சிறுத்தை தாக்கி உயிரிழந்த குட்டி யானை; தாய் யானையின் பாசப்போராட்டம் - கோவையில் சோகம்
தாய் யானையை பட்டாசு போட்டு விரட்டிய வனத்துறையினர் குட்டி யானைக்கு சிகிச்சை அளிக்க முயன்றனர். எனினும் குட்டி யானை பரிதாபமாக உயிரிழந்தது.
கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அதையொட்டிய அடர்ந்த வனப்பகுதியில் காட்டு யானைகள் உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் உள்ளன. அடர்ந்த வனப்பகுதியில் உள்ள காட்டு யானைகள் இரவு நேரத்தில் உணவு மற்றும் தண்ணீர் தேடி வனப்பகுதியில் இருந்து வெளியேறி கிராமப்பகுதிகளுக்குள் நுழைவது வழக்கம். வனப்பகுதியையொட்டி உள்ள விவசாய தோட்டங்களில் புகுந்து யானைகள் வாழை உள்ளிட்ட பயிர்களை சாப்பிட்டு வருகிறது. இதனால் சில நேரங்களில் மனித வனவிலங்குகள் மோதல்கள் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படுகிறது. இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக வனப்பகுதிகளை ஒட்டிய கிராமப்பகுதிகளுக்குள் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது.
குறிப்பாக கோவை மாவட்டம் மதுக்கரை வனச்சரகத்தில் யானைகளின் நடமாட்டம் அதிகமாக உள்ள நிலையில், வனத்தை ஒட்டியுள்ள கிராமங்களில் யானைகள் கூட்டம் கூட்டமாக நுழைந்து வருகிறது. இந்த யானைகளை வனத்துறையினர் கண்காணித்து மீண்டும் வனப்பகுதிக்கு விரட்டி வருகின்றனர். இந்நிலையில் நேற்று இரவு மதுக்கரை வனச்சரகத்திற்குட்பட்ட கோவைபுதூர் அட்டமலை பகுதியில் யானை கூட்டம் இருப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் மதுக்கரை வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று காட்டு யானைகளை கண்காணித்து வந்தனர்.
அப்போது கூட்டத்தில் இருந்த குட்டி யானை ஒன்று நடக்க முடியாமல் இருப்பதை வனத்துறையினர் கண்டறிந்தனர். இது குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் அளித்ததை தொடர்ந்து கோவை மண்டல வன பாதுகாவலர் ராமசுப்பிரமணியன், மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ் மற்றும் வனச்சரகர்கள் தலைமையில் வனத்துறையினர் அங்கு சென்று குட்டி யானைக்கு சிகிச்சை அளிக்க முயன்றனர். முதல் கட்டமாக யானை குட்டிக்கு குளுக்கோஸ் மற்றும் பால் பவுடர் அளித்தனர். மேலும் காயத்திற்கு மருந்து வைத்த நிலையில் அருகில் இருந்த தாய் யானை வனத்துறையினரை பார்த்தவுடன் ஆவேசமாக வந்தது. தாய் யானை அப்பகுதியில் ஆக்ரோசமாக சுற்றி வந்தது. மேலும் அப்பகுதிக்கு சென்ற வனத்துறையினர் மற்றும் மக்களை காட்டு யானை விரட்டியது. இதனை தொடர்ந்து தாய் யானையை பட்டாசு போட்டு விரட்டிய வனத்துறையினர் குட்டி யானைக்கு சிகிச்சை அளிக்க முயன்றனர். எனினும் குட்டி யானை பரிதாபமாக உயிரிழந்தது.
இதனை தொடர்ந்து வன கால்நடை மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் உயிரிழந்த குட்டி யானை பிறந்து 2 வாரமே ஆன ஆண் யானை குட்டி என்பதும், முழுவளர்ச்சி இன்றி பிறந்த காரணத்தினால் சரி வர நடக்க முடியாத நிலையில் இருந்து வந்ததும் தெரியவந்தது. மேலும், சில தினங்களுக்கு முன்னதாக சிறுத்தை தாக்கியதில் உடலில் நகம் மற்றும் பற்காயங்கள் ஏற்பட்டு குட்டி யானை மிகவும் பலவீனமடைந்து இறந்துள்ளது என்பதும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து வனப்பகுதியிலேயே பிரேதபரிசோதனை செய்யப்பட்டு குட்டியானையின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. இதனிடையே குட்டி யானை இறந்த நிலையில் தாய் யானை நடத்திய பாச போராட்டம் அப்பகுதி மக்களை கலங்க செய்தது.