ரயில்வே துறை கோவையை புறக்கணிப்பதாக புகார்; அனைத்து கட்சியினர் மாட்டு வண்டியில் வந்து போராட்டம்
வட மாநிலங்களில் இருந்து இயக்கப்படும் இந்த ஆறு ரயில்களையும் கோவை ரயில் நிலையம் வழியாக இயக்கப்பட வேண்டும் என ரயில்வே அதிகாரிகளிடம் அரசியல் கட்சியினர் பலமுறை மனு அளித்தனர்.
கோவை ரயில் நிலையத்தின் வழியாக இயக்கப்பட்டு வந்த வட மாநிலங்களில் இருந்து வரும் ஆறு விரைவு ரயில்கள், கோவை ரயில் நிலையம் வழியாக இயக்காமல் போத்தனூர், இருகூர் ரயில் நிலையங்கள் வழியாக கேரளாவிற்கு இயக்கப்படுகிறது. வட மாநிலங்களில் இருந்து இயக்கப்படும் இந்த ஆறு ரயில்களையும் கோவை ரயில் நிலையம் வழியாக இயக்கப்பட வேண்டும் என ரயில்வே அதிகாரிகளிடம் அரசியல் கட்சியினர் பலமுறை மனு அளித்தும் ரயில்வே துறை நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த நிலையில் ஆலப்புழா - சென்னை எக்ஸ்பிரஸ், திருவனந்தபுரம், டெல்லி கேரளா எக்ஸ்பிரஸ், கன்னியாகுமரி - திர்புர்கார் எக்ஸ்பிரஸ், எர்ணாகுளம் -பாட்னா எக்ஸ்பிரஸ் , கொச்சுவேலி - யஸ்வந்த்பூர் எக்ஸ்பிரஸ் உட்பட ஆறு ரயில்களை கோவை ரயில் நிலையம் வழியாக இயக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி, அனைத்து கட்சி சார்பில் இன்று மாட்டு வண்டியில் சென்று மனு அளிக்கும் போராட்டம் நடத்தப்பட்டது.
கோவை ரயில் நிலையம் எதிரே உள்ள கீதா கபே பகுதியில் இருந்து அனைத்து கட்சியைச் சேர்ந்தவர்கள் இரண்டு மாட்டு வண்டியில் சென்று மனு அளித்தனர். இந்த போராட்டத்தை கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர். நடராஜன் துவக்கி வைத்தார். தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.ராமகிருட்டிணன் தலைமையில், திமுக, மதிமுக, சிபிஐ, விடுதலை சிறுத்தைகள், மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் பங்கேற்றனர். மாட்டு வண்டியில் முழக்கங்களை எழுப்பிய படி மனு அளிக்க வந்த அவர்கள் மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். இந்த மனு அளிக்கும் போராட்டத்தின் பொழுது திமுகவினர் கைகளில் வடைகளுடன் வந்து மோடி சுட்ட வடை எனக்கூறி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.ராமகிருட்டிணன், ”ஒன்றிய அரசின் ரயில்வே துறை கோவையை வஞ்சித்து வருகிறது. ரயில்வே துறை தொடர்ந்து கோவையை புறக்கணித்து வருகிறது. வடமாநிலங்களில் இருந்து வரும் 6 விரைவு ரயில்களை கோவையை புறக்கணித்து இருகூர், போத்தனூர் வழியாக இயக்கப்படுவதை கைவிட வேண்டும். பொள்ளாச்சி - திண்டுக்கல் அகல ரயில் பாதையில் கோவையிலிருந்து தென்மாவட்டங்களுக்கு இரவு நேர ரயில்களை இயக்க வேண்டும். கோவையில் இருந்து பெங்களூருக்கு இரவு நேர ரயில்களை இயக்க வேண்டும். சிங்காநல்லூர், பீளமேடு ரயில் நிலையங்களில் கோவை வந்து செல்லும் ரயில்களை நிறுத்த வேண்டும். கோவை - மேட்டுப்பாளையம் வழித்தடத்தை இருவழிபாதையாக மாற்றிட வேண்டும்” எனத் தெரிவித்தார். மாட்டு வண்டியில் வந்து மனு அளிக்கும் போராட்டம் காரணமாக ரயில் நிலையம் முன்பாக சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.