ரேஷன் கார்டில் இனிமேல் இருமுறை மட்டுமே இதை செய்ய முடியும் - அதிரடி அறிவிப்பு வெளியிட்ட அரசு
ரேசன் கார்டில் முகவரி மாற்றம் , உறுப்பினர் சேவைகளுக்கு , இனி ஆண்டுக்கு இருமுறை மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என உணவு வழங்கல் துறை அறிவித்துள்ளது

ரேசன் கார்டு
இந்தியாவில் குடும்பத்துடன் வசித்து வருபவர்களுக்கு அவர்களின் குடும்ப உறுப்பினர் விபரங்களுடன் குடும்ப அட்டை (ரேசன் கார்டு) வழங்கப்படுகிறது. குடும்ப அட்டையானது இந்தியக் குடிமகனுக்கு மிக முக்கிய ஆவணமாகும்.
அத்தியாவசியப் பொருட்கள் சட்டம் 1995 அத்தியாவசியப் பொருள்களின் உற்பத்தி வழங்கல் விநியோகம் போன்றவற்றை நியாயமான முறையில் வழங்கிட மத்திய மாநில அரசுகளுக்கு அதிகாரம் வழங்குகிறது. அதன்படி அனைவருக்கும் குடும்ப அட்டை வழங்கப்படுகிறது.
ஒவ்வொரு குடிமகனுக்கும் குடும்ப அட்டை இன்றியமையாதது. குடும்ப அட்டை ஒரு முக்கியமான ஆவணங்களில் ஒன்றாகும். அது தகுந்த அதிகாரியின் மூலம் பொதுவிநியோக முறைக்காக மாநில அரசால் வழங்கப்படுகிறது. இதன்மூலம் நியாய விலைக்கடைகளில் அத்தியாவசியப் பொருள்களை பெறுவதற்கு உணவுச் சீட்டாகவும், பிற அரசு திட்டங்களில் பங்கேற்க அடையாள அட்டையாகவும் பயனபடுகிறது. வறுமைக் கோட்டுக்கு மேல் உள்ளவர்கள், கீழ் உள்ளவர்கள் என்ற அடிப்படையில் வேறுபடுகின்றன.
ஆதார் கார்டு - ரேசன் கார்டு இணைத்தல்
தமிழக ரேஷன் கடைகளில் வழங்கப்படும் மானிய விலை உணவு பொருட்கள், பொங்கல் பரிசு தொகுப்பு வாங்க, ரேஷன் கார்டு அவசியம். கார்டை பெற, தனி சமையல் அறையுடன் வசிப்பவர், 'ஆதார்' எண்ணுடன் உணவு வழங்கல் துறையின், பொது வினியோக திட்ட இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
இந்த இணையதளத்தின் வாயிலாக, ரேஷன் உறுப்பினர் கார்டில் சேர்த்தல், முகவரி மாற்றம், குடும்ப தலைவர் மாற்றம், குடும்ப உறுப்பினர் நீக்கம் ஆகிய சேவைகளுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
ஆண்டுக்கு இரு முறை மட்டுமே அனுமதி
கார்டுதாரர்கள், தேவைக்கு ஏற்ப எத்தனை முறை வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம். அதை அதிகாரிகள் பரிசீலனை செய்து, ஒப்புதல் தருவர். இந்நிலையில், உறுப்பினர் சேர்த்தல், முகவரி மாற்றம் குடும்பத் தலைவர் மாற்றம், உறுப்பினர் நீக்கம் ஆகிய சேவைகளுக்கு, ஆண்டுக்கு இருமுறை விண்ணப்பிக்கும் சேவையை உணவுத் துறை அமல்படுத்தியுள்ளது.
அதன்படி மேற்கண்ட ஒவ்வொரு சேவைக்கும் ஜனவரி முதல் ஜூன் வரை ஒரு முறையும் , ஜூலை முதல் டிசம்பர் வரை ஒரு முறையும் மட்டுமே, விண்ணப்பிக்க முடியும். ஆவணங்களை பதிவிறக்கம் செய்ய முடியும்.
இது குறித்து உணவு வழங்கல் துறை இயக்குநர் சிவராசு, மாவட்ட வழங்கல் அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் ;
ரேஷன் கார்டில் மாற்றங்கள் மேற்கொள்ள உறுப்பினர் சேர்த்தல் , முகவரி மாற்றம், குடும்ப தலைவர் மாற்றம், உறுப்பினர் நீக்கம் ஆகிய சேவைகள் வழங்கப்பட்டு உள்ளன. இந்த சேவைகளை முறைப்படுத்த ஆண்டுக்கு இருமுறை மட்டும் விண்ணப்பிக்க அனுமதி அளிக்கும் வகையில் மென் பொருட்கள் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன என இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.





















