வால்பாறையில் சோகம்...ஆற்றில் மூழ்கி 5 கல்லூரி மாணவர்கள் உயிரிழப்பு
வால்பாறை அடுத்துள்ள நல்ல காத்து எஸ்டேட் பகுதியில் உள்ள ஆற்றில் 5 பேரும் குளிக்கச் சென்றுள்ளனர். ஆற்றில் குளித்து கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக 5 பேரும் நீரில் மூழ்கியுள்ளனர்.
கோவை மாவட்டம் அடுத்த வால்பாறை பகுதியில் ஆற்றில் குளிக்கச் சென்ற கிணத்துக்கடவு பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் 5 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் வால்பாறை பகுதி மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளது. இயற்கை ஏழில் கொஞ்சும் மலைப்பகுதிகளில் தேயிலைத் தோட்டங்களையும், வனப்பகுதிகளையும் தன்னகத்தே கொண்டுள்ளது. தேயிலை தொழில் இப்பகுதி மக்களின் முக்கிய வாழ்வாதாரமாக இருந்து வருகிறது. வால்பாறையை ஒட்டியுள்ள ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் மான், புலி, யானை, வரையாடு, சிங்கவால் குரங்கு உள்ளிட்ட வனவிலங்குகள் வசித்து வருகின்றன. அதேபோல ஏராளமான சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் உள்ள இயற்கை எழில் கொஞ்சும் மலைப்பாதையை ரசிக்கவும், ஆங்காங்கே தென்படும் விலங்குகளை காணவும், நாள்தோறும் வால்பாறைக்கு அதிக அளவில் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில் கிணத்துக்கடவு பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் நபில், வினித் குமார், தனுஷ், அஜய், சரத் ஆகிய ஐந்து பேரும் வால்பாறை பகுதியை சுற்றிப்பார்க்க சென்றனர். அப்போது வால்பாறை அடுத்துள்ள நல்ல காத்து எஸ்டேட் பகுதியில் உள்ள ஆற்றில் 5 பேரும் குளிக்கச் சென்றுள்ளனர். ஆற்றில் குளித்து கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக 5 பேரும் நீரில் மூழ்கியுள்ளனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வால்பாறை காவல் துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் கல்லூரி மாணவர்களின் உடல்களை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
இதனைத்தொடர்ந்து ஆற்றில் மூழ்கி உயிரிழந்த நிலையில் மூன்று மாணவர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. மேலும் இரண்டு மாணவர்களின் உடல்களை தொடர்ந்து தீயணைப்பு துறையினர் தேடி வருகின்றனர். மீட்கப்பட்ட மூன்று பேரின் உடல்கள் வால்பாறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது. இந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மாணவர்கள் உயிரிழப்பிற்கான காரணம் குறித்தும் விசாரித்து வருகின்றனர். வால்பாறை பகுதிக்கு சுற்றுலா வந்த கல்லூரி மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சுற்றுலா பயணிகள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.