Abp Nadu Exclusive: ‘பழ.நெடுமாறன் பாஜகவிற்கு சாதகமான சூழலை உருவாக்க செயல்படுகிறார்’ - கு.ராமகிருட்டிணன்
"பாஜக ஈழத்தில் தமிழர்களிடம் அரசியல் பணியை துவங்கியுள்ள நிலையில், பழ.நெடுமாறன், காசி ஆனந்தன் ஆகியோர் பாஜகவிற்கு சாதகமான சூழலை உருவாக்க வேண்டுமென சொல்கிறார்களோ என்ற உணர்வு ஏற்படுகிறது."
பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என பழ.நெடுமாறன் கூறிய கருத்து, விவாத பொருளாக மாறியுள்ளது. இது தொடர்பாக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் கு.ராமகிருட்டிணன் ஏபிபி நாடுவிற்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “பிரபாகரன் உயிரோடு இருக்கிறார், வருவார் என பழ.நெடுமாறன் சொல்வது உண்மையாக இருக்குமானால் மகிழ்ச்சி. ஆனால் எங்கள் தரப்பில் தொடர்பில் உள்ள புலம் பெயர்ந்த தமிழர்கள் அது சாத்தியமில்லை எனக் கூறுவதால், அதனை நம்ப முடியாத நிலையில் உள்ளது. அதனால் அவரது கருத்து உண்மையாக இருக்க முடியாது என புலம் பெயர்ந்த தமிழர்கள் கூறி வருகிறார்கள்.
பாஜக ஈழத்தில் தமிழர்களிடம் அரசியல் பணியை துவங்கியுள்ள நிலையில், பழ.நெடுமாறன், காசி ஆனந்தன் ஆகியோர் பாஜகவிற்கு சாதகமான சூழலை உருவாக்க வேண்டுமென சொல்கிறார்களோ என்ற உணர்வு ஏற்படுகிறது. பாஜக ஒருபோதும் ஈழத்தமிழர்கள் மீது அக்கறை எடுத்துக் கொள்ளாது. தமிழ்நாட்டு தமிழர்கள் வாக்கு வங்கிக்காக தமிழர்கள், தமிழ் மீது அக்கறை உள்ளவர்கள் போல தொடர்ச்சியாக காட்டிக் கொள்கிறார்கள்.
விடுதலை புலிகளின் தலைவர் தற்போது இருக்க முடியாது என்ற கருத்து புலம் பெயர்ந்த தமிழர்களிடம் நிலவுகிறது. ஈழத்தில் போர் நடந்த போது இந்திய அரசு சிங்களர்களுக்கு ஆதரவு தந்தது. பிரபாகரன் ஆயுதமற்றவராக நின்று படையையும், மக்களையும் இழக்க வேண்டிய நிலையில் இருந்துள்ளார். பாஜக ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக நின்றதில்லை. போரின் போது கொல்லப்பட்ட 40 ஆயிரம் பேரை இந்துக்களாக கூட பாஜக பார்க்கவில்லை. அப்போது எதிர்கட்சியாக இருந்த பாஜக அரசிற்கு நெருக்கடி அளித்து இருந்தால் தமிழர்களை காப்பாற்றி இருக்க முடியும். அப்போது காங்கிரஸ் மீது பழி போட்டு வேடிக்கை தான் பார்த்தார்கள்.
ஈழத்தில் இந்து அமைப்புகளை கட்டமைக்கும் பணிகள் துவங்கியுள்ளது. அங்கு காவி சாயம் பூச ஆயத்தமாகி வருகிறார்கள். அவர்களை ஈழ தமிழர்கள் நம்ப மாட்டார்கள். ஜெனிவாவில் மனித உரிமை ஆணையத்தில் ராஜபக்சேவை போர் குற்றவாளியாக அறிவிக்க வேண்டுமென தீர்மானம் கொண்டு வரும் போது, இந்தியா அத்தீர்மானத்தை ஆதரித்தது இல்லை. தந்திரமாக வெளிநடப்பு செய்கிறார்கள். அதுவும் ராஜபக்சேவிற்கு ஆதரவான நிலை தான். குடியுரிமை திருத்தச் சட்டத்திலும் இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வழங்கவில்லை. இப்படிப்பட்ட பாஜக எப்படி ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக நிற்கும்?
தமிழ்நாட்டு வாக்கு வங்கிக்காக ஈழத்தில் பல்வேறு திட்டங்களை செய்து கொடுத்ததாக நாடகம் நடத்துகிறார்கள். பாஜக திட்டத்திற்கு துணை போக ஒரு நாடகம் நடத்தப்படுகிறாதோ என்ற அச்சம் ஏற்படுகிறது. பழ.நெடுமாறன் திமுக மீது பற்று கொண்டவர் அல்ல. அவர் இப்போது வலிமையாக இல்லாத நிலையில் ஈழத்திற்கு தமிழ்நாட்டில் அடையாளம் தான் தான் என காட்டிக் கொள்ள பாஜகவின் நெருக்கடி காரணமாக இந்த முடிவை எடுத்திருப்பார் என நினைக்கிறேன்” எனத் தெரிவித்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்