VCK : விரைவில் நாடாளுமன்றத் தேர்தல்: திமுகவிடம் எத்தனை சீட் கேட்கலாம்? - விசிக கூட்டத்தில் முக்கிய முடிவு?
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தலைமையில் இன்று சென்னையில் உயர்நிலைக் குழு கூட்டம் நடைபெற உள்ளது.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தலைமையில் இன்று சென்னையில் உயர்நிலைக் குழு கூட்டம் நடைபெற உள்ளது.
இது தொடர்பாக கட்சி சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், “ விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் உயர் நிலைக் குழு கூட்டம், கட்சித் தலைவர் திருமாவளவன் தலைமையில் நவம்பர் 20ம் தேதி ( இன்று ) காலை 10 மணிக்கு சென்னை அசோக் நகரில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைமையகத்தில் நடைபெறுகிறது.
இக்கூட்டத்தில் பொதுச் செயலாளர்கள், முதன்மைச் செயலாளர்கள், செய்தித் தொடர்பாளர், தலைமை நிலையச் செயலாளர்கள், துணைப் பொதுச் செயலாளர்கள், அமைப்புச் செயலாளர்கள், கருத்தியல் பரப்புச் செயலாளர் உள்ளிட்டோர் பங்கேற்பர்.” என தெரிவிக்கப்பட்டது.
இந்த ஆலோசனை கூட்டத்திற்கு காரணம் என்ன..?
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு பல்வேறு கட்சிகள்- கூட்டணி, தொகுதி பங்கீடு, பிரச்சாரம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றன. அந்த வகையில், திருமாவளவன் தலைமையிலான விடுதலை சிறுத்தைகள் கட்சியும் இன்று திமுக உடனான கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்து தங்களது உயர்நிலைக் குழு கூட்டத்தில் பேசி முடிவு எடுப்பார்கள் என்று தெரிகிறது.
முன்னதாக, கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலின்போது திமுக தலைமையிலான கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு இரண்டு தொகுதிகள் மட்டுமே வழங்கப்பட்டது. அதில், சிதம்பரம் தொகுதியில் பானை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். விழுப்புரம் தொகுதியில் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் விசிக ரவிக்குமார் போட்டியிட்டு எம்பி ஆனார்.
அந்தவகையில் அடுத்த ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் கூடுதலான தொகுதிகளை விசிக கேட்டு வாங்கும் என்று எதிர்பார்க்கலாம். அதற்காகவே இன்று உயர்நிலைக் குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்படலாம். மேலும், வருகின்ற டிசம்பர் 23ம் தேதி திருச்சியில் நடைபெறும் ’வெல்வோம் ஜனநாயகம்’ பேரணி குறித்து கலந்தாலோசிக்கப்பட இருப்பதாகவும் தெரிகிறது.
வெல்வோம் ஜனநாயகம்:
வருகின்ற டிசம்பர் 23ம் தேதி திருச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைமையில் ‘வெல்வோம் ஜனநாயகம்’ என்ற பெயரில் மெகா பேரணி நடைபெறவுள்ளது. இதை முன்னிட்டு, அக்கட்சியின் தலைவரும், சிதம்பரம் எம்.பி.யுமான திருமாவளவன் செயற்குழு கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தார்.
இந்தப் பேரணியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) பொதுச் செயலாளர் தீபங்கர் பட்டாச்சார்யா மற்றும் பிற மாநிலத் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.
இந்த பேரணியில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கலந்து கொள்வார் என்றும், பேரணிக்கு குறைந்தது 2 லட்சம் பேராவது திரள்வார்கள் என்றும் கூறப்படுகிறது.