’கோவை அருகே மலைப்பகுதியில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயை கட்டுப்படுத்தவேண்டும்’ - எஸ்.பி. வேலுமணி கோரிக்கை
"சூலூர் விமானப்படை ஹெலிகாப்டர் உதவியுடன் காட்டுத்தீயை கட்டுப்படுத்தி, அரிய வகை மரங்களையும், வன உயிரினங்களையும் பாதுகாக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்"
கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் மலையடிவார பகுதிகள் அடர் வனப்பகுதிகளை உள்ளடக்கியுள்ளது. இந்த வனப்பகுதிகள் பல்லுயிர் பெருக்கத்தின் புகலிடமாக விளங்குவதோடு, வனவிலங்குகளுக்கு உய்விடமாகவும், அரிய வகை மூலிகைகளுக்கு உறைவிடமாகவும் உள்ளது. குறிப்பாக காட்டு யானை, சிறுத்தை, மான்கள் உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. கோடை காலம் துவங்கியுள்ள நிலையில், வெயிலின் தாக்கம் காரணமாக வனப்பகுதிகளில் வறட்சி நிலவி வருகிறது. செடி, கொடிகள் காய்ந்து இருப்பதால் எளிதில் தீப்பிடிக்க வாய்ப்புள்ளதால், மனித தவறுகள் மற்றும் மரங்கள் ஒன்றோடு ஒன்று உராய்வதன் காரணமாக அடிக்கடி தீ விபத்துகள் ஏற்படுவதும், மரங்கள், செடி, கொடிகள் உள்ளிட்டவை தீயில் எரிந்து நாசமாவதும் வழக்கம்.
கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கடும் வெயில் நிலவி வரும் நிலையில், மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கடும் வறட்சி நிலவுகிறது. இதன் காரணமாக ஆங்காங்கே வனப் பகுதிகளில் தீ பிடித்து வருகிறது. இந்நிலையில் கோவை மாவட்டம் மதுக்கரை வனச்சரகத்திற்குஉட்பட்ட ஆலந்துறை அடுத்த நாதேகவுண்டன்புதூர் பகுதியில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பல ஏக்கர் பரப்பளவிலான காடு எரிந்து நாசமாகியுள்ளது. மரங்கள், மூலிகைகள், செடி, கொடிகள் உள்ளிட்டை தீக்கிரையாகியுள்ளன.
காட்டு தீ குறித்து தகவல் அறிந்து சென்ற மதுக்கரை வனத்துறையினர் தொடர்ந்து எரிந்து வரும் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் நீலகிரி மற்றும் சிறுமுகை வனச்சரகங்களில் இருந்து வனப்பணியாளர்கள் வரவழைக்கப்பட்டு தீயை அனைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வனத்துறையினர் உடன் இணைந்து 40க்கும் மேற்பட்ட தீயணைப்பு குழுவினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். காட்டுத்தீ தொடர்ந்து எரிந்து வரும் நிலையில், கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி ஆலாந்துறை கிராமத்திற்கு உட்பட்ட ரங்கசாமி கோயில் பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது காட்டுத்தீ ஏற்பட்டுள்ள பகுதிகளில் வனத்துறையால் தீயை அணைக்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து, மாவட்ட வன அலுவலர் ஜெயராஜிடம் ஆட்சியர் கிராந்தி குமார் பாடி கேட்டறிந்தார்.
#கோவை மாவட்டம், ஆலாந்துறை நாதகவுண்டன்புதூர் பகுதியில் மதுக்கரை வனச்சரகத்திற்குட்பட்ட மேற்குதொடர்ச்சி மலை வனப்பகுதியில் காட்டுத்தீ ஏற்பட்டு கடந்த 4 நாட்களாக கொழுந்துவிட்டு எரிந்து வருகிறது.
— SP Velumani (@SPVelumanicbe) April 13, 2023
உயரமான மலைப்பகுதி என்பதால் இந்த காட்டுத்தீயை அணைப்பதென்பது எளிதல்ல, (1/2) pic.twitter.com/wmaMFpLUEU
இது குறித்து வனத்துறையினர் கூறுகையில், ”கடந்த இரண்டு நாட்களாக எரிந்து வரும் காட்டு தீ காரணமாக 50 ஹெக்டர் பரப்பளவிலான வனப்பகுதிகள் எரிந்து நாசமாகியுள்ளது. யானை உள்ளிட்ட வனவிலங்குகள் இந்த தீ விபத்தில் சிக்கவில்லை. அதனால் வனவிலங்குகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. தீயை அணைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தீ கட்டுப்படுத்தப்பட்ட பின்னரே முழுமையான பாதிப்பு விபரங்கள் தெரியவரும்.” எனத் தெரிவித்தனர். இந்த விபத்திற்கான காரணம் குறித்தும் வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுதொடர்பாக டிவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, ”ஆலாந்துறை நாதகவுண்டன்புதூர் பகுதியில் மதுக்கரை வனச்சரகத்திற்குட்பட்ட மேற்குதொடர்ச்சி மலை வனப்பகுதியில் காட்டுத்தீ ஏற்பட்டு கடந்த 4 நாட்களாக கொழுந்துவிட்டு எரிந்து வருகிறது. உயரமான மலைப்பகுதி என்பதால் இந்த காட்டுத்தீயை அணைப்பதென்பது எளிதல்ல. வனத்துறையினர் உயிருக்கு பெரும் ஆபத்தை உண்டாக்கவல்ல சவால் நிறைந்த பணியாகும். எனவே, சூலூர் விமானப்படை ஹெலிகாப்டர் உதவியுடன் காட்டுத்தீயை கட்டுப்படுத்தி, அரிய வகை மரங்களையும், வன உயிரினங்களையும் பாதுகாக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசை கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.