DMK: முதல்வர், அமைச்சர்களை விமர்சித்து திமுக மாவட்ட செயலாளர் பேசியதாக ஆடியோ வைரல் - நடந்தது என்ன?
திமுக மாநகர் மாவட்ட செயலாளர் நா. கார்த்திக் பேசுவதாக ஆடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. அதில் திமுக அரசு குறித்து கடுமையாக அவர் விமர்சிப்பதாக உள்ளது.
கோவை திமுக மாநகர் மாவட்ட செயலாளராக இருப்பவர் நா.கார்த்திக். இவர் கடந்த 2016 முதல் 2021 ம் ஆண்டு வரை சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்தார். பின்னர் 2021 ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இவரது மனைவி லக்குமி இளஞ்செல்வி கார்த்திக், கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல தலைவராக உள்ளார். இந்நிலையில் திமுக மாநகர் மாவட்ட செயலாளர் நா. கார்த்திக் பேசுவதாக ஆடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. அதில், திமுக அரசு குறித்து கடுமையாக அவர் விமர்சிப்பதாக உள்ளது. ”ஆட்சிக்கு 10 கதவுகள் இருக்கக் கூடாது. அரசியலில் இவர் ஒருவர் மட்டுமே முடிவு எடுப்பது போல இருக்க வேண்டும். அதிமுகவில் ஜெயலலிதா, சசிகலா மட்டுமே முடிவு எடுத்தனர். வேறு யாரும் நுழைய முடியாது. இதை எல்லாம் செய்யாவிடின் மிகவும் சிரமம். அண்ணாநகர் கார்த்தி வீட்டில் தினமும் காலை 200, 300 பேர் நிற்பார்கள். அவர் மீட்டிங்கில் இருப்பதாக சொல்வார்கள்.
ஆனால் உடற்பயிற்சி செய்து கொண்டிருப்பார். காலை 8.30 மணிக்கு தான் எழுந்திருப்பார். 10.30 மணி வரை உடற்பயிற்சி செய்வார். தொழில் நிமித்தம், டெண்டர் விசயம் தொடர்பாக வந்திருப்பவர்கள் மட்டும் அந்த நேரத்தில் பேச அனுமதிக்கப்படுவார்கள். அவர் மாடியில் இருந்து கீழே வருவதற்கே 11.30 மணி ஆகிவிடும். அவர் ஒரு பவர் சென்டர். அன்பில் மகேஷ் எங்கே தங்கியிருப்பார் என்று திருச்சியில் இருப்பவர்களுக்கே தெரியாதாம். நேருவை எப்போது வேண்டுமானாலும் பார்க்கலாம், இவரை அப்படிப் பார்க்க முடியாது என சொல்கிறார்கள். மக்கள் எல்லாவற்றையும் கூர்ந்து கவனிக்கிறார்கள்.
புத்திசாலித்தனமான அரசாக இருந்திருந்தால், கோவைக்கு ஆண் மேயரை கொண்டு வந்திருக்க வேண்டும். கட்சியை அப்படித்தான் வளர்க்க முடியும். கீழே உள்ள 100 பேரை வைத்து கட்சியை வளர்க்க முடியாது. நேரு நுனிப்புல் மட்டும் மேய்வார். அப்படியே எல்லா தோட்டத்திலும் மேய்ந்து கொண்டே செல்வார். எதையும் முறையாக செய்வதில்லை. கோவைக்கு பெண் மேயராக வந்து கட்சியில் என்ன சாதிக்க முடியும். ஒரு பெண் மேயர் 10 அதிமுக எம்எல்ஏக்களை எப்படி எதிர்கொள்ள முடியும். அவர்களின் கேள்விக்கு எப்படி பதில் சொல்ல முடியும் பணம் மட்டுமே குறிக்கோளாக இருக்கக் கூடாது.” என்று கூறியுள்ளார். இந்த ஆடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
இதுகுறித்து திமுக கோவை மாநகர் மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ. வுமான நா.கார்த்திக் ஏபிபி நாடுவிற்கு விளக்கம் அளித்தார். அப்போது அவர், “அந்த குரல் என்னுடையது அல்ல. நான் அப்படியெல்லாம் யாரிடமும் பேசியதில்லை. அந்த மாதிரி தவறுதலாக யாரிடமும் நான் பேசவில்லை. யாரோ திட்டமிட்டு கட்சி பெயரையும், என்னுடைய பெயரையும் கெடுக்க அந்த மாதிரி செய்துள்ளார்கள். இதுதொடர்பாக சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறோம்” என்றார்.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்