Jos Alukkas Robbery : ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடை கொள்ளை : தந்தை தற்கொலை.. முக்கிய குற்றவாளி விஜய் கைது
கொள்ளை வழக்கில் வேறு யாருக்கு எல்லாம் தொடர்பு உள்ளது? என்பது குறித்தும், அக்கடையில் கொள்ளையடிக்க கடை ஊழியர்கள் உதவினார்களா? என்பது குறித்தும் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கேரள மாநிலம் திருச்சூரை தலைமையிடமாக கொண்டு செயல்படும், பிரபல நகைக்கடையான ஜோஸ் ஆலுக்காஸ் நிறுவனத்தின் கிளை, கோவை காந்திபுரம் நூறடி சாலையில் இயங்கி வருகிறது. பல ஆண்டுகளாக இயங்கி வரும் இந்த கடைக்கு, தினமும் ஏராளமான வாடிக்கையாளர்கள் வந்து செல்வது வழக்கம். இந்த நிலையில் கடந்த 27-ஆம் தேதியன்று இரவு ஊழியர்கள் பணி முடித்து, வழக்கம்போல கடையை மூடி விட்டு சென்றுள்ளனர். பின்னர் காலையில் வழக்கம் போல கடை ஊழியர்கள் வந்து கடையை திறந்தபோது, தங்கநகைகள், வைரம் உள்ளிட்டவை கொள்ளையடிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, கடையின் ஏசி வெண்டிலேட்டர் பொருத்தப்பட்டிருந்த பகுதி வழியாக உள்ளே நுழைந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர், கடையில் இருந்த நகைகளை கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது.
மேலும் கடைக்குள் உள்ளே நுழைந்த நபர் கண்காணிப்பு கேமரா முன்பு சட்டையில் முகத்தை மறைத்த மாதிரி சென்றதும், அவரது நடவடிக்கைகள் வித்தியாசமாக இருந்ததும் தெரியவந்தது. இது குறித்து தகவல் அறிந்து வந்த ரத்தினபுரி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடை மற்றும் அப்பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த சிசிடிவி கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றிய காவல் துறையினர், 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதற்கட்ட தகவலின் அடிப்படையில் 2 கிலோ தங்க நகைகள், வைரம், பிளாட்டினம், வெள்ளி ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டது. புலன் விசாரணையில் 4 கிலோ 600 கிராம் தங்க நகைகள், வைரம், பிளாட்டிணம், 700 கிராம் வெள்ளி ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது.
மேலும் காவல் துறையினர் நடத்திய விசாரணையில் தருமபுரியை சேர்ந்த விஜய் என்பவர் கொள்ளையில் ஈடுபட்டதும், அவர் ஆனைமலை பகுதியில் இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை காவல் துறையினர் விஜயை பிடிக்க ஆனைமலை பிடிக்க சென்றபோது, வேறொரு வழக்கில் கைது செய்ய தருமபுரி காவல் துறையினரும் வந்துள்ளனர். அப்போது வீட்டின் கூரையை பிரித்து கொண்டு விஜய் தப்பி சென்றுள்ளார்.
இதையடுத்து விஜய்யின் மனைவி நர்மதாவை கைது செய்த காவல் துறையினர், கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். கொள்ளையடிக்க திட்டமிடவும், நகைகளை மறைத்து வைக்கவும், தப்பி செல்லவும் உதவிய நர்மதா கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து தற்போது 3 கிலோ தங்கம், வைரம், பிளாட்டினம் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து நகைகளை மறைத்து வைத்திருந்த தர்மபுரியை சேர்ந்த விஜயின் மாமியார் யோகராணி என்பவர் கைது செய்யப்பட்டார்.
அவரது வீட்டின் அருகே மறைத்து வைக்கப்பட்டிருந்த 1.5 கிலோ தங்கம், வைரம், பிளாட்டிணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. இதனால் இவ்வழக்கில் கொள்ளையடிக்கப்பட்ட 95 சதவீத நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதனிடையே விஜய்யின் தந்தை முனிரத்தினம் தற்கொலை செய்து கொண்டார். தருமபுரி வனப்பகுதியில் பதுங்கியிருந்த விஜயை காவல் துறையினர் தேடி வந்தனர்.
இந்த நிலையில் விஜய் சென்னையில் இருப்பதாக தனிப்படை காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனடிப்படையில் சென்னை சென்ர காவல் துறையினர் சபரி மலைக்கு மாலை அணிந்தபடி, தலைமறைவாக இருந்த விஜயை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொள்ளை வழக்கில் வேறு யாருக்கு எல்லாம் தொடர்பு உள்ளது என்பது குறித்தும், அக்கடையில் கொள்ளையடிக்க கடை ஊழியர்கள் உதவினார்களா என்பது குறித்தும் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.