தமிழ்நாட்டிற்கு கடந்த ஆண்டை விட இந்தாண்டு பட்ஜெட்டில் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது - அன்புமணி ராமதாஸ்
”நிதி ஆயோக் கூட்டத்தைப் பொறுத்தவரை 48 லட்சம் கோடி பட்ஜெட் போட்டுள்ளனர். அதில் தமிழகத்திற்கு எதுவும் வராது என கூறுகின்றனர். இதுவரை ஒவ்வொரு பட்ஜெட்டிலும் எல்லா மாநிலத்தின் பெயரையும் கூறியுள்ளனரா?”
கோவை விமான நிலையத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்ளுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “கொங்கு மண்டலத்தில் கடந்த 5 ஆண்டு காலமாக இந்த பகுதியில் கிட்டத்தட்ட ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட குறு,சிறு தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளது. அதற்கு முக்கிய காரணமாக மின் கட்டண உயர்வு உள்ளது. தமிழக அரசு கடந்த 23 மாதங்களில் மூன்று முறையும் சேர்த்து 34 விழுக்காடு மின் கட்டண உயர்வை உயர்த்தியுள்ளது. இதனால் அனைத்து மக்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனை அரசு திரும்ப பெற வேண்டும். திமுக தேர்தல் வாக்குறுதியின்படி, ஆட்சிக்கு வந்ததும் மாதம் தோறும் மின் கட்டண கணக்கெடுப்பு என தெரிவித்தனர். அந்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்.
காவிரியில் நீர் வந்து கொண்டிருப்பதால், மேட்டூர் அணை நிரம்பி வருகிறது. இரண்டு நாட்களுக்கு பிறகு அத்தனை நீரும் கடலுக்கு தான் செல்ல இருக்கிறது. இத்தனை ஆண்டு காலம் ஆட்சி செய்தும் இந்த நீரை எப்படி பயன்படுத்த வேண்டும் என இவர்கள் தெரிந்து கொள்ளவில்லை. தர்மபுரி - காவேரி உபரி நீர் திட்டம், மேட்டூர் - சேலம் உபரி நீர் திட்டம், அத்திக்கடவு - அவிநாசி திட்டம், நல்லாறு - பாம்பாறு திட்டம், காவிரி - குண்டாறு திட்டம் ஆகிய திட்டங்களுக்கு 17,000 கோடி நிதி அறிவிக்கப்பட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இப்போது குறுவை சாகுபடி சரியான முறையில் நடைபெறவில்லை. ஆண்டுதோறும் மேட்டூர் அணை ஜூன் 12-ம் தேதி திறக்கப்படும். இந்த ஆண்டு திறக்கப்படவில்லை. இப்போது தண்ணீர் வந்துள்ளது. சம்பாவுக்காவது தயார் நிலையில் இருக்க வேண்டும். கடைகோடிக்கு நீர் போக முடியாத சூழல்தான் தற்போதும் உள்ளது.
மின்கட்டண உயர்விற்கு காரணம்
மின் கட்டண உயர்வுக்கு காரணம் மின்சாரத் துறையில் சரியான நிர்வாகம் இல்லாததும், ஊழலும் தான் காரணம். தமிழ்நாட்டின் மின் தேவை உச்சத்தில் கோடைகாலத்தில் 20 ஆயிரம் மெகா வாட்டாக இருக்கும். அதில் 2000 மெகா வாட் தான் தமிழக அரசு தயாரிக்கிறது. மீதி உள்ள 15,000 மெகாவாட்டில் கிட்டத்தட்ட நான்காயிரம் மெகாவாட் மத்திய அரசிடம் பெறுகிறது. 11000 மெகாவாட் தனியாரிடம் பெறுகிறது. தமிழக அரசு தயாரிக்கும் மின்சாரம் ஒரு யூனிட் 3.40 பைசா என்றால் தனியார் நிறுவனங்களிடமிருந்து 11 முதல் 15 ரூபாய்க்கு வாங்குகிறது. வேண்டுமென்றே தமிழக அரசு புதிய மின் திட்டங்களை தொடங்க தயங்குகிறது. காரணம் தனியாரிடமிருந்து அதிக கமிஷன் கிடைக்கும் என்பது தான். கோவை மாநகரில் 80 விழுக்காடு சாலைகள் பழுதடைந்துள்ளது. ஏன் கோவை மேயர் பதவி விலகினார் என விசாரணை நடத்த வேண்டும்.
