ஷார்ஜாவில் இருந்து கோவை வந்த வாலிபருக்கு கொரோனா உறுதி - தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுரை
விமானத்தில் கோவை வந்த வாலிபருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அவரை தனிமைப்படுத்திக் கொள்ள சுகாதாரத் துறை அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.
ஷார்ஜாவில் இருந்து விமானத்தில் கோவை வந்த வாலிபருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அவரை தனிமைப்படுத்திக் கொள்ள சுகாதாரத் துறை அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.
பல நாடுகளில் உருமாறிய கொரோனா பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளது. நாடு முழுவதும் தற்போது புதிய வகை கொரோனா தொற்று பரவி வருகிறது. இந்த தொற்று பரவுவதை தடுக்க அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக அனைத்து விமான நிலையங்களிலும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. குறிப்பாக வெளிநாடுகளில் இருந்து விமானம் மூலம் வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.
கோவை விமான நிலையத்திலும் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கோவை விமான நிலையத்திற்கு 2 வெளிநாட்டு விமானங்கள் வருகின்றன. அதிகாலையில் ஏர் அரேபியா விமானம், இரவு சிங்கப்பூர் விமானம் என இரண்டு சர்வதேச விமானங்கள் இயக்கப்படுகிறது. இவற்றில் 400 பேர் சராசரியாக கோவை வருகின்றனர். விமானத்தில் வரும் 2 சதவீத பயணிகளின் மாதிரிகள் சேகரிக்கப்படுகின்றது.
இந்த நிலையில் ஷார்ஜாவில் இருந்து விமானம் மூலம் கோவை விமான நிலையம் வந்த பயணிகளுக்கு சுழற்சி முறையில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் நாமக்கல்லை சேர்ந்த 30 வயது வாலிபருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இது தொடர்பாக நாமக்கல் மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் கொரோனா பாதித்த வாலிபரை தனிமைபடுத்திக் கொள்ள சுகாதாரத் துறை அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். மேலும் அந்த நபரை சுகாதாரத் துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.
கடந்த ஒன்றாம் தேதி முதல் தற்போது வரை 4250 பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதாகவும், அதில் 2 பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும் சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். அந்த வாலிபர் வந்த விமானத்தில் வந்த சக பயணிகளுக்கு அறிகுறி இருந்தால் கொரோனா பரிசோதனை செய்யவும், சிகிச்சை மேற்கொள்ளவும் அவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்