காலம் தாழ்த்திய அண்ணாமலை! மோதிக்கொண்ட பாஜக - திமுக தொண்டர்கள்: நள்ளிரவில் நடந்தது என்ன?
இரவு 10.30 மணிக்கு மேல் பாஜக வேட்பாளர் அண்ணாமலை பிரச்சாரம் செய்வது குறித்து புகார் அளித்த திமுக கூட்டணி கட்சியினருக்கும், பாஜகவினருக்கும் மோதல் ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.
மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அனைத்து அரசியல் கட்சியினரும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கோவை மக்களவை தொகுதியில் பாஜக சார்பில் அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை, திமுக சார்பில் கணபதி ராஜ்குமார், அதிமுக சார்பில் சிங்கை ராமச்சந்திரன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே இருப்பதால், இக்கட்சி வேட்பாளர்கள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் பாஜக மாநிலத் தலைவரும், கோவை பாஜக வேட்பாளருமான அண்ணாமலை சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் வீதி வீதியாக சென்று பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது அவருடன் பாஜக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உடன் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
பாஜக - திமுக கூட்டணி கட்சிகள் மோதல்
இந்த நிலையில் ஆவாரம்பாளையம் பகுதியில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இரவு 7.45 மணியளவில் பிரச்சாரம் செய்வதாக இருந்தது. ஆனால் அண்ணாமலை தாமதமாக 10.30 மணிக்கு பின்னர் வந்துள்ளார். வாகனத்தில் வந்த அவருக்கு, அப்பகுதியில் திரண்டிருந்த பாஜகவினர் மலர் தூவியும், பாரத் மாதாகி ஜெ எனக் கூறியும் வரவேற்பு அளித்துள்ளனர். இரவு 10 மணிக்கு மேலாக வாக்கு சேகரிக்க அனுமதி இல்லாத நிலையில், 10.30க்கு பின்னரும் அண்ணாமலை வாக்கு சேகரிப்பில் ஈடுபடுவதை அனுமதிக்க கூடாது என அப்பகுதியில் இருந்த திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக ஆகிய கட்சியை சேர்ந்தவர்கள் காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளனர். இதனைத்தொடர்ந்து பாஜகவினருக்கும், திமுக கூட்டணி கட்சியினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் மற்றும் மோதல் ஏற்பட்டுள்ளது. அப்போது திமுகவை சேர்ந்த மோகன்ராஜ், செல்லப்பா, ரங்கநாதன், சேகர், சதீஷ், சிபிஎம் கட்சியை சேர்ந்த ஜோதிபாசு மற்றும் மதிமுகவை சேர்ந்த குணசேகரன் ஆகியோர் மீது பாஜகவினர் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது. இதனிடையே அண்ணாமலையின் பிரச்சார வாகனம் அப்பகுதியில் இருந்து கிளம்பி சென்றது.
காவல் துறையினர் பேச்சுவார்த்தை
பாஜகவினர் தாக்கியதில் நெஞ்சு பகுதியில் அடிபட்ட மதிமுகவை சேர்ந்த குணசேகரன் என்பவர் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனைத்தொடர்ந்து வந்த காவல் துறையினர் அப்பகுதியில் திரண்டு இருந்த பாஜகவினரை கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினர். ஆனால் அவர்கள் கலைய மறுத்து பாரத் மாதா கி ஜெ என முழக்கமிட்டனர். அவர்களை சமரசப்படுத்திய காவல் துறையினர் கலைந்து செல்ல செய்தனர். தாக்குதல் நடத்திய பாஜகவினர் மீது நடவடிக்கை எடுக்க கோரி திமுக கூட்டணி கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இரவு 10.45 மணிக்கு பிரச்சாரத்தில் ஈடுபடுவதை அனுமதிக்கக் கூடாது என காவல் துறையினரிடம் கூறியதால், ஆத்திரமடைந்த பாஜகவினர் கூட்டமாக வந்து திமுக, சிபிஎம், மதிமுகவை சேர்ந்த 10 பேரை தாக்கியதாகவும், இதில் காயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும் திமுக கூட்டணி கட்சியினர் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற கோவை மாநகர துணை காவல் ஆணையாளர் ஸ்டாலின் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இது குறித்து தகவல் அறிந்த திமுக மாநகர மாவட்ட செயலாளர் கார்த்திக் அப்பகுதிக்கு சென்று காவல் துறை அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இந்த மோதல் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.