அத்திக்கடவு அவினாசி திட்டம் எப்போதுதான் கொண்டுவர போகிறார்கள்? 1500 கோடி ரூபாய்க்கு தான் திட்டம் கொண்டு வரப்பட்டது. அரைகுறையாக செய்து அதை இன்னும் முடிக்கவில்லை. பாண்டியாறு - புன்னம்புழா ஆகிய திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்து பணிகளை தொடங்க வேண்டும். காலநிலை மாற்றம்தான் வருங்காலத்தில் மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது. இதில் முக்கியத்துவம் அளித்து நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். தமிழ்நாட்டில் எங்கு பார்த்தாலும் கஞ்சா அனைத்து இடங்களிலும் கிடைக்கிறது. மதுவை கொடுத்து மூன்று தலைமுறை நாசப்படுத்தியது போல கஞ்சாவை கொடுத்து இந்த தலைமுறையை நாசப்படுத்தி வருகின்றனர். காவல்துறைக்கு தெரியாமல் கஞ்சா கள்ளச்சாராய வியாபாரம் செய்ய முடியாது.
ஜாதிவாரி கணக்கெடுப்பு
தமிழக அரசு ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த உடனடியாக அறிவிக்க வேண்டும். இதற்கு முக்கிய காரணமாக தமிழகத்தில் 69 இட ஒதுக்கீடு ரத்து ஆகக்கூடிய சூழல் வந்துள்ளது. நமக்கு ஒன்பதாவது அட்டவணை பாதுகாப்பு இருந்தாலும், இருந்தும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் சொன்னால் அதற்கு மறுப்பு தெரிவிக்க முடியாது. எனவே தொடர்ந்து இதுகுறித்து தமிழக முதல்வர் மற்றும் அமைச்சர் இடம் கூறியுள்ளோம். ஆனால் அவர்கள் அதிகாரம் இல்லை என கூறுகின்றனர். அனைத்து அதிகாரமும் தமிழக அரசுக்கு இருக்கிறது. அரசியல் காரணமாக இந்த விவகாரத்தில் முதல்வர் தயங்குகிறார். இது சமூகநீதி பிரச்சனையாகும். மத்திய அரசு தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் கூறுகிறார். மத்திய அரசு செய்வது மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆகும். உண்மையிலேயே சமூக நீதி மீது அக்கறை இருந்தால் தமிழகத்தில் எந்தெந்த சமுதாயம் எந்தெந்த நிலையில் உள்ளது என்ன பொருளாதார நிலையில் உள்ளது என்பதை ஆய்வு செய்ய வேண்டும். சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த அதிகாரம் இல்லை எனக் கூறுவது கோழைத்தனம்.
நிதி ஆயோக் கூட்டத்தைப் பொறுத்தவரை 48 லட்சம் கோடி பட்ஜெட் போட்டுள்ளனர். அதில் தமிழகத்திற்கு எதுவும் வராது என கூறுகின்றனர். இதுவரை ஒவ்வொரு பட்ஜெட்டிலும் எல்லா மாநிலத்தின் பெயரையும் கூறியுள்ளனரா? காங்கிரஸ் எல்லா மாநிலத்தின் பெயரையும் பட்ஜெட்டில் சொல்லியுள்ளதா? தமிழ்நாட்டிற்கு கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பட்ஜெட்டில் கூடுதல் திட்டங்கள் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அவை என்னென்னவென்று தெரியவரும். ரயில்வே துறையில் தமிழகத்தில் 6600 கோடி கொடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 6300 கோடி கொடுக்கப்பட்டிருந்தது. கூடுதலாக தான் நிதி வழங்கப்படுகிறது. ரயில்வே துறை போன்று ஒவ்வொரு துறையிலும் கூடுதலாக வழங்கப்பட்டு வருகிறது. பெயர் சொல்லவில்லை என புறக்கணிக்கிறார்கள் என்பது ஏற்றுக்கொள்ள முடியாது.
தமிழகத்தின் உரிமைகளை எந்த விதத்திலும் விட்டுக் கொடுக்க முடியாது. கோயம்புத்தூர் மெட்ரோவிற்கு நிதியை சண்டை போட்டு கட்டாயம் வாங்குவோம். நீட் தேர்வு இருக்கக்கூடாது அது தேவையில்லாத தேர்வு என்பதுதான் எங்களின் நிலைப்பாடு. ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஏற்ப அதன் கொள்கைகளை விட்டு விட வேண்டும். நீட் தேர்வு என்பது கிராமப்புற மாணவர்களுக்கு எதிரானது, சமூக நீதி மற்றும் ஏழை மாணவர்களுக்கு எதிரானது. மேலும் நீட் தேர்வில் இரண்டடுக்கு தேர்வு வரவுள்ளது என பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது பயிற்சி நிலையங்களை இன்னும் அதிகமாகலாம். ஆண்டுதோறும் நீட் பயிற்சி தரும் நிறுவனங்களின் மூலம் இரண்டு லட்சம் கோடி ரூபாய் வியாபாரம் வருகிறது. தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கு கூடுதல் வருமானம் நீட்டினால் கிடைத்துள்ளது. நீட் என்பது பணக்காரர்களுக்காக வந்தது. அரசு பள்ளிக்கூடங்களுக்காக இல்லை” எனத் தெரிவித்தார்.