Udhayanidhi: மீண்டும் இளைஞர் அணி செயலாளரானார் உதயநிதி..! மகளிர் அணி புதிய செயலாளர் யார்..?
தி.மு.க.வின் இளைஞர் அணி செயலாளராக மீண்டும் உதயநிதி ஸ்டாலின் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தி.மு.க.வின் புதிய மாநில இளைஞர் அணிச் செயலாளர், துணைச் செயலாளர்கள் மற்றும் மாநில மகளிர் அணி - மகளிர் தொண்டர் அணி செயலாளர் மற்றும் இணை, துணைச் செயலாளர்கள், பிரச்சாரக்குழு செயலாளர்கள் மற்றும் மகளிர் அணி சமூக வலைதள பொறுப்பாளர்கள் ஆகிய பொறுப்புக்கான உறுப்பினர்களை தி.மு.க. நியமித்துள்ளது.
புதிய அறிவிப்பின்படி, தி.மு.க. இளைஞரணி செயலாளராக மீண்டும் உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்டுள்ளார்.இளைஞர் அணி துணைச் செயலாளர்களாக எஸ். ஜோயல், ந.ரகுபதி என்கிற இன்பா, நா.இளையராஜா, ப.அப்துல் மாலிக், கே.இ.பிரகாஷ், க.பிரபு, பி.எஸ்.சீனிவாசன், கு.பி.ராஜா, சி.ஆனந்தகுமார் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தி.மு.க.வின் மகளிர் அணி செயலாளராக இருந்த கனிமொழி, தற்போது துணை பொதுச்செயலாளராக பதவியேற்று இருக்கும் நிலையில் தற்போது புதிய மகளிர் அணி செயலாளராக விஜயா தாயன்பன் நியமிக்கப்பட்டுள்ளார்.
திமுக இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் கடந்த 2019ஆம் ஆண்டு ஜூலை மாதம் நியமனம் செய்யப்பட்டார். சட்டசபைத் தேர்தல், உள்ளாட்சித் தேர்தல்களில் பிரச்சாரம் மேற்கொண்டார் உதயநிதி ஸ்டாலின். சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏவாக பதவி வகிக்கிறார்.
2021ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணிக் கட்சிகள் வெற்றி பெற்றன. இதையடுத்து மே 7ஆம் தேதி மு.க.ஸ்டாலின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். அப்போது உதயநிதி ஸ்டாலின் சட்டப்பேரவை உறுப்பினராகப் பொறுப்பேற்றார்.
அமைச்சராகும் உதயநிதி?
மே 7ஆம் தேதி திமுக அரசு பதவியேற்று ஓராண்டு ஆன நிலையில், அதே தினத்தில் உதயநிதி ஸ்டாலின் இளைஞர் நலத்துறை மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்பார் என்று செய்திகள் வெளியானது.
அதிகாரமிக்க, பொது மக்களுடன் அன்றாடம் தொடர்பில் உள்ள துறைகளை விடுத்து, எதற்காக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை என்று கேள்வி எழலாம். தமிழ்நாடு முழுவதும் உள்ள மாணவர்கள் மற்றும் இளைஞர்களைத் தொடர்புகொள்ளும் விதத்தில் இந்தத் துறை வழங்கப்பட உள்ளதாகக் கூறப்பட்டது. அவர் பொறுப்பேற்ற பிறகு துறைப் பொறுப்பும் அதிகாரங்களும் முழுவீச்சில் மாற்றி அமைக்கப்பட உள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டது.
திரைப் பயணம்
இவை அனைத்துக்கும் நடுவில், மகிழ் திருமேனி இயக்கத்தில் பெயரிடப்படாத படம், மாரி செல்வராஜின் இயக்கத்தில் மாமன்னன் ஆகிய படங்களில் நடிக்க உதய் ஒப்பந்தமாகி உள்ளார். அதற்குப் பிறகு மனைவி கிருத்திகாவின் இயக்கத்தில் உதயநிதியின் கடைசிப் படம் இருக்கும் என்றும் தகவல் வந்துள்ளது. இதற்குப் பிறகே உதயநிதிக்கு அமைச்சர் பதவிக்கான அச்சாரம் இடப்படும் என்றும் கூறப்படுகிறது.
இதேபோல் மகளிர் அணி துணை செயலாளர்கள், மகளிர் தொண்டர் அணி செயலாளர், மகளிர் தொண்டர் அணி இணைச் செயலாளர் , மகளிர் தொண்டர் அணி துணைச் செயலாளர்கள், மகளிர் அணி பிரச்சாரக் குழு செயலாளர்கள், மகளிர் அணி சமூக வலைதள பொறுப்பாளர்கள், மகளிர் அணி ஆலோசனைக் குழு ஆகிய பொறுப்புகளிலும் நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.