'தமிழ்த்தாய் வாழ்த்து முழுப்பாடலையும் மாநிலப் பாடலாக அறிவிக்க வேண்டும்' - பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் கோரிக்கை
Tamil Thai Vazhthu: "மனோன்மணீயம் சுந்தரனார் தமிழை தெய்வமாகத்தான் பார்க்கிறார். எனவே, மாநிலப் பாடலாக அறிவிக்கப்பட்டுள்ள தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலின் முழுப் பாடலையும் பாட வேண்டும்"
தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை மாநிலப் பாடலாக பாடப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்தப் பாடல் பாடும்போது மாற்றுத்திறனாளிகள் தவிர்த்த மற்ற அனைவரும் எழுந்து நிற்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை மாநிலப் பாடலாக அறிவித்து இருப்பதை கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினரும், பாஜக மகளிரணி தேசியத் தலைவர் வானதி சீனிவாசன் வரவேற்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், “கவிஞர் மனோன்மணீயம் சுந்தரனார், 'தமிழ்த் தெய்வ வணக்கம்' என்ற தலைப்பில் எழுதிய,
"நீராரும் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்
சீராரும் வதனமெனத் திகழ்பரதக் கண்டமிதில்
தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்
தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறும் திலகமுமே!
அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற
எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெரும் தமிழணங்கே!
உன் சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து
வாழ்த்துதுமே! வாழ்த்துதுமே! வாழ்த்துதுமே!”
என்ற பாடல் 1970 முதல் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலாக தமிழகத்தில் அரசு விழாக்கள், நிகழ்ச்சிகளில் பாடப்பட்டு வருகிறது. தற்போது இந்தப் பாடலை தமிழக அரசின் மாநிலப் பாடலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மோகன ராகத்தில் 55 வினாடிகளில் பயிற்சிப் பெற்றவர்களால் பாடப்பட வேண்டும். தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் பாடப்பெறும்போது அனைவரும் எழுந்து நிற்க வேண்டும் என்றும் முதலமைச்சர் அறிவித்துள்ளார்.
முதலமைச்சரின் இந்த அறிவிப்பை முழுமனதோடு வரவேற்கிறேன். ஆனால், மனோன்மணீயம் சுந்தரனார், 'தமிழ்த் தெய்வ வணக்கம்' என்ற தலைப்பில் எழுதிய பாடலில் ஒரு பகுதியை மட்டுமே தமிழ்த்தாய் வாழ்த்தாக 1970-ல் அன்றைய முதலமைச்சர் கருணாநிதி அறிவித்தார்.
'தமிழ்த் தெய்வ வணக்கம்' என்ற பாடலில்,
"பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினுமோர்
எல்லையறு பரம்பொருள்முன் இருந்தபடி இருப்பதுபோல்
கன்னடமுங் களிதெலுங்கும் கவின்மலையாளமும் துளுவும்
உன்னுதரத் தேயுதித்தே ஒன்றுபல வாகிடினும்
ஆரியம்போல் உலகவழக்கழிந் தொழிந்து சிதையாவுன்
சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே!”
ஆகிய வரிகள் தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடலில் இடம்பெறவில்லை. "உன் சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே!” என்ற வரி மட்டும் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த வரிகளில் கடவுள் பற்றிய வரிகள் வருவதாலேயே நீக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. ஆனால், இந்தப் பாடலின் தலைப்பே, 'தமிழ்த் தெய்வ வணக்கம்' என்பதுதான்.
மனோன்மணீயம் சுந்தரனார் தமிழை தெய்வமாகத்தான் பார்க்கிறார். எனவே, மாநிலப் பாடலாக அறிவிக்கப்பட்டுள்ள தமிழ்த் தாய் வாழ்த்துப்பாடலின் முழுப் பாடலையும் பாட வேண்டும். முழுப் பாடலையும் மாநிலப் பாடலாக அறிவிக்க வேண்டும் என்று முதலமைச்சரைக் கேட்டுக் கொள்கிறேன்” என அவர் தெரிவித்துள்ளார்.
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்