'ஜெ.பி.நட்டாவின் பயணம் மிகப்பெரிய எழுச்சியாக அமையும்’ - அண்ணாமலை
"ஜெ.பி.நட்டாவின் தேசிய அளவிலான சுற்றுப்பயணம் கோவையில் இருந்து துவங்குகிறது. அவர் தனது பயணத்தை தமிழகத்தில் இருந்து துவக்க உள்ளார்"
பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டா கோவையில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்க விமானம் மூலம் வருகை தர உள்ளார். கோவை கோட்டைமேடு பகுதியில் உள்ள ஈஸ்வரன் கோவிலில் ஜெ.பி.நட்டா வழிபாடு நடத்த திட்டமிடப்பட்டு இருந்த நிலையில், விமானம் தாமதம் காரணமாக இந்நிகழ்ச்சி இரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய இணையமைச்சர் எல்.முருகன், பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன், பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா உள்ளிட்டோர் கோட்டை ஈஸ்வரன் கோவிலில் வழிபாடு செய்தனர்.
இதனைத் தொடர்ந்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், ”டெல்லி விமான நிலையத்தில் பனி மூட்டம் காரணமாக பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா கோவைக்கு வரும் விமானம் இரண்டரை மணி நேரம் தாமதமாக கிளம்பியுள்ளது. கோவைக்கு வருகை தரும் ஜெ.பி.நட்டா கோவை, நீலகிரி நாடாளுமன்ற தொகுதிகளில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். கோட்டை ஈஸ்வரன் கோவிலில் தமிழக மக்கள் நன்றாக இருக்க வேண்டும் என பிரார்த்தனை செய்தோம்” எனத் தெரிவித்தார்.
பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டாவை வரவேற்க அதிமுக தலைவர்கள் ஏன் வரவில்லை என்ற கேள்விக்கு, ”அதிமுகவை பொருத்தவரை மாவட்ட செயலாளர்கள் கூட்டம் ஏற்கனவே தேதி அறிவித்தபடி நடக்கிறது. ஜெ.பி.நட்டாவின் தேசிய அளவிலான சுற்றுப்பயணம் கோவையில் இருந்து துவங்குகிறது. அவர் தனது பயணத்தை தமிழகத்தில் இருந்து துவக்க உள்ளார். நீலகிரி தொகுதியில் எல்.முருகன் கவனம் செலுத்தி மகக்ளின் பிரச்சனைகளை கேட்டறிந்து வருகிறார். ஜெ.பி.நட்டாவின் பயணம் மிகப்பெரிய எழுச்சியாக அமையும்” எனப் பதிலளித்தார்.
பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா மேட்டுப்பாளையம் பகுதியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் இன்று மாலை பங்கேற்கிறார். மேலும் கட்சி நிர்வாகிகளுடனான சந்திப்பு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் அவர், இரவு ஈஷா யோகா மையத்தில் தங்க உள்ளார். பின்னர் நாளை காலை தனி விமானம் மூலம் புவனேஸ்வர் செல்ல உள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்