இன்று நடந்தது பொதுக் குழு அல்ல , அது கேலிக் கூத்து - வழக்கறிஞர் பாலு அதிரடி
சேலத்தில் இன்று நடந்தது பொதுக்குழு அல்ல அது கேலிக் கூத்து. அந்தத் தீர்மானங்கள் எதுவும் பாட்டாளி மக்கள் கட்சியை கட்டுப்படுத்தாது - வழக்கறிஞர் பாலு

பாமக பொதுக்குழு கூட்டம்
சேலத்தில் இன்று டாக்டர் ராமதாஸ் தரப்பு பா.ம.க வின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்ற நிலையில் அதில் பாமக தலைவர் அன்புமணி மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டது.
பல்வேறு விமர்சனங்களுடன் தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டு இருந்த நிலையில், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாமக வழக்கறிஞர் பாலு சென்னை தியாகராய நகரில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர் ;
அனைத்துக் கட்சிகளிலும் உச்சபட்ச அதிகாரம் கொண்டது பொது குழு அந்த பொதுக் குழுவில் சில முடிவுகள் எடுப்பதற்கு முன்பாக , செயல் குழுவில் உயர்மட்ட தலைவர்கள் விவாதித்து செயற் குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகளை பொதுக் குழுவிற்கு கொண்டு வந்து பொதுக் கூட்டத்தில் விவாதித்து அதன் பிறகு தான் ஒப்புதல் கொடுப்பார்கள். இதுதான் அனைத்து கட்சிகளுக்குமான நடைமுறை.
இன்று சேலத்தில் டாக்டர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்றது பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக் குழுவே அல்ல. இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட எந்த முடிவும் தீர்மானமும் பாட்டாளி மக்கள் கட்சியை கட்டுப்படுத்தாது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
அனைவருக்கும் பசி ;
நிறுவனரே பேசாமல் நடைபெற்ற கூட்டம் எப்படி பொதுக் குழு கூட்டமாக இருக்க முடியும். அனைவருக்கும் பசிக்கிறது அதனால் 27 தீர்மானத்தையும் நிறைவேற்றி விட்டதாக அறிவித்து விட்டார்கள்.
தீர்மானங்களை குப்பை தொட்டியில் தான் போட வேண்டும்
இந்த கூட்டத்தின் ஒரு சிடி எங்களுக்கு போதும். ஒரு காலத்திலும் இவர்களால் பாட்டாளி மக்கள் கட்சியின் பொறுப்புகளுக்கு வரவே முடியாது. இவர்கள் நடத்தும் ஒவ்வொரு நிகழ்வும் எங்கள் தரப்பு வாதத்திற்கு வலு சேர்க்கக் கூடிய ஆதாரமாக மாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
ஏற்கனவே டாக்டர் ராமதாஸ் தரப்பை குடிமையியல் நீதிமன்றத்தை நாடும் படி டெல்லி உயர்நீதிமன்றம் அறிவுறுத்தி இருந்தது. ஆனால் அவர்கள் இன்னும் செல்லவில்லை. சேலத்தில் இன்று அவர்கள் நிறைவேற்றி இருக்கக்கூடிய தீர்மானங்களை குப்பைத் தொட்டியில் தான் போட வேண்டும்.
பாமகவின் பொதுக் குழு என்று சொல்கிறார்கள் பிறகு அதில் எப்படி பசுமைத் தாயகம் என்ற அமைப்பின் தலைவரை மாற்ற முடியும். இன்று நடந்தது பொதுக் குழுவா அல்லது பசுமைத் தாயகம் அமைப்பின் கூட்டமா ?
பசுமை தாயகம் அமைப்பு கூடி தான் மாற்ற முடியும்
பசுமைத் தாயகம் என்பது ஐநா மனித உரிமை ஆணையத்தின் அங்கீகாரம் பெற்றது. சுற்றுச் சூழல் நீர் வளம் சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஐநா மன்றத்தில் எதிரொலிக்க கூடிய ஒரு அமைப்பாக பசுமைத் தாயகம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
அதன் தலைவராக முனைவர் சௌமியா அன்புமணி செயல்பட்டு கொண்டிருக்கும் நிலையில் இன்று சேலத்தில் நடந்த கூட்டத்தில் தலைவரை மாற்றி விட்டதாகவும் அதன் தலைவராக வேறு ஒருவரை நியமிப்பதாகவும் எப்படி சொல்ல முடியும். பசுமைத்தாயகம் அமைப்பின் தலைவரை மாற்ற வேண்டுமானால் பசுமைத் தாயகம் அமைப்பு கூடி தான் மாற்ற முடியும்.
