2026 தேர்தலில் கூட்டணிகள் சிக்கல்.. விஜய் வந்தால் கூட... வெளிப்படையாக பேசிய திருமா
மது ஒழிப்பு மாநாடு போராட்டத்தை முன்னெடுப்பதால் எந்த விளைவுகள் நேர்ந்தாலும் எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம் என விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் சூளுரை
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அருகே தனியார் திருமண மண்டபத்தில் விடுதலை சிறுத்தை கட்சியின் செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய நான்கு மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகளுடன் மண்டல அளவிலான செயற்குழு கூட்டம் நடைபெற்றது. அக்டோபர் 2-ஆம் தேதி கள்ளக்குறிச்சியில் நடைபெற உள்ள மது மற்றும் போதை பொருள் ஒழிப்பு மாநாடு நடைபெற உள்ள நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தலைமையில் செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
சீன் போடுவதாக கூறுகிறார்கள்
இதில் அக்கட்சியைச் சேர்ந்த ஆண்கள் மற்றும் பெண்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக உயிரிழந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரிக்கு விசிக நிர்வாகிகள் மவுன அஞ்சலி மற்றும் வீரவணக்கம் செலுத்தினர்.
தொடர்ந்து மேடையில் பேசிய திருமாவளவன் : கட்டாயம் நாம் மதுக்கடைகளை மூட முடியும் என்ற நம்பிக்கையோட இருக்க வேண்டும், வரும் தேர்தல் காழ்புணர்ச்சிக்காக நாம் இதை செய்கின்றோம் என்று சீன் போடுவதாக சிலர் கூறுகிறார்கள். அவர்கள் என்ன சொன்னாலும் நமக்கு தேவை இல்லை, மது போதையால் பாதிக்கப்படும் மக்களை யார் காப்பாற்ற போகிறார்கள் ? நாம் தான் இந்த போராட்டத்தை முன்னெடுக்கின்றோம்.
ஒருபோதும் விலக மாட்டோம்
இந்த போராட்டத்தை நடத்துவதால் தேர்தல் களத்தில் நமக்கு பாதிப்பு ஏற்படும். கூட்டணியில் சிக்கல் ஏற்படும் 2026 தேர்தலில் நமக்கு பின்னடைவு ஏற்படும், என்ற நிலை ஏற்பட்டால் கூட இந்த போராட்டம் நடத்துவதின் நோக்கத்தில் இருந்து ஒருபோதும் விலக கூடாது. திமுக -அதிமுக கட்சிக்கு அடுத்தபடியாக தமிழகத்தில் மிகபெரிய கட்சியாக விசிக உள்ளது. இந்த மது ஒழிப்பு போராட்டத்தை நடத்துவதின் மூலம் நமக்கு எந்த விளைவுகள் வந்தாலும் அந்த விளைவுகளை எதிர்கொள்வதற்க்கு தயாராக உள்ளோம்.
ஒவ்வொரு கட்சியினரும் மது விலக்குக்கு உடன்பாடு இருக்கிறது. இதிலென்ன சிக்கல் உள்ளது, தமிழ்நாட்டில் மது கடைகளை ஒழிக்க என கேள்வி எழுப்பினார். மது ஒழிக்க வேண்டுமென நாம் முழக்கம் எழுப்பினால், திமுகவினரை நேரடியாக எதிர்க்காமல் தேசிய கொள்கை என பூசி முழுகுவதாக ஒருசிலர் தெரிவிக்கின்றனர். ஆனால் நாங்கள் சொல்வதை புரிந்து கொள்வதற்க்கு அவர்களிடம் சக்தி தேவை. இது போன்ற போராட்டங்களை நாம் முன்னெடுத்து நடத்துவதால் , திமுக உடனான விசிக கூட்டணியை பலவினபடுத்த வேண்டுமென நினைக்கிறார்கள்.
எத்தனை விஜய் வந்தாலும்
தமிழ்நாட்டு அரசியலில் கூட்டணியில் இருந்து கொண்டே மக்கள் பிரச்சனைகளை துணிந்து பேசுகின்ற துணிச்சல் உள்ள இயக்கம் விசிக மட்டும் தான். தமிழ்நாட்டுக்கு நாம் விடுக்கின்ற வேண்டுகோள், படிபடியாவது அரசு மதுப்பான கடைகளை மூடி வரலாற்றில் நல்ல பெயரை எடுத்து நிலையான வெற்றியை பெறுங்கள் நாங்கள் வாழ்த்துகிறோம். திமுக மட்டும் வரும் தேர்தலுக்கு முன்பாக அரசு மதுபான கடைகளை மூடிவிட்டால் , எத்தனை விஜய் வந்தாலும் திமுக தான் வெற்றி பெறும். திமுக வெற்றி பெற்றால் இதில் விசிகவுக்கு என்ன லாபம் என கேள்வியும் உண்டு, அதில் மதுபான கடைகளை மூடிவிட்டால் எங்களுக்கு வெற்றிதான். மதுபான கடைகளை விடுதலை சிறுத்தைகள் கட்சி போராட்டதால், அரசு மூடியது என்றால் அடுத்தடுத்து வரும் தேர்தலில் விடுதலை சிறுத்தைகளை தான் மக்கள் வரவேற்ப்பாளர்கள் அதுதான் நமக்கு கிடைத்த வெற்றி என பேசினர்.