TN Weather: 215 நிவாரண முகாம்.. 2 ஆயிரம் மோட்டார்கள்.. மோந்தா புயலுக்கு ரெடியாகும் சென்னை!
வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் சென்னையில் 215 நிவாரண முகாம்களும், மழைநீரை அகற்ற 2 ஆயிரம் மோட்டார் பம்புகளும் தயார் நிலையில் உள்ளது.

தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. வடகிழக்குப் பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் கண்காணிப்பு பணிகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே பெருமழை வந்தாலே அதிகளவு பாதிக்கப்படும் நகரங்களில் சென்னை முதலிடத்தில் உள்ளது. மக்கள்தொகை அதிகம், ஆக்கிரமிப்பு உள்ளிட்ட பல காரணங்கள் இதற்கு காரணம் ஆகும்.
4 லட்சம் பேருக்கு சாப்பாடு:
நடப்பாண்டு வழக்கத்திற்கு மாறாக மழைப்பொழிவு அதிகளவு இருந்து வருவதால் சென்னையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைககள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு உதவும் நோக்கத்தில் சென்னையைப் பொறுத்தமட்டில் 215 இடங்களில் நிவாரண மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிவாரண மையங்களில் சுகாதார வசதிகள், குடிநீர் வசதிகள், உணவு உள்ளிட்ட வசதிகளும் வழங்கப்படுகின்றன. மேலும், இந்த நிவாரண மையங்களில் தங்க வைக்கப்படும் மக்களுக்கு உணவு வழங்குவதற்காக மொத்தம் 106 சமையற் கூடங்களில் உணவுகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. கடந்த 22 மற்றும் 23 ஆகிய 2 நாட்களில் மட்டும் 4 லட்சத்து 400 பேருக்கு உணவுகள் வழங்கப்பட்டுள்ளது.
2 ஆயிரம் மோட்டார்கள்:
மெட்ரோ பணிகள் தற்போது நடந்து வரும் நிலையில், அதுபோன்ற இடங்களில் மழைநீர் அதிகளவு தேங்குவதற்கு வாய்ப்புகள் இருப்பதாக கருதப்படுகிறது. இதனால், அந்த இடங்கள் மட்டுமின்றி மழைநீர் தேங்கும் இடங்கள் கண்டறியப்பட்டு 150 மோட்டார்பம்புகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த மோட்டார் பம்புகள் அனைத்தும் 100 குதிரை திறன் கொண்ட மோட்டார் பம்புகள் ஆகும்.
இவை மட்டுமின்றி மோட்டார் பம்புகள் பொருத்தப்பட்ட 500 டிராக்டர்களும் சென்னையில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த டிராக்டர்கள் மூலம் கடந்த சில நாட்களாக பெய்த மழையால் தேங்கிய தண்ணீர் அகற்றப்பட்டது. இவை மட்டுமின்றி பல திறன் கொண்ட 1,436 மோட்டார் பம்புகளும் தயாராக உள்ளது. மொத்தாக 2 ஆயிரத்து 086 மோட்டார் பம்புகள் தயாராக உள்ளது.
மர அறுவை இயந்திரங்கள்:
கனமழை, பலத்த காற்று ஆகியவற்றின் காரணமாக சாலைகளில் விழும் மரங்களை அகற்றுவதற்கான மொத்தம் 457 மர அறுவை இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளது. அதாவது, ஹைட்ராலிக் மர அறுவை இயந்திரங்கள் 15, ஹைட்ராலிக் ஏணி 2, கையடக்க மர அறுப்பான் 224, டெலஸ்கோபிக் மர அறுவை இயந்திரங்கள் 216 தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு 2 ஆம்பிபியன், 3 ஆம்பிபியன் எஸ்கவேட்டர்கள், 6 ரோபோட்டிக் எஸ்கவேட்டர், 3 மினி ஆம்பிபியன், 7 சூப்பர் சக்கர் வாகனங்கள் என மொத்தம் 478 வாகனங்களும் தயார் நிலையில் உள்ளது.
புகார் எண்கள்:
இதுபோன்ற மழைக்காலங்களில் மக்கள் பெரிதும் அவதிக்கு ஆளாவது குடிதண்ணீர் விநியோகம் தடைபடுவதாலே ஆகும். இதனால், சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றல் தொடர்பான புகார்களை 1916 என்ற உதவி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். சென்னை மாநகராட்சிக்கு ஏதேனும் புகார் தெரிவிக்க விரும்பினால் 1913 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம். இந்த சேவைகள் 24 மணி நேரமும் கட்டணமில்லாமல் கிடைக்கிறது.
பருவமழை நடவடிக்கைகளை தீவிரமாக கண்காணிக்க மாநகராட்சி அலுவலர்கள், பொறியாளர்கள், பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட 22 ஆயிரம் பேர் களப்பணியாற்றி வருகின்றனர். மோந்தா புயலின் தாக்கம் தமிழ்நாட்டில் ஓரளவு தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. ஆனாலும், நவம்பர், டிசம்பர் காலத்தில் சென்னையில் எப்போதும் பெருமழை பெய்யும் என்பதால் தீவிர நடவடிக்கையை அரசு மேற்கொண்டு வருகிறது.





















