கோவை : குழந்தையின் மூச்சுக்குழாயில் சிக்கிய மிளகு.. அறுவை சிகிச்சையின்றி அகற்றிய அரசு மருத்துவர்கள்
மருத்துவர்கள் உடனடியாக உள்நோக்கி குழாய் செலுத்தி பார்த்த போது, மூச்சுக்குழாயில் மிளகு சிக்கி இருப்பது உறுதி செய்யப்பட்டது. அந்த குழந்தைக்கு மூச்சுக் குழாய் உள்நோக்கி கருவி மூலம் மிளகு அகற்றப்பட்டது.
கோவை அரசு மருத்துவமனையில் ஒன்றரை வயது குழந்தையின் மூச்சுக் குழாயில் சிக்கிய மிளகினை மருத்துவர்கள் அறுவை சிகிச்சையின்றி அகற்றி அசத்தியுள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் சின்னக்கரை பகுதியை சேர்ந்த 1 வயது 4 மாதமான ஒரு ஆண் குழந்தைக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து குழந்தையின் பெற்றோர் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அப்போது அக்குழந்தைக்கு அவசர சிகிச்சை அளிக்கப்பட்டு, சிடி ஸ்கேன் எடுக்கப்பட்டது. அப்போது மூச்சு குழாயில் அயல் பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து மருத்துவர்கள் உடனடியாக உள் நோக்கி குழாய் செலுத்தி பார்த்த போது, மூச்சுக் குழாயில் மிளகு சிக்கி இருப்பது உறுதி செய்யப்பட்டது. அந்த குழந்தைக்கு மூச்சுக் குழாய் உள்நோக்கி கருவி மூலம் அறுவை சிகிச்சை இல்லாமல் அந்த மிளகு அகற்றப்பட்டது. தக்க சமயத்தில் அளித்த சிகிச்சையினால் குழந்தையின் உயிர் காப்பாற்றப்பட்டது.
காது,மூக்கு, தொண்டை பிரிவு மற்றும் மயக்கவியல் மருத்துவர்கள் அடங்கிய மருத்துவக் குழுவினர் இணைந்து வெற்றிகரமாக இந்த அறுவை சிகிச்சை செய்து முடித்தனர். கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமணை முதல்வர் பேராசிரியர் அ. நிர்மலா மருத்துவக் குழுவினரை பாராட்டினார். தற்போது குழந்தை நலமாக உள்ளதாகவும், எனவே குழந்தைகளுக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டால் எந்தவித தாமதமின்றி மருத்துவரிடம் சிகிச்சை எடுக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்