ரூ.75 ஆயிரம் சம்பளத்துடன் முதமைச்சரின் ஃபெல்லோஷிப் பணி: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்
ரூ.75 ஆயிரம் சம்பளத்துடன் தமிழ்நாடு முதலமைச்சரின் ஃபெல்லோஷிப் திட்டத்தில் இணைந்து 2 ஆண்டுகளுக்குப் பணியாற்ற இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.
ரூ.75 ஆயிரம் சம்பளத்துடன் தமிழ்நாடு முதலமைச்சரின் ஃபெல்லோஷிப் திட்டத்தில் இணைந்து 2 ஆண்டுகளுக்குப் பணியாற்ற இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.
தமிழகத்தில் உள்ள நீர் வளங்கள், விவசாய உற்பத்தியை பெருக்குதல் மற்றும் சந்தைப்படுத்தல் இணைப்புகளை உருவாக்குதல், அனைவருக்கும் வீடு வழங்குதல், கல்வித் தரத்தை மேம்படுத்துதல், சுகாதாரக் குறிகாட்டிகளை உயர்த்துதல், சமூக உள்ளடக்கத்தை அடைதல், உள்கட்டமைப்பை மேம்படுத்துதல் மற்றும் தொழில்துறை வளர்ச்சியை எளிதாக்குதல், திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டை வழங்குதல், நிறுவன கடன் வசதி, பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தைப் பாதுகாத்தல், சுற்றுச்சூழல் சமநிலையை அடைதல், தரவு நிர்வாகத்தை மேம்படுத்துதல் ஆகிய 12 பகுதிகளில் ஆராய்ச்சிகளை மேற்கொள்ளவும், கண்காணிக்கவும் அரசின் மூலம் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி 2022 முதல் 2024 ஆம் ஆண்டு வரையிலான தமிழ்நாடு முதலமைச்சரின் ஃபெல்லோஷிப் திட்டம் (TNCMFP) செயல்படுத்தப்பட உள்ளது. இதற்காகத் தகுதி வாய்ந்தவர்கள் இன்று (மே 25) முதல் விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்பிக்க ஜூன் 10ஆம் தேதி கடைசித் தேதி ஆகும்.
இந்தத் திட்டத்துக்காக ரூ.5.66 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் பல்வேறு துறைகள் மற்றும் திட்டங்களைத் தொகுத்து செயல்படுத்துதல், கண்காணித்தல் மற்றும் மதிப்பீடு செய்தல் ஆகியவற்றை ஒருங்கிணைத்து செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
கல்வித் தகுதி
* தொழில்முறைப் படிப்புகளான பொறியியல், மருத்துவம், சட்டம், வேளாண்மை, கால்நடை மருத்துவ அறிவியல் போன்ற இளங்கலைப்படிப்புகளில் ஏதேனும் ஒன்றில், முதல்வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
* ஏதேனும் ஒரு பல்கலைக்கழகத்தில் இருந்து கலை அல்லது அறிவியல் படிப்புகளில் முதல் வகுப்பில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
* முனைவர் பட்டம் பெற்ற விண்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
* பணி அனுபவம் கூடுதல் நன்மையாக இருக்கும். பணிபுரியும் அளவிற்கான தமிழ்மொழி அறிவைக் கட்டாயம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுத் தகுதி
இந்த பெல்லோஷிப்பிற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் மே 25ஆம் தேதியின்படி 22-30 வயதுக்குள் இருக்க வேண்டும். SC/ST பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்ச வயது வரம்பு 35 ஆண்டுகள்ஆகும் BC/MBC பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு, அதிகபட்ச வயது 33 ஆண்டுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்த பணியிடங்களுக்கான தேர்வு முறையில், கல்வி நிறுவனங்களின் சேர்க்கையில் வழங்கப்படும் இட ஒதுக்கீட்டுக் கொள்கை பொருந்தும்.
தேர்வு செய்யும் முறை
* முதல் நிலை (கணினி வழியிலான தேர்வு),
* விரிவான எழுத்துத் தேர்வு
* நேர்முகத் தேர்வு
ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
சம்பளம்
பணியாளர்களுக்கு தலா ரூ.65,000 மாதாந்திர ஊதியம் மற்றும் அவர்களின் தற்செயலான செலவுகளைச் சமாளிக்க தலா ரூ10,000 கூடுதல் ஊக்கத்தொகையாக வழங்கப்படும். எனவே மொத்தம் ரூபாய் 75 ஆயிரம் சம்பளமாக வழங்கப்படும்.
ஃபெல்லோஷிப் திட்டத்தை வெற்றிகரமாக முடிப்பவர்களுக்கு பொது கொள்கை மற்றும் மேலாண்மை முதுகலைப் படிப்புக்கான சான்றிதழ் வழங்கப்படும். திருச்சியில் உள்ள பாரதிதாசன் மேலாண்மை நிறுவனம் இந்த சான்றிதழை வழங்கும்.
என்ன பணி?
தமிழக முதலமைச்சர் அலுவலகப் பணிக்குத் தேர்வாகும் பணியாளர்கள், குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கும், சேவை வழங்கலை மேம்படுத்துவதற்கும் ஒதுக்கப்பட்ட நிரல்களைப் பற்றிய தரவு உந்துதல் முடிவெடுப்பதைக் கண்காணிப்பது, சிக்கல்களைக் கண்டறிவது போன்ற பணிகளை முதன்மையாக மேற்கொள்வர்.
இத்தோடு கள நிலைமையை மதிப்பிடுவதற்கும், கருத்துக்களைப் பெறுவதற்கும், தகுந்த பின் தொடர்தல் நடவடிக்கைகளில் உதவுவதற்கும் தேர்வாகும் நபர்கள் சம்பந்தப்பட்ட மாவட்டங்களுக்குப் பயணம் செய்ய வேண்டியிருக்கும்.
விருப்பமும் தகுதியும் உள்ள நபர்கள் https://tn.gov.in/tncmfp என்ற இணையதள முகவரி மூலம் விண்ணப்பிக்கலாம்.
கூடுதல் தகவல்களுக்கு: https://www.tn.gov.in/tncmfp/notification.pdf