போலி பத்திரம் தயார் செய்து 2 கோடி மதிப்பிலான சொத்து விற்பனை
சென்னையில் நடந்த குற்ற சம்பவங்களை கீழே காணலாம்

போலி பத்திரம் தயார் செய்து 2 கோடி மதிப்பிலான சொத்து விற்பனை... சிக்கிய 3 பேர்.
சென்னை தி.நகரைச் சேர்ந்தவர் சுப்பிரமணி ( வயது 65 ) இவருக்கு , மடிப்பாக்கம் , கீழ்க்கட்டளை பகுதியில், 2,530 சதுர அடி சொத்து உள்ளது. அதை சிலர் போலியான ஆவணங்கள் தயாரித்து, ஆள் மாறாட்டம் செய்து அபகரித்து விற்பனை செய்துள்ளனர். இதை அறிந்த அவர் சென்னை மத்திய குற்றப் பிரிவில் , ஆகஸ்ட் 11 - ம் தேதி புகார் அளித்தார்.
அதன் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில், கே.கே. நகர் பகுதியைச் சேர்ந்த பிரியா ( வயது 32 ) என்பவர், புகார் தாரின் ஒரே வாரிசு என ஆள் மாறாட்டம் செய்து , 2 கோடி மதிப்பிலான சொத்தை அபகரித்து விற்பனை செய்தது தெரிய வந்தது.
இதற்கு போலி ஆவணங்களை தயார் செய்து கொடுத்து , ஜமீன் பல்லாவரத்தைச் சேர்ந்த பாலசுந்தர ஆறுமுகம் (வயது 40 ) , வானுவம்பேட்டையைச் சேர்ந்த சாலமன்ராஜ் ( வயது 38 ) ஆகிய இருவரும் உடந்தையாக இருந்தது தெரிய வந்தது. இந்நிலையில் , செப்டம்பர் 25 - ம் தேதி பிரியாவை கைது செய்த போலீசார், பாலசுந்தர ஆறுமுகம் , சாலமன்ராஜ் ஆகிய இருவரையும் நேற்று கைது செய்தனர். வழக்கில் மேலும், தொடர்புடையவர்களை கைது செய்யும் பணியில் , மத்திய குற்றப்பிரிவு போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
ரயில் நிலையத்தில் கேட்பாரற்று கிடைந்த மர்ம பையில் 6 லட்சம் மதிப்பிலான கஞ்சா.
ரயில்வே பாதுகாப்பு படையைