ஆட்டுக்குட்டி முதல் ஸ்கூட்டி வாகனம் வரை.. மாட்டு வண்டியில் வந்து இறங்கிய சீர்வரிசை..!
வரவேற்பு சிறப்பு நிகழ்ச்சியாக பேண்ட் வாத்தியங்களுடன் பொம்மை ஆட்டம், வானவேடிக்கை, சரவெடி போன்ற பிரமாண்டமாக வரவேற்பு அளிக்கப்பட்டது
தமிழர் வழி உறவில் தாய் மாமன் உறவு இன்றியமையாத ஒன்றாக உள்ளது. தாய் வழியில் இருக்கின்ற உறவுகளிலே மிகவும் முக்கிய உறவாக தாய்மாமன் உறவு பார்க்கப்படுகிறது. பெரும்பாலான தாலாட்டுப் பாடல்களில் மாமன் பெருமையைக் கூறும் பாடல்களே அதிகம். குழந்தை பிறந்ததும் தாய் மாமன் தொட்டில் கம்பு, தொட்டிற் சீலை அல்லது தொட்டில் முண்டு போன்றவற்றைக் கொண்டுவந்து தொட்டில் கட்டி குழந்தையைக் கிடத்தி மூன்றுமுறை ஆட்டிவிடும் வழக்கம் பல குடும்பங்களில் உண்டு. காது, மூக்கு ஆகிய பகுதிகளில் துளையிட்டு உலோக ஆபரணம் பூட்டுவதற்கு தாய் மாமன் மடியில் குழந்தையை அமர வைத்துக் காது குத்துதல் என்பது மாறாத வழக்கமாக இருந்து வருகிறது.
தாய் வீட்டு சீர்வரிசை
பெண் பிள்ளையை கட்டிக் கொடுக்கும் வீட்டில், நல்லது கெட்டது எதுவாக இருந்தாலும் அதை முன் நின்று , அனைத்தையும் கவனித்துக் கொள்ளும் உறவாக தாய்மாமன் உறவு உள்ளது. அந்த வகையில் தாய்மாமன் உறவுக்கு கொடுக்கும் மிக முக்கிய அங்கீகாரமாக தங்கை மகள் பூப்பெய்திய தாய் வீட்டு சீர்வரிசையாக தாய்மாமன் உறவு வழங்குவது. இது காலகாலமாக இருந்து வரும் தமிழர் மரபுவழி வாழ்வியல் பண்பாட்டு கலாச்சாரமாகும்.
தமிழர் மரபுவழி வாழ்வியல்
குறிப்பாக தாய்மாமன் கொடுக்கும் சீர் என்பது, ஒரு சிறு துரும்பு என்றால் கூட அந்த சிறு துரும்பிற்கு தான் சபையில் , மதிப்பு அதிகம் என பெரியோர்கள் கூறுவார்கள். தற்பொழுது வேகமாக சென்று கொண்டிருக்கும் உலகில் மரபு வழி கலாச்சாரங்கள் குறைந்து வருகின்றன. ஆனால் காஞ்சிபுரத்தில் ஊரையே வியக்க வைக்கும் வண்ணம் தாய்மாமன் ஒருவர் பாரம்பரிய முறைப்படி சீர் வழங்கி இருக்கும் சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.