Chennai Train: இனி ரிலாக்ஸ்! வேளச்சேரி டூ பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை: இந்த மாதமே முடியப்போது... வேற லெவல்!
சென்னை வேளச்சேரியில் இருந்து பரங்கிமலை வரை நடந்து வரும் மெட்ரோ ரயில் கட்டுமானப் பணிகள் இந்த மாதம் முடிவடைய உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
Chennai Train: சென்னை வேளச்சேரியில் இருந்து பரங்கிமலை வரை நடந்து வரும் மெட்ரோ ரயில் கட்டுமானப் பணிகள் இந்த மாதம் முடிவடைய உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
பறக்கு ரயில் சேவை
சென்னையில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக பறக்கும் ரயில் சேவை தொடக்கப்பட்டது. சென்னை கடற்கரையில் இருந்து மயிலாப்பூர் வரை முதலில் இயக்கப்பட்டது. பின்னர், வேளச்சேரி வரை நீட்டிக்கப்பட்டது. இதில் நாள்தேறும் ஆயிரக்கணக்கானோர் பயணித்து வருகின்றனர். பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்ததால் முதலில் 6 பெட்டிகளை கொண்ட இந்த ரயில் கூடுதலாக 3 பெட்டிகள் இணைக்கப்பட்டு 9 பெட்டிகளுடன் இயங்கி வருகிறது.
இதன் தொடர்ச்சியாக இந்த பறக்கு ரயிலை பரங்கிமலை வரை நீட்டிக்க முடிவெடுக்கப்பட்டு 3 கி.மீ தூரத்துக்கு கட்டுமானப் பணிகள் கடந்த 2007ல் தொடக்கப்பட்டது. அதன்படியே, வேளச்சேரி-புழுதிவாக்கம்-ஆதம்பாக்கம் வரை தூண்கள் அமைக்கப்பட்டு தண்டவாளமும் பதிக்கப்பட்டது. ஆனால் பல்வேறு சிக்கல்கள் இருந்ததால் பணியில் தோய்வு ஏற்பட்டது. மீண்டும் 2020ல் பணிகள் தொடங்கின. அதன்படி, ஆதம்பாக்கம், பரங்கிமலை இடையே முழுவீச்சில் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த மாதம் பணிகள் முடியும்
இந்த பறக்கும் ரயில் விரிவாக்கம் திட்டத்திற்கு ரூ.734 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த திட்டத்திற்கான செலவை இந்திய ரயில்வே மற்றும் மாநில அரசு 1:2 என்ற விகிதத்தில் பகிர்ந்து கொண்டது. வேளச்சேரி முதல் பரங்கிமலை வரையிலான வழித்தடத்தில் புழுதிவாக்கம், ஆதம்பாக்கம், வாணுவம்பேட்டை ஆகிய 3 இடங்களில் ரயில் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னை மாநகரின் முக்கிய ரயில் திட்டம் என்பதால் பயணிகள் மத்தியில் இத்திட்டம் பெரும் எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. இந்நிலையில், இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ”சென்னை வேளச்சேரியில் இருந்து பரங்கிமலை வரை நடந்து வரும் மெட்ரோ ரயில் கட்டுமானப் பணிகள் இந்த மாதம் முடிவடைய உள்ளது. பணிகள் நிறைவடைந்தவுடன், தண்டவாளங்களை ஆய்வு செய்து, சேவைகளை இயக்க ஒப்புதல் அளிக்க கோரப்படும்.
இருப்பினும், செயின்ட் தாமஸ் மவுண்டிலிருந்து ஆதம்பாக்கம் ரயில் நிலையத்தைக் கடக்கும் மெட்ரோ ரயில் 2ஆம் கட்டத் திட்டத்திற்கான பாதையின் ஒரு பகுதியில் பணிகள் நடைபெற்று வருகிறது. எனவே பறக்கு ரயில் பணிகள் இந்த மாதம் முடிந்தாலும், இந்தாண்டு கடைசியில் தான் பயன்பாட்டிற்கு வரும்" என்று கூறியுள்ளனர்.
ஒரே இடத்தில் 3 சேவைகள்
ஏற்கனவே பரங்கிமலையில் புறநகர் ரயில் சேவை பயன்பாட்டில் உள்ளது. இந்த நிலையில், பறக்கும் ரயில் பணிகள் மற்றும் மெட்ரோ ரயில் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இவை நிறைவு பெற்றால் பரங்கிமலை ரயில் சேவைகளுக்கான மையமாக மாறும். அதன்படி, மெட்ரோ ரயில், பறக்கு ரயில், புறநகர் ரயில் ஆகிய 3 சேவைகளையும் வழங்கும் இடமாக பரங்கிமலை இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.