கோவை முதியவருக்கு டிஜிட்டல் கைது மிரட்டல்! ₹18 லட்சம் மோசடி முயற்சி: அதிர்ச்சியில் உறைந்த தம்பதி!
மோசடி கும்பல் கூறிய வங்கி கணக்கிற்கு பணத்தை அனுப்பாததால் முதியவரிடம் இருந்த ரூ.18 லட்சம் தப்பியது. இந்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவையில் ராமநாதபுரத்தை சேர்ந்த 65 வயது முதியவர், தனது மனைவியுடன் வசித்து வருகிறார். சம்பவத்தன்று முதியவரின் செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. மறுமுனையில் பேசிய நபர், தான் மும்பையில் உள்ள பாதுகாப்பு அமைச்சகத்தில் இருந்து பேசுவதாக கூறினார். தொடர்ந்து அந்த நபர், உங்கள் ஆதார் எண்ணை வைத்து வங்கி கணக்கை சோதனை செய்ததில், பயங்கரவாதிகளுக்கு பலமுறை பணம் அனுப்பியுள்ளது தெரியவந்துள்ளது.
இதனால் உங்களுக்கு பயங்கரவாதிகளுடன் தொடர்பு இருப்பதாக சந்தேகம் ஏற்பட்டு உள்ளது. நாங்கள் உங்கள் வங்கி கணக்கை ஆய்வு செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார். சிறிது நேரத்தில் போலீஸ் அதிகாரி போன்று சீருடை அணிந்து வீடியோ காலில் பேசிய நபர், பயங்கரவாதிகளுடன் தொடர்பு இருப்பதால் உங்களையும், உங்கள் மனைவியையும் டிஜிட்டல் கைது செய்து உள்ளோம். வீட்டைவிட்டு வெளியே செல்லக்கூடாது என்று கூறினார்.
மேலும் வீட்டின் வெளியே துப்பாக்கிகளுடன் போலீசார் கண்காணித்துக்கொண்டு இருக்கிறார்கள். வீட்டைவிட்டு வெளியே வந்தால் சுட்டு விடுவார்கள். உங்கள் வங்கி கணக்கில் உள்ள ரூ.18 லட்சத்தை நாங்கள் சொல்லும் வங்கி கணக்கிற்கு அனுப்ப வேண்டும். உங்கள் வங்கி கணக்கை முழுமையாக சோதனை செய்த பின்னர் அந்த பணத்தை மீண்டும் உங்கள் வங்கி கணக்கிற்கு அனுப்பி வைத்துவிடுவோம் என்று கூறினார்.
மேலும் பணத்தை அனுப்பும் வரை வீடியோ கால் இணைப்பை துண்டிக்கக்கூடாது என்று மிரட்டியதாக தெரிகிறது. இதனால் பயந்துபோன முதியவர், தனது மனைவியுடன் வீட்டிற்குள்ளேயே முடங்கினார். இதற்கிடையில் வீடியோ காலில் போலீஸ் அதிகாரிகள் என்று கூறி அவ்வபோது சிலர் பேசினர். அவர்கள் உடனடியாக நாங்கள் கூறிய வங்கி கணக்கிற்கு பணத்தை அனுப்புமாறு மிரட்டிக்கொண்டே இருந்தனர்.
மிகுந்த அச்சத்தில் இருந்த தம்பதி இரவு முழுவதும் தூங்காமலும், வெளியே செல்லாமலும் வீட்டுக்குள்ளேயே தவித்தனர். ஆனால் அவர்கள் மோசடி நபர்கள் கூறிய வங்கி கணக்கிற்கு பணத்தை மட்டும் அனுப்பி வைக்கவில்லை. இந்த நிலையில் 2 நாட்கள் வயதான தம்பதி வீட்டைவிட்டு வெளியே வராததால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் ராமநாதபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

பின்னர் முதியவர் வீட்டின் கதவை தட்டினர். அப்போது கதவை திறந்த முதியவர் தங்களை மும்பை போலீசார் டிஜிட்டல் கைது செய்திருப்பதாகவும், வெளியே வந்தால் சுட்டு விடுவதாகவும் கூறியுள்ளனர் என்று தெரிவித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார் அப்படி யாரும் டிஜிட்டல் கைது செய்ய முடியாது. வெளியே துப்பாக்கியுடன் போலீசார் யாரும் இல்லை என்று கூறி அவர்களை சமாதானப்படுத்தி மீட்டு வெளியே அழைத்து வந்தனர்.
அதன்பின்னர் முதியவரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். மேலும் மாநகர சைபர் கிரைம் போலீசாரும் முதியவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் டிஜிட்டல் கைது என்று ஒன்று கிடையவே கிடையாது. மோசடி கும்பல் இதுபோன்று ஏமாற்றி பணம் மோசடி செய்ய முயன்றிருக்கலாம் என்று தெரிவித்தனர். இதையடுத்து முதியவர் நிம்மதி அடைந்தார். மோசடி கும்பல் கூறிய வங்கி கணக்கிற்கு பணத்தை அனுப்பாததால் முதியவரிடம் இருந்த ரூ.18 லட்சம் தப்பியது. இந்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.





















