Chennai Police: இரு சக்கர வாகன ஓட்டிகளின் அவசர கவனத்திற்கு… உங்களுக்கான அவசர தகவல் இதோ!
நாளை மறுநாள் முதல் சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல இடங்களில் ஹெட்மெட் போடாதவர்களை பிடிப்பதற்கான சிறப்பு வேட்டை நடைபெற இருக்கிறது.
நாளை மறுநாள் முதல் சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல இடங்களில் ஹெட்மெட் போடாதவர்களை பிடிப்பதற்கான சிறப்பு வேட்டை நடைபெற இருக்கிறது.
சென்னையில் மட்டும் 312 இடங்களைப் போக்குவரத்து போலீசார் தேர்ந்தெடுத்து ஹெல்மெட் போடாதவர்களைப் பிடிக்கும் வேட்டையை நடத்த உள்ளனர். தற்போதும் அவ்வப்போது, வெவ்வேறு இடங்களில் ஹெட்மெட் போடாதவர்களுக்கு அபராதம் விதித்து வருகின்றனர்.
ஆனால், நாளை மறுநாள் முதல் ஒரு வாரத்திற்கு தீவிர ஹெல்மெட் வேட்டை நடத்தப்படவுள்ளதாக சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை வட்டாரங்கள் உறுதி செய்துள்ளன. ஹெல்மெட் போடாதவர்கள், ஒழுங்காக ஹெல்மெட் போடாதவர்கள், தரமற்ற ஹெல்மெட் போடுபவர்கள், பின் இருக்கையில் அமர்ந்து ஹெல்மெட் போடாதவர்கள் ஆகியோர் மீது அதிரடியாக நடவடிக்கை எடுக்க உள்ளது போலீஸ்.
ஹெட்மெட் ஸ்பெஷல் டிரைவ் என்ற பெயரில் இந்த பிடிவேட்டையை, சென்னை பெருநகரின் பல்வேறு இடங்களில் நடத்த உள்ளனர். இதற்காக, போலீசாருக்கு சிறப்பு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு உள்ளதாம். ஹெல்மெட் அணியாத வாகன ஓட்டிகளுக்கு வாகன சட்டத்தின்படி அபராதம் விதிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுக்கும்படி போலீசாருக்கு உத்தரவு போடப்பட்டுள்ளதாம்.
ஹெல்மெட் போடாதவர்கள் மீது நடவடிக்கை
ஹெல்மெட் போடாதவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளதாம். அதேபோன்று, அபராதத்தைத் தவிர்க்க வேண்டும் என்பதற்காக, பலர் ISI முத்திரை இல்லாத தரமற்ற ஹெல்மெட்களை அணிந்து செல்வது சென்னையில் தொடர்ந்து அதிகரித்து வருவதாக, சர்வே ஒன்றில் தெரிய வந்துள்ளதாம். அதன் அடிப்படையில்தான், ஹெல்மெட் ஒழுங்காகப் போடாதவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
சென்னை பெருநகரில் கடந்த ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில், 70 சதவீதம் பேர்தான் ஹெல்மெட் அணிவதாகவும், மற்றவர்கள் அணியாமல் போலீசாரை மட்டுமல்ல, தங்களையும் ஏமாற்றிக் கொள்கிறார்கள் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதுமட்டுமின்றி, ஆண்டுதோறும் சராசரியாக 1 லட்சத்திற்கும் மேற்பட்ட வழக்குகள் ஹெல்மெட் போடாதவர்கள் மீது போடப்படுகிறதாம். ஹெல்மெட் போடாதவர்கள்தான், விபத்துகளின் போது அதிக அளவு உயிரிழப்பைச் சந்திக்கிறார்கள் என்பதால்தான், இது போன்ற ஹெல்மெட் போடாதோர் பிடி வேட்டை நடத்தப்படுவதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.
கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும்
சென்னை பெருநகரில், கடந்த ஜனவரி 1-ம் தேதி முதல் கடந்த 15-ம் தேதி வரை, ஹெல்மெட் போடாமல் விபத்துகளில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 98 ஆகும். அதில், 80 பேர் இரு சக்கர வாகன ஓட்டிகள், 18 பேர் பின்னால் அமர்ந்து இருந்து ஹெல்மெட் போடாதவர்கள் என தெரிய வந்துள்ளன. எனவே, இரு சக்கர வாகனம் ஓட்டுபவர் மட்டுமல்ல, பின் இருக்கையில் அமர்ந்திருப்பவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்றும் இல்லையென்றால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளதாம்.
இந்த ஹெல்மெட் போடாதோர் பிடி நடவடிக்கை, தலைநகர்ச் சென்னை மட்டுமில்லாமல், தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாம். முதற்கட்டமாக, வரும் திங்கட்கிழமை முதல் சென்னை பெருநகரில் தீவிரமாக இந்த பிடி வேட்டை நடக்கும் என போலீஸ் தகவல்கள் உறுதிசெய்கின்றன. இருசக்கர வாகனம் ஓட்டும் பொதுமக்கள், ஹெல்மெட் அணிந்து தேவையற்ற சட்ட நடவடிக்கைகளைத் தவிர்த்திடும்படி போலீசார் அன்பாக கேட்டுக் கொண்டுள்ளனர்.