சென்னை : குடிநீர் ஆதாரமான பூண்டி ஏரியில் நீர் திறப்பு 2,000 கன அடியாக அதிகரிப்பு..
கொசஸ்தலை ஆற்றில் வெளியேற்றப்படும் நீரின் அளவு 1,000 கன அடியாக இருந்து 2,000 கன அடியாக உயர்ந்துள்ளது
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை காரணமாகவும், குறைந்த காற்றழுத்த பகுதி காரணமாகவும் கனமழை பெய்து வருகிறது. பல மாவட்டங்களில் நேற்றிரவு கனமழை கொட்டி தீர்த்தது. அதிகாலையும் மழை நீடிப்பதால், 18 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆரஞ்ச் அலர்ட்
குமரி கடல் பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு நோக்கி அடுத்த 24 மணி நேரத்தில் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிக்கு நகரக்கூடும். இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியில் இருந்து தெற்கு ஆந்திரா வரை நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிக கனமழை பெய்யும். இந்த மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், விழுப்புரம், கடலூர், வேலூர், ராணிப்பேட்டை, மதுரை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி,டெல்டா மாவட்டங்கள், புதுவை, காரைக்காலில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. ஏனைய மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் இன்றும் பரவலாக சாரல் மழை பெய்தது. திருவள்ளூர், அம்பத்தூர், ஆவடி, ஊத்துக்கோட்டை, பொன்னேரி, கும்மிடிப்பூண்டி உள்ளிஒரு சில இடங்களில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. தீபாவளி பண்டிகை நேரத்தில் மழை பெய்ததால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர். மழை நீரால் ஏரி மற்றும் நீர்த்தேக்கம் ஆகியவை நிறைந்து, உபரி நீர் வெளியேற்றத்தால் ஆரணி, கொசஸ்தலை ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. ஆந்திர மாநிலம், கிருஷ்ணாபுரம் அம்மாபள்ளி அணையிலிருந்து 1000 கன அடி நீர், நகரி ஆறு வழியாக கடந்த 01.11.2021 இரவு 9.30 மணி முதல் 02.11.2021 காலை 3.30 மணி வரை திறக்கப்பட்டது.
திறக்கப்பட்ட நீரானது நேற்று நள்ளிரவு பூண்டி நீர்த்தேக்கம் வந்தடைந்தது. இதனால் வருவாய்த் துறை, காவல்துறை மற்றும் பொது பணித்துறை அலுவலர்கள் என சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு நீர்வரத்து குறித்து தொடர்ந்து கண்காணித்து வந்தனர். மேலும், நகரி ஆற்றில் பள்ளிப்பட்டு , பாலத்திலிருந்து பூண்டி நீர்த்தேக்கம் வரை கரையோரம் உள்ள கிராம மக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்தப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர். ஆல்பி ஜான் வர்கீஸ்,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
இந்நிலையில் இன்று காலை முதல் சென்னையின் பிரதான எதிரியாக இருக்கும் பூண்டி ஏரியில், இருந்து சுமார் 2,000 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. கொசஸ்தலை ஆற்றில் வெளியேற்றப்படும் நீரின் அளவு 1,000 கன அடியாக இருந்து 2,000 கன அடியாக உயர்ந்துள்ளது.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்.