![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
கோவை வெள்ளலூரில் அமைக்கப்படும் பட்டாம்பூச்சி பூங்கா.. பல்லுயிர் சூழலை மேம்படுத்த முயற்சி..
101 வகையான பட்டாம்பூச்சிகள் வெள்ளலூர் குளத்திற்கு வருவதை கோயமுத்தூர் பட்டர்பிளை சொசைட்டி பதிவு செய்துள்ளது. இதனால் வெள்ளலூர் குளம் பட்டாம்பூச்சி ஹாட்ஸ்பாட்டாக திகழ்ந்து வருகிறது.
![கோவை வெள்ளலூரில் அமைக்கப்படும் பட்டாம்பூச்சி பூங்கா.. பல்லுயிர் சூழலை மேம்படுத்த முயற்சி.. A butterfly park is being set up in Vellalore district of Coimbatore to improve biodiversity கோவை வெள்ளலூரில் அமைக்கப்படும் பட்டாம்பூச்சி பூங்கா.. பல்லுயிர் சூழலை மேம்படுத்த முயற்சி..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/22/4f44ebbbea2c447e3e7813234711f4b51682152911545188_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
கோவை மாவட்டம் வெள்ளலூர் பகுதியில் 90 ஏக்கர் பரப்பளவில் வெள்ளலூர் குளம் அமைந்துள்ளது. நொய்யல் ஆற்றில் இருந்து இக்குளத்திற்கு வாய்க்கால்கள் வழியாக தண்ணீர் வந்து, இக்குளம் நிறைந்த பின்னர் மீண்டும் நொய்யல் ஆற்றுக்கு தண்ணீர் செல்லும் வகையில் அமைந்துள்ளது. பல ஆண்டுகளாக நீர்வரத்து இல்லாமல் இந்த குளம் வறண்டு காணப்பட்டது. பின்னர் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பின் முயற்சி காரணமாக நீர்வழிப்பாதை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டதை தொடர்ந்து தண்ணீர் வந்து மீண்டும் குளம் நிறைந்தது.
இந்த குளக்கரையில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் குறுங்காடுகள் அமைக்கப்பட்டுள்ளது. மியாவாக்கி என்ற முறையில் பல்வேறு மரங்களை நட்டு அடர் வனம் அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு, அரசுத்துறை உதவியுடன் மற்றும் தனியார் பங்களிப்பு, தன்னார்வலர்களின் கூட்டுமுயற்சியால் பல்லுயிர் சூழல் நிறைந்த பகுதியாக மாற்றம் பெற்றுள்ளது. இதனைத்தொடந்து பறவைகள் மற்றும் பட்டாம்பூச்சிகளின் வரத்து அதிகரித்துள்ளது. வெள்ளலூர் குளத்திற்கு 150 வகையான பறவைகள் வந்து செல்வது பதிவு செய்யப்பட்டுள்ளது. 101 வகையான பட்டாம்பூச்சிகள் வெள்ளலூர் குளத்திற்கு வருவதை கோயமுத்தூர் பட்டர்பிளை சொசைட்டி பதிவு செய்துள்ளது. இதனால் வெள்ளலூர் குளம் பட்டாம்பூச்சி ஹாட்ஸ்பாட்டாக திகழ்ந்து வருகிறது.
இந்த நிலையில் வெள்ளலூர் குளத்தை முன்மாதிரி குளமாக மாற்றும் முயற்சியாக பட்டாம்பூச்சி பூங்கா அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா, உலக புவி தினமான இன்று நடைபெற்றது. மேலும் வெள்ளலூர் குளக்கரையில் The Nature and Butterfly Society மூலம் ஆவணப்படுத்தப்பட்ட பட்டாம்பூச்சிகள் குறித்து Butterflies of Vellalore Wetland என்ற புத்தகம் வெளியிடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, பொள்ளாச்சி மக்களவை தொகுதி உறுப்பினர் சண்முகசுந்தரம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இது குறித்து கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் இரா.மணிகண்டன் கூறுகையில், “கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பின் மூலம் கடந்த 2017 ம் ஆண்டு முதல் நீர் நிலைகள் பாதுகாப்பு தொடர்பான களப்பணியில் ஈடுபட்டு வருகிறோம். வெள்ளலூர் குளம் கடந்த 2017 ம் ஆண்டிற்கு முன்பு 12 ஆண்டுகளாக வறண்டு இருந்தது. வாய்க்கால்கள், தடுப்பணைகளை தூர்வாரி 2018 ம் ஆண்டில் தண்ணீர் கொண்டு வந்தோம். பின்னர் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரங்கள், மூலிகை செடிகள், பூச்செடிகள் உள்ளிட்டவைகளை வைத்து பராமரித்து வருகிறோம். இதன் காரணமாக உயிர் சூழல் அதிகரித்து பறவைகளும், பட்டாம்பூச்சிகளும் அதிகளவில் வந்து செல்கின்றன.
உலக புவி தினமான இன்று தனியார் நிறுவனத்தின் நிதியுதவி உடன் 39 இலட்ச ரூபாய் மதிப்பிலான பட்டாம்பூச்சி பூங்கா அமைக்க அடிக்கல் நாட்டியுள்ளோம். பட்டாம்பூச்சிகளை ஈர்க்கும் வகையில் பல வண்ணச் செடிகள், பூச்செடிகள் உள்ளிட்டவற்றை வைத்து பராமரிக்க உள்ளோம். இதன் மூலம் பட்டாம்பூச்சிகளை ஈர்ப்பதோடு, குழந்தைகளுக்கு பட்டாம்பூச்சி குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளோம். பட்டாம்பூச்சிகளை பார்க்க நடைமேடை அமைக்க உள்ளோம். பட்டாம்பூச்சிகளை பற்றி அறிந்து கொள்ள கண்காட்சி அமைக்க உள்ளோம். மகரந்த சேர்க்கைக்கு பட்டாம்பூச்சிகள் மற்றும் தேனீக்கள் பங்களிப்பு அவசியம். இங்கு பட்டாம்பூச்சிகள் வாழ்வதற்கான சூழல் மற்றும் அவற்றுக்கான உணவுக்கான சூழலை ஏற்படுத்த உள்ளோம். இந்தப்பணிகள் நான்கு, ஐந்து மாதங்களில் முடிவடையும்” எனத் தெரிவித்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)