கோவை மக்களவை தொகுதியில் 64.42 சதவீத வாக்குப்பதிவு : முழு விபரம் இதோ..!
திமுகவை சேர்ந்த கணபதி ராஜ்குமார், அதிமுகவை சேர்ந்த சிங்கை ராமச்சந்திரன், பாஜகவை சேர்ந்த அண்ணாமலை ஆகியோர் முக்கியமான வேட்பாளர்களாக களத்தில் உள்ளனர்.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் கோயம்புத்தூர் பாராளுமன்ற தொகுதி மற்றும் பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதி ஆகியவை உள்ளன. கோயம்புத்தூர் நாடாளுமன்ற தொகுதியில் சூலூர், கவுண்டம்பாளையம், கோயம்புத்தூர் வடக்கு, கோயம்புத்தூர் தெற்கு, சிங்காநல்லூர் மற்றும் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த பல்லடம் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் ஆண் வாக்காளர்கள் 10,41,349 பேர், பெண் வாக்காளர்கள் 10,64,394 பேர், மூன்றாம் பாலினத்தவர் 381 பேர் என மொத்தம் 21,06,124 வாக்காளர்கள் உள்ளனர். 26 சுயேட்சைகள் உட்பட மொத்தம் 37 வேட்பாளர்கள் கோயம்புத்தூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுகின்றனர். அதில் திமுகவை சேர்ந்த கணபதி ராஜ்குமார், அதிமுகவை சேர்ந்த சிங்கை ராமச்சந்திரன், பாஜகவை சேர்ந்த அண்ணாமலை ஆகியோர் முக்கியமான வேட்பாளர்களாக களத்தில் உள்ளனர்.
வாக்குப்பதிவு விபரம்
கோயம்புத்தூர் பாராளுமன்ற தொகுதியில் 582 மையங்களில் 2059 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன. இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு துவங்கியது முதல் பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்து வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர். குறிப்பாக நகர்ப்புறங்களை விட கிராமப்புற வாக்காளர்கள் வாக்களிப்பதில் அதிக ஆர்வம் காட்டினர். இதன் காரணமாக கிராமப்புறங்களில் வாக்குப்பதிவு அதிகரித்து காணப்பட்டது. இன்று மாலையுடன் வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், கோவை மக்களவை தொகுதியில் மொத்தம் 64.42 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. கோவை வடக்கு தொகுதியில் 58.74 சதவீத வாக்குகளும், கோவை தெற்கு தொகுதியில் 59.25 சதவீத வாக்குகளும், சிங்காநல்லூர் தொகுதியில் 59.33 சதவீத வாக்குகளும், கவுண்டம்பாளையம் தொகுதியில் 66.42 சதவீத வாக்குகளும், பல்லடம் தொகுதியில் 67.42 சதவீத வாக்குகளும், சூலூர் தொகுதியில் 75.33 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன. வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு பாதுகாப்பாக, கோவை தடாகம் சாலையில் உள்ள அரசினர் பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டன.
பொள்ளாச்சி தொகுதி
பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதியில் தொண்டாமுத்தூர், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, வால்பாறை (தனி) மற்றும் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த உடுமலைப்பேட்டை மற்றும் மடத்துக்குளம் ஆகிய சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இங்கு ஆண் வாக்காளர்கள் 7,71,53 பேர், பெண் வாக்காளர்கள் 8,21,370 பேர், மூன்றாம் பாலினத்தவர் 295 பேர் என மொத்தம் 15,93,168 வாக்காளர்கள் உள்ளனர். பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதியில் ஒன்பது சுயேட்சை வேட்பாளர்கள் உட்பட மொத்தம் 15 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அதில் திமுகவை சேர்ந்த ஈஸ்வரசாமி, அதிமுகவை சேர்ந்த கார்த்திகேயன், பாஜகவை சேர்ந்த வசந்தராஜன் ஆகியோர் முக்கியமான வேட்பாளர்களாக களத்தில் உள்ளனர்.
வாக்குப்பதிவு விபரம்
பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதியில் 178 மையங்களில் 1715 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டது. பொள்ளாச்சி தொகுதியில் மொத்தம் 71.07 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. தொண்டாமுத்தூர் தொகுதியில் 67.97 சதவீத வாக்குகளும், கிணத்துக்கடவு தொகுதியில் 68.17 சதவீத வாக்குகளும், வால்பாறை தொகுதியில் 70.58 சதவீத வாக்குகளும், உடுமலை தொகுதியில் 72.36 சதவீத வாக்குகளும், மடத்துக்குளம் தொகுதியில் 73.03 சதவீத வாக்குகளும், பொள்ளாச்சி தொகுதியில் 74.28 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன. க்குப்பதிவு நிறைவடைந்த நிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு பாதுகாப்பாக, பொள்ளாச்சி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டன. வருகின்ற ஜூன் 4 ம் தேதியன்று வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். அப்போது தான் கோவை, பொள்ளாச்சி தொகுதிகளை கைப்பற்றப்போகும் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் யார் என்பது தெரியவரும்.