கோவையில் குழந்தை கடத்தல் கும்பல் ஊடுருவி இருப்பதாக வதந்தி ; காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை
வேறு வேறு பகுதிகளில் எடுக்கப்பட்ட வீடியோக்களை தவறாக சித்தரித்துள்ளார்கள். இது குறித்து வரும் தகவல்களை மக்கள் நம்ப வேண்டாம்.
கோவை மாவட்டத்தின் புறநகர் பகுதிகளில் குழந்தைகள் கடத்தப்படுவதாக சமூக வலைதளங்களில் வீடியோக்கள் பரவும் நிலையில், அது குறித்து மாவட்டக காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர்,”வடமாநிலத்தவர்கள் பெரியநாயக்கன் பாளையம், மேட்டுப்பாளையம் பகுதியில் குழந்தைகள் கடத்துவதாக ஒரு வீடியோ வாட்ஸ் அப்பில் பரவி வருகிறது. அதில் இரண்டு பேரை காவல் துறையினர் பிடித்துள்ளதாக ஆடியோ வருகிறது. இது முழுக்க முழுக்க வதந்தி. வேறு வேறு பகுதிகளில் எடுக்கப்பட்ட வீடியோக்களை தவறாக சித்தரித்துள்ளார்கள். இது குறித்து வரும் தகவல்களை மக்கள் நம்ப வேண்டாம். குழந்தை கடத்தல் தொடர்பாக எந்த வழக்கும் கோவை மாவட்டத்தில் சமீபத்தில் பதிவு செய்யப்படவில்லை.
வடமாநிலத்தவருக்கும் உள்ளுர் மக்களுக்கும் இடையே பிரச்சினை ஏற்படுத்தும் விதமாக இந்த வதந்தி பரப்பப்பட்டுள்ளது. இந்த செய்தியை பரப்பிய நபர் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது. பொய்யான தகவல்களை பரப்புபவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கைகள் எடுக்கப்படும். 15 நாட்களாகவே வெவ்வேறு மாவட்டங்களில் இதே போல குழந்தை கடத்தப்படுவதாக தகவல் பரவி வருகின்றது. ஏதாவது சந்தேகம் இருந்தால் பொதுமக்கள் காவல் துறையை தொடர்பு கொள்ளலாம். பொதுமக்கள் சட்டத்தை கையில் எடுத்து கொள்ளக் கூடாது. பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் மிக்ஷி விற்க வந்த வடமாநிலத்தவர்களை சந்தேகத்தின் பேரில் விசாரித்து அனுப்பி இருக்கின்றனர். மக்கள் சூழ்ந்து யாரையும் அடிக்கவில்லை. தவறுதலான வதந்தியை பரப்பி வருகின்றனர்.
இந்த வதந்தி பரப்பபடுவது குறித்து வழக்குப் பதிவு செய்யப்படும். இது தொடர்பாக முழுமையான விசாரணை நடத்தப்படும். பொதுமக்கள் எந்த சந்தேகம் என்றாலும் உடனடியாக காவல் துறை சமூக பக்கங்கள் மூலம் தொடர்பு கொள்ளலாம். பதட்டமான வாக்குசாவடிகள் குறித்த இடங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றது. பொது மக்கள் தைரியமாக வாக்களிக்க அனைத்து நடவடிக்கைகள் எடுக்கப்படும். போதை பொருள் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக கோவை மாவட்டத்தில் எடுக்கப்பட்டு வருகின்றது” எனத் தெரிவித்தார்.