பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை டெல்லி செல்லவுள்ள நிலையில் வானதியும் பயணம்! ஏன் தெரியுமா?
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இன்று டெல்லி செல்ல உள்ள நிலையில், வானதி சீனிவாசனும் டெல்லிக்கு கிளம்பி சென்றார்.
அண்ணா குறித்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை விமர்சனம், அதிமுக - பாஜக கூட்டணி முறிவுக்கு அடித்தளமிட்டது. இதனைத்தொடர்ந்து தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுவதாக அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. அதிமுக தலைவர்கள் பாஜக மீது விமர்சனம் செய்து வந்தாலும், பாஜக தரப்பில் அமைதி காக்கப்பட்டு வருகிறது. கூட்டணி தொடர்பாக பாஜக தேசிய தலைமை முடிவு செய்யும் என அண்ணாமலை உள்ளிட்ட பாஜக தலைவர்கள் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நீலகிரி மாவட்டம் குன்னூரில் என் மண், என் மக்கள் யாத்திரையை இரத்து செய்த அண்ணாமலை கடந்த இரண்டு நாட்களாக குன்னூரில் ஓய்வில் இருந்தார்.
வருகின்ற மூன்றாம் தேதி சென்னையில் பாஜக நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் நடைபெற உள்ள நிலையில், அதற்கு முன்னதாக அண்ணாமலை டெல்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியானது. இன்று மாலை கோவை விமான நிலையத்தில் இருந்து அண்ணாமலை டெல்லிக்கு சென்று கூட்டணி தொடர்பாக விளக்கம் அளிக்க உள்ளார். இதனிடையே பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசனும் டெல்லிக்கு சென்றார். கோவை விமான நிலையத்தில் இருந்து விமானம் மூலம் வானதி சீனிவாசன் இன்று காலை டெல்லிக்கு புறப்பட்டு சென்றார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த வானதி சீனிவாசன், “வழக்கமான பணிகளுக்காகவே டெல்லி செல்கிறேன். இன்று மாலை மத்திய தேர்தல் குழு கூட்டம் நடைபெறுகின்றது. 5 மாநில தேர்தல் நடைபெறுதால் வேட்பாளர் தேர்வு உட்பட பல்வேறு விடயங்கள் குறித்து ஆலோசிப்பதற்காக செல்கின்றோம். நீங்க நினைக்கிற மாதிரி எதுவும் இல்லை.
நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் கூட்டணி முறிவு குறித்து அறிக்கை தாக்கல் செய்ததாக ஊடகங்களில்தான் செய்தி வருகின்றது. அந்த மாதிரி எதுவும் நடந்து இருக்கா என எனக்கு தெரியாது. அது என் வேலையும் அல்ல. மகளிர் அணி தலைவராக, எம்.எல்.ஏவாக எனது பணிகளை செய்து கொண்டு இருக்கின்றேன். பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை டெல்லி வருவது எனக்கு தெரியாது” எனக்கூறிய அவர், கூட்டணி தொடருமா என்ற கேள்விக்கு பதில் அளிக்காமல் சிரித்த படி கிளம்பி சென்றார்.
இதற்கு முன்னதாக கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடந்த தூய்மை பாரத நிகழ்ச்சியில் வானதி சீனிவாசன் கலந்து கொண்டார். இந்நிகழ்வின் போது தூய்மை பணியாளர்களின் கோரிக்கைகளை சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் கேட்டறிந்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசியவர், “ஸ்வச்சதா அபியான் எனும் தூய்மை பாரத இயக்கத்தின் ஒரு அங்கமாக அனைவரும் தூய்மை பணிகளில் ஈடுபட வேண்டும் என பாரத பிரதமர் அவர்கள் வேண்டுகோளுக்கு இணங்க நாடு முழுக்க தூய்மை பணிகளில் கோடிக்கணக்கான நபர்கள் ஈடுபட்டுள்ளனர். பாரதிய ஜனதா கட்சி சார்பில் இன்று காலை ரேஸ்கோர்ஸ் பகுதியில் நாங்கள் தூய்மை பணியில் ஈடுபட்டுள்ளோம். இதுமட்டும் அல்லாமல் தூய்மை பணியாளர்களின் குறைகளையும் கேட்டறிந்தோம். அவர்களின் பிரச்சனைகளை கேட்டுள்ளோம். அதனை தகுந்த முறையில் அரசாங்கத்திடம் எடுத்துச் செல்வதாக வாக்குறுதி அளித்துள்ளேன்.
கோயம்புத்தூர் மாநகராட்சியின் தூய்மை பணிகள் குறித்து தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறேன். தேவையான அளவு குப்பை வண்டிகள் இல்லை. சில இடங்களில் வாரத்திற்கு ஒரு முறை மட்டுமே குப்பை எடுக்கப்படுகிறது. தூய்மை பணியாளர்கள் தேவையான அளவு இல்லை. தூய்மை பணியாளர்கள் பணி நிரந்தரம் இல்லாமல் கிட்டத்தட்ட 15 வருஷமாக குறைவான ஊதியத்தைப் பெற்றுக் கொண்டு பணி செய்து கொண்டிருக்கிறார்கள். நிச்சயம் இவர்களது கோரிக்கைகளை சட்டமன்றத்தில் பேசுவதாக இருக்கிறேன். தேவைப்பட்டால் மாநில முதல்வரையும் சந்தித்து இது குறித்து முறையிடுவேன்.
கோவையைப் பொறுத்தவரை நீர்நிலைப் பாதுகாப்பு மற்றும் தூய்மை பணிகளில் ஆர்வமாக பணியாற்றக்கூடிய ஆயிரக்கணக்கான தன்னார்வ தொண்டர்கள் அதிகமாக இருக்கக்கூடிய மாநகரம் இது. மற்ற மாநகரங்களுக்கு உதாரணமாக தன்னார்வத் தொண்டர்கள் இங்கு பணியாற்றி வருகின்றனர். அவர்கள் ஒவ்வொருவருக்கும் இந்த நேரத்தில் வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். குன்னூர் சாலை விபத்தை பொறுத்தவரை மாநில நெடுஞ்சாலை துறை அங்குள்ள மாவட்ட நிர்வாகத்தோடு சேர்ந்து அடிக்கடி விபத்து நடக்கக்கூடிய இடங்களில் தகுந்த பாதுகாப்புகளை செய்ய வேண்டும். அவர்களுக்கு வழங்கக்கூடிய நஷ்ட ஈடுகள் அதிகரித்து கொடுக்க வேண்டும் என கட்சியின் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்” எனத் தெரிவித்தார்.