Tamilnadu Rain : சென்னையில் வெளுக்கும் கனமழை.. அடுத்த 3 மணிநேரத்திற்கு இத்தனை மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..
Chennai Rains: சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று அதிகாலை முதல் கனமழை பெய்து வருகிறது.
சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று அதிகாலை முதல் கனமழை பெய்து வருகிறது. கடந்த இரண்டு நாட்களாக மழையின் தாக்கம் சென்னையில் குறைவாகவே இருந்தது. இருப்பினும் வானம் மேகமூட்டத்துடன் மட்டுமே காணப்பட்டு வந்தது.
இந்தநிலையில், இன்று காலை முதல் சென்னையில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. அதன்படி, கோயம்பேடு, வடபழனி, மதுரவாயல், முகப்பேர்,கோடம்பாக்கம், வள்ளுவர்கோட்டம், நுங்கம்பாக்கம், ஆயிரம் விளக்கு, ராயப்பேட்டை, அண்ணா சாலை, திருவான்மியூர், பெருங்குடி பகுதிகளில் கனழை பெய்து வருகிறது.
வெளியே செல்லும் வாகனஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் குடை அல்லது ரெயின் கோர்ட்டை மழையில் இருந்து பாதுகாக்க எடுத்து செல்வது நல்லது. கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் பன்றிக்காய்ச்சல் மற்றும் இன்புளுயன்சா காய்ச்சல் பரவி வருவதால் மழையின் தாக்கத்தால் இத்தகைய நோய் தாக்க அதிக வாய்ப்புண்டு. எனவே மழையில் இருந்து பொதுமக்கள் தங்களை முடிந்தவரை தற்காத்து கொள்வது நல்லது என்று மருத்துவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அடுத்த 3 மணிநேரத்தில் 24 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..!
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருநெல்வேலி, கன்னியாகுமர், கோயம்புத்தூர் உள்ளிட்ட 24 மாவட்டங்களுக்கு அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
அடுத்த 4 நாட்களுக்கு எங்கெல்லாம் மழை :
01.10.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னதுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
02.10.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
03.10.2022 மற்றும் 04.10.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையை பொறுத்தவரை:
அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது / மிதமான மழை பெய்யக்கூடும். நகரின் அதிகபட்ச வெப்பநிலை 30-31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
01.10.2022: தென் கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் குறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ (மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
02.10.2022: மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டியுள்ள குமரிக்கடல் பகுதிகள். இலங்கை கடற்கரைப் பகுதிகள், தென் மேற்கு மற்றும் தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் குறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
03.10.2022 மற்றும் 04.10.2022: மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோரப்பகுதிகள், இலங்கை கடற்கரை பகுதிகள், தென் மேற்கு மற்றும் தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் குறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
எனவே மேற்குறிப்பிட்ட நாள்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாமென கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.