புகார் மனு அளித்தார். அதில் பெங்களூருவைச் சேர்ந்த ஹசீம் அகமது என்பவருடன் தொழில் ரீதியாக பழக்கம் ஏற்பட்டு வியாபாரம் செய்து வந்ததாகவும், தான் அவருக்கு பொருள் கொடுக்க தாமதம் ஏற்பட்டதால் தனது முகம்மது ஷைப் மற்றும் உறவினர் முகமது யாஷினை வலுக்கட்டாயமாக காருடன் கடத்திச் சென்றதாக புகார் அளித்தார். நேற்று மதியம் தனது காரை கோவை மாநகரில் இருந்து பின்தொடர்ந்து கீரணத்தம் ஆருத்ரா என்கிளேவ் அருகில் அவர்கள் வந்த காரைக் கொண்டு தனது காரை வழி மறித்து மிரட்டி தன்னை இருந்து இறக்கி விட்டு விட்டு, அவர்களுடன் வந்தவர்கள் தன்னுடன் காரில் இருந்த மகன் மற்றும் உறவினரை கடத்திச் சென்றதாகவும், அவர்களை மீட்டுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் தெரிவித்தார்.
இந்த புகாரின் பேரில் கோவில்பாளையம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இவ்வழக்கில் கடத்தப்பட்ட நபர்களை விரைந்து மீட்க காவல் துறையினர் தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. தனிப்படையின் ஒரு குழுவினர் பெங்களூர் வரை சென்று விசாரணை நடத்தினர். இந்நிலையில் இன்று காலையில் கோவில்பாளையம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் துறையினர் அத்திபாளையம் பகுதியில் வாகன சோதனை செய்தனர். அப்போது அவ்வழியாக வந்த கர்நாடகா வாகன பதிவெண்களை கொண்ட இரண்டு கார்களில் வந்தவர்களை நிறுத்தி காவல் துறையினர் விசாரணை செய்தனர். அதில் அந்த கார் கடத்தப்பட்ட கார் என்பது அடையாளம் காணப்பட்டது.
அந்தக் காரில் கடத்தப்பட்ட முகமது ஷைப் மாற்றம் முகமது யாஷின் ஆகியோர்கள் இருப்பது தெரிந்து, அவர்கள் இருவரையும் காவல் துறையினர் மீட்டனர். காரில் கடத்திய நபர்களை விசாரணை செய்ததில் பெங்களூருவைச் சேர்ந்த ஹபீப் அகமது(34), சையது அஷ்ரர் (32), சுபையர் அகமது (27) மற்றும் முகமது மொஷின் (25) என்பது தெரியவந்தது. இதையடுத்து 4 பேரையும் காவல் துறையினர் கைது செய்தனர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய சிவப்பு நிற ஹூண்டாய் காரை பறிமுதல் செய்தனர். இதையடுத்து கைது செய்யப்பட்ட 4 பேரும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர். காரில் கடத்தப்பட்ட நபர்களை துரிதமாக செயல்பட்டு 36 மணி நேரத்திற்குள் மீட்டு, குற்றவாளிகளை விரைவில் கைது செய்த காவல் துறையினரை உயர் அதிகாரிகள் வெகுவாக பாராட்டினர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்