அடிப்படை அறிவு கூட ஜி.கே மணிக்கு இல்லை
ஒரு செயற் குழுவையும் பொதுக் குழுவையும் எப்படி கூட்ட வேண்டும் என்ற அடிப்படை அறிவு கூட ஜி.கே மணிக்கு இல்லை. இன்று நடைபெற்றது பொதுக் குழுவே அல்ல. அது ஒரு கேலிக் கூத்து.
நெருப்பு மாதிரி இருந்தவர் டாக்டர் ராமதாஸ். சிங்கம் மாதிரி கர்ஜித்தவரை இன்று பொம்மை போல மாற்றி விட்டார்கள். இன்றைக்கு அவரை ஒரு கூட்டத்தில் அமர வைத்து விட்டு அது பொதுக் குழுவா செயற் குழுவா என்று கூட தெரியவில்லை எத்தனை தீர்மானங்களை இன்று நிறைவேற்ற போகிறோம் என்று கேட்கிறார்.
ஸ்ரீகாந்தி என்றைக்கு கட்சிக்கு வந்தார் மேடையில் வரிசையாக அவர்களது மகன்களை அமர வைத்துக் கொண்டிருக்கிறார். அன்புமணி அவரது தம்பியாக இருந்தால் வீட்டில் அவர் எப்படி வேண்டுமானாலும் பேசிக் கொள்ளலாம். ஆனால் பொது வெளியில் வைத்து அவரை ஒருமையில் பேசுவதை நாங்கள் ஏற்றுக் கள்ள மாட்டோம்.
அவர் எங்கள் கட்சியின் தலைவர். டாக்டர் அன்புமணி 1998 இல் இருந்து பசுமைத் தாயகம் அமைப்பில் செயல்பட்டு கொண்டிருக்கிறார். பாமகவிற்காக 27 ஆண்டு கடுமையாக உழைத்திருக்கிறார் ஸ்ரீகாந்தி எப்போது பாட்டாளி மக்கள் கட்சிக்கு வந்தார் ? இதற்கு முன்பு ஸ்ரீ காந்தி எங்கே இருந்தார் ?
ஆற்றல் காரணமாக தான் எம்.பி பதவி வந்தது
டாக்டர் ராமதாஸ் என்னுடைய வாரிசுகள் கட்சிக்கு வர மட்டார்கள் என்று சத்தியம் செய்த காரணத்தால் அன்புமணிக்கு உரிய பதவி வராமல் கால தாமதமானது. அவருடைய அனுபவம் மற்றும் ஆற்றலின் காரணமாகத் தான் அவருக்கு எம்.பி பதவியும் அமைச்சர் பதவியும் வந்து சேர்ந்தது.
இன்று கூட்டணியை அறிவிக்க போகிறோம் என்று சொல்லி இருந்தார்களே அதன்படி ஏன் கூட்டணியை அறிவிக்கவில்லை ?
டாக்டர் ராமதாசை இதற்கு முன்பு ஜி.கே மணி இயக்கிக் கொண்டு இருந்தார் இப்போது ஸ்ரீகாந்தியும் சேர்ந்து கொண்டிருக்கிறார். யாரோ எழுதிக் கொடுப்பதை டாக்டர் ராமதாஸ் படித்துக் கொண்டிருக்கிறார்.
அன்புமணியை ஒருமையில் பேசும் ஜி.கே மணி
இதற்கு முன்பு வார்த்தைக்கு வார்த்தை சென்னை ஐயா சின்னையா என்று பேசிக் கொண்டு இருந்த ஜி.கே மணி இப்போதெல்லாம் வார்த்தைக்கு வார்த்தை அன்புமணி அன்புமணி என்று ஒருமையில் பேசுகிறார்.
டாக்டர் ராமதாஸ் அன்புமணியின் மீது எவ்வளவு விமர்சனங்கள் முன் வைத்தும் அன்புமணி அமைதியாக கடந்து செல்கிறார். அன்புமணி பொறுமையாக கடந்து செல்கிறார் என்பது அனைவருக்கும் தெரியும். உலகிலேயே அவரைப் போல சிறந்த மகன் எந்த தந்தைக்கும் அமைய மாட்டார்.
ஜி.கே மணியை பாமகவிலிருந்து நீக்கி விட்டோம். பா.ம.க வுக்கும் அவருக்கும் சம்பந்தமில்லை அவரை கட்சியை விட்டு நீக்கியதற்கு தொண்டர்கள் தமிழ்நாடு முழுவதும் பட்டாசு வெடித்து கொண்டாடி விட்டார்கள்.
பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவர் சௌமியா அன்புமணியை மாற்றி விட்டதாக சேலத்தில் இன்று அறிவித்திருப்பது செல்லாது. பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவராக முனைவர் சௌமியா அன்புமணி தொடர்கிறார்.





















