A Raja : ஆ.ராசாவை கண்டித்து இந்து முன்னணி அறிவித்த கடையடைப்பு போராட்டம் : அன்னூர் பகுதியில் கடைகள் அடைப்பு
ஆ.ராசாவின் பேச்சை கண்டித்து, அவர் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட நீலகிரி மாவட்டத்தில் இன்று முழு கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என இந்து முன்னணி அமைப்பு அறிவித்திருந்தது.
நீலகிரி நாடாளுமன்ற தொகுதி உறுப்பினராக ஆ.ராசா பதவி வகித்து வருகிறார். இவர் திமுக துணை பொதுச்செயலாளராகவும் இருந்து வருகிறார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆ.ராசா நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசினார். அப்போது இந்துக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததாக, இந்து அமைப்புகளை சேர்ந்தவர்கள் குற்றம்சாட்டினர். மேலும் ஆ.ராசா மீது நடவடிக்கை எடுக்கக் கோரி இந்து முன்னணி, பாஜக உள்ளிட்ட இந்து அமைப்பினர் காவல் நிலையங்களில் புகார் அளித்தனர். மேலும் ஆ.ராசாவின் பேச்சை கண்டித்தும், அவரை எம்.பி. பதவியில் இருந்து நீக்க கோரியும் பா.ஜ.க., இந்து முன்னணி உள்பட பல்வேறு இந்து அமைப்புகள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றன.
இதற்கிடையே ஆ.ராசாவின் பேச்சை கண்டித்து, அவர் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட நீலகிரி மாவட்டத்தில் இன்று முழு கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என இந்து முன்னணி அமைப்பு அறிவித்திருந்தது. இது குறித்து அவ்வமைப்பின் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கூறுகையில், ”ஆ.ராசாவின் இந்து மத விரோத பேச்சு கண்டிக்கத்தக்கது. அவரை கண்டித்து நீலகிரி நாடாளுமன்ற தொகுதி முழுவதும் கடைகளை அடைத்து முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். எங்களின் இந்த போராட்டத்திற்கு நீலகிரி மாவட்ட மக்கள், வியாபாரிகள் என அனைவரும் முழு ஆதரவு கொடுத்துள்ளனர். திட்டமிட்டபடி போராட்டம் நடைபெறும்.
ஆ.ராசாவை எம்பி. பதவியில் இருந்து பதவி நீக்கம் செய்ய கோரி, ஒவ்வொரு இந்து முன்னணியினரும் வருகிற புதன்கிழமையில் இருந்து ஜனாதிபதிக்கு தனித்தனியாக கடிதம் எழுத உள்ளோம். 15 நாட்களுக்குள் அவர் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றால் போராட்டம் தீவிரமடையும். பல்வேறு விதமாக எங்களது போராட்டத்தை நாங்கள் முன்னெடுப்போம்” எனத் தெரிவித்தார்.
நீலகிரி மாவட்டத்தில் இந்து முன்னணி சார்பில் கடையடைப்பு போராட்டம் அறிவித்து உள்ளதை அடுத்து, நீலகிரி மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுதவிர மாவட்டத்தில் உள்ள குஞ்சப்பனை, நாடுகாணி, பர்லியார் உள்பட அனைத்து சோதனை சாவடிகளிலுமே கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வழியாக வரும் வாகனங்களும் தீவிர சோதனைக்கு பின்னரே மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்பட்டு வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் பெரும்பாலான கடைகள் வழக்கம் போல திறந்துள்ளன. சில கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. கடைகளை அடைக்க கூறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
நீலகிரி நாடாளுமன்ற தொகுதிக்குள் கோவை மாவட்டத்தில் உள்ள அன்னூர் பகுதிகள் வருகின்றன. அன்னூர் பகுதியில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. ஒரு சில கடைகள் மட்டுமே திறக்கப்பட்டுள்ளன. இந்து முன்னணியின் கடையடைப்பு போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, கடைகளை வழக்கம் போல திறக்க வேண்டுமென மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியினர் தெரிவித்துள்ளனர். இதேபோல காவல் துறையினரும் கடைகளை திறக்க கூறி வருகின்றனர். இருந்தாலும் அச்சம் காரணமாக வியாபாரிகள் கடைகளை அடைத்துள்ளனர். இதனிடையே கடைகள் அடைக்கப்பட்டுள்ளதா என்பதை பார்வையிட வந்த பாஜகவை சேர்ந்த 17 பேரை அன்னூர் காவல் துறையினர் கைது செய்தனர். அப்பகுதி முழுவதும் பாதுகாப்பிற்காக காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்