வடமாநில தொழிலாளர்கள் விவகாரத்தில் தமிழ்நாடு அரசின் நடவடிக்கைகள் திருப்திகரமாக உள்ளது - பீகார் குழுவினர் பேட்டி
"தவறான வீடியோக்களை தமிழகத்தில் நடைபெற்ற சம்பவமாக சமூக வலைதளங்களில் பரவிய வீடியோக்கள் காரணமாக பயம் உண்டானது. திருப்பூர் மாவட்ட நிர்வாகம் மூலம் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து விளக்கினார்கள்."
திருப்பூர் மற்றும் கோவை மாவட்டங்களில் பீகாரைச் சேர்ந்த வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக சமூக வலைதளங்களில் பொய்யான வீடியோக்கள் பரவிய நிலையில், வடமாநில தொழிலாளர்கள் அச்சமடைந்தனர். இதனிடையே புலம் பெயர் தொழிலாளர்கள் குறித்து தவறான வீடியோக்கள் மூலம் வதந்தி பரப்பிய விவகாரம் தொடர்பாக பீகார் மாநில ஊரக வளர்ச்சி உள்ளாட்சி செயலர் பாலமுருகன், தொழிலாளர் ஆணையர் அலோக்குமார் , சிறப்பு பணி படை காவல் கண்காணிப்பாளர் சந்தோஷ்குமார், நுண்ணறிவு பிரிவு ஐஜி கண்ணன் உள்ளிட்டோர் திருப்பூரில் ஆய்வு மேற்கொன்டனர். முன்னதாக திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த ஆய்வு கூட்டத்தில் பங்கேற்றனர். பின்னர். திருப்பூர் அருள்புரம், மாநகரில் உள்ள ஏற்றுமதி நிறுவனம் மற்றும் பெருமாநல்லூரில் உள்ள ஏற்றுமதி நிறுவனங்களில் பீகார் குழுவினர் ஆய்வு செய்தனர்.
அப்போது அங்கு தங்கியிருக்கும் வடமாநிலத்தவர்களுக்கான இடம், சுகாதாரம் நாள்தோறும் விடுதியில் வழங்கப்படும் உணவு, சம்பளம் மற்றும் ஏதேனும் பிரச்சினைகள் நிறுவனத்தில் தொழிலாளர்கள் தரப்பில் உள்ளதா என கேள்வி எழுப்பப்பட்டது. இதில் ஒவ்வொருவரும் தங்களது பணி பாதுகாப்பு மற்றும் தமிழகத்தில் எவ்வாறு பாதுகாப்பாக இருக்கிறோம் என்பது குறித்து பிகாரில் இருந்து வந்த குழு அதிகாரிகளுக்கு தெரிவித்தனர். தாங்கள் இங்கு ஒற்றுமையுடன் வாழ்ந்து வருவதாகவும் சமூக வலைதளங்களில் வதந்திகளை பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டனர்.
இதையடுத்து பேட்டியளித்த பீகார் மாநில ஊரக வளர்ச்சி உள்ளாட்சி செயலர் பாலமுருகன், ”இவ்விவகாரம் தொடர்பாக பீகார் சங்க நிர்வாகிகளுடன் கலந்துரையாடினோம். இங்கு பல சங்க பிரதிநிதிகள் உடன் பேசினோம். தவறான வீடியோக்களை தமிழகத்தில் நடைபெற்ற சம்பவமாக சமூக வலைதளங்களில் பரவிய வீடியோக்கள் காரணமாக பயம் உண்டானது. திருப்பூர் மாவட்ட நிர்வாகம் மூலம் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து விளக்கினார்கள்.
கட்டுப்பாட்டு அறை துவங்கியது. ஒலி பெருக்கி மூலம் இந்தியில் அறிவிப்பு வெளியிட்டது. பின்னலாடை நிறுவனங்கள் மூலம் புலம்பெயர் தொழிலாளர்களை கையாண்டது. வதந்தி பரப்பியவர்கள் மீது உடனடியாக வழக்குப்பதிவு செய்து, விழிப்புணர்வு நடவடிக்கை எடுத்துள்ளனர். தமிழ்நாடு அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் எடுத்த நடவடிக்கைகள் திருப்திகரமாக உள்ளது” எனத் தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சஷாங் சாய் கூறுகையில், “டிவிட்டர், யூடியூப், பேஸ்புக் பக்கங்களில் பதிவிட்ட மூவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. குறிப்பிட்ட வீடியோக்களை தடை செய்ய வழக்கு பதிவு செய்து யூ டியூப் மற்றும் டிவிட்டருக்கு பரிந்துரைத்துள்ளோம். பணம் சம்பாதிக்க பார்வையாளர் எண்ணிக்கையை அதிகரிக்க வதந்திகளை பரப்புகின்றனர். அவர்களின் வங்கி கணக்குகளை முடக்கவும் பரிந்துரைத்துள்ளோம். கட்டுப்பாட்டு அறைக்கு 600க்கும் மேற்பட்ட அழைப்புகள் பெறப்பட்டு, விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அனைவரும் விளக்கம் மட்டுமே கேட்டு வருகின்றனர். புகார் இதுவரை பெறப்படவில்லை” எனத் தெரிவித்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்