சென்னையின் குப்பைக் கதை... நாம் தூக்கிவீசும் குப்பைகளால் துயரப்படும் பூர்வக்குடிகள்!
”சுவையான சாற்றை உறிஞ்சிவிட்டு வீசப்படும் கரும்பு சக்கை போல, உழைப்பை உறிஞ்சிவிட்டு உதறித் தள்ளப்பட்ட உழைக்கும் வர்க்க மக்கள் வசிக்கும் பகுதியிலேயே சக்கைகளும் சென்றடைவது காலத்தின் கொடுமை.”
சென்னை.... தமிழ்நாட்டின் தலைநகரமாகவும், நாட்டின் மிகமுக்கிய தொழில்நகரமாகவும், இது திகழ்ந்து வருகிறது. நவநாகரிக கலாச்சாரத்தின் அடையாளமாக, வானுயர்ந்த கட்டிடங்களையும், பொழுதுபோக்கு தளங்களையும், உள்ளடக்கிய இந்த மாநகரம் படித்தவருக்கும் படிக்காதவருக்கும் வாழ்வளித்து வருகிறது.
இங்கு வானுயர்ந்த கட்டிடங்களை பார்க்கும் நாம், அதன் பின்னால் இருக்கும், குடிசைகளை காண்பது இல்லை. சென்னையில் மேற்கத்திய கலாச்சாரத்தில் வாழும் மாடர்ன் மனிதர்களை நினைக்கும் நமக்கு அதன் பூர்வகுடி மக்களான வட சென்னை வாசிகளின் நினைவு துளி கூட வருவதில்லை.
பலரால் மெட்ரோ சிட்டி என்று அழைக்கப்படும் சென்னையின் மறைக்கப்பட்ட பக்கங்கள் பல உள்ளன. யானை நடக்கும்போது எறும்புகள் சாவது போல சென்னையின் வளர்ச்சியால் அழிந்தவை பல. அவற்றில் ஒன்று தான் வட சென்னையில் அமைந்துள்ள கொடுங்கையூர்.
கோடிக்கணக்கான மக்கள் வாழும் சென்னை மாநாகரில் சேரும் குப்பைகள் யாவும் ஒட்டுமொத்தமாக கொண்டு போய் கொட்டப்படும் இடம் கொடுங்கையூர். சுமார் 35 ஆண்டுகளாக 35 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த கொடுங்கையூர் பகுதியில் நாளொன்றுக்கு ஆயிரத்து 500 டன் குப்பைகள் கொட்டப்படுகின்றன.
சென்னை மாநகராட்சியின் குப்பை கொட்டும் கிடங்கான இங்கு, மருத்துவ கழிவுகள், பிளாஸ்டிக் கழிவுகள், இதர கழிவுகள் யாவும், ஒட்டுமொத்தமாக மலைபோல் குவிந்து கிடக்கின்றன. இதன் அருகாமையில் உள்ள பணக்கார நகர், எழில் நகர், ராஜரத்தினம் நகர், கிருஷ்ணமூர்த்தி நகர் போன்ற குடியிருப்புப் பகுதிகளில் வசிக்கும் மக்களில் பெரும்பாலானோர் துர்நாற்றம் காரணமாகவும், கொசுத்தொல்லையாலும் பல்வேறு துயரங்களை சந்தித்து வருகின்றனர்.
இப்பகுதியில் உள்ள பெரும்பாலானோருக்கு நுரையீரல் பாதிப்பு இருப்பதாகவும், குப்பைகள் தீ வைத்து எரிக்கப்படுவதால் ஏற்படும் புகையை சுவாசிப்பதால் கேன்சர் நோய் பாதித்து பலர் உயிரிழந்துள்ளதாக மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். கடந்த 2004-ஆம் ஆண்டு அன்றைய முதல்வராக இருந்த ஜெயலலிதா, கொடுங்கையூரில் உள்ள குப்பை கிடங்கு வேறு பகுதிக்கு மாற்றி அமைக்கப்படும் என்றார். ஆனால், அறிவிப்பு வெளியாகி 17 ஆண்டுகள் கடந்துவிட்டன. பல முதலமைச்சர்கள் மாறிவிட்டனர். ஆனால், கொடுங்கையூர் மக்களின் இந்த துயர நிலை மாறவில்லை.
பல நாடுகள் குப்பைகளை வளமாக கருதி, அதில் மின்சாரத்தை உற்பத்தி செய்து வருகின்றன. ஆனால், நம் நாட்டிலோ ஒரே இடத்தில் குப்பைகளை கொட்டி அப்பாவி மக்களுக்கு நோய் பரப்பப்படுகிறது. ஒரு பகுதியின் வளர்ச்சியினால் மற்றுமொரு பகுதி வீழ்ச்சியடைவதற்கு கொடுங்கையூர் ஒரு நல்ல உதாரணம். சுவையான சாற்றை உறிஞ்சிவிட்டு வீசப்படும் கரும்பு சக்கை போல, உழைப்பை உறிஞ்சிவிட்டு உதறித் தள்ளப்பட்ட உழைக்கும் வர்க்க மக்கள் வசிக்கும் பகுதியிலேயே சக்கைகளும் சென்றடைவது காலத்தின் கொடுமை.
இந்த நிலையில், கடந்த செப்டம்பர் 2-ம் தேதி சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, கொடுங்கையூர் சென்று அங்குள்ள குப்பைகளை மறுசுழற்சி பணிகள் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டார். ஆனால், தாங்கள் நோய்வாய்பட்டு முடங்கியுள்ளவாறு தங்கள் குழந்தைகள் முடங்கிவிடாமல் இருக்க இந்த குப்பை கிடங்கை முற்றிலுமாக அகற்ற வேண்டும் என்பதே கொடுங்கையூர் பகுதி மக்களின் ஒருமித்த கோரிக்கையாக உள்ளது.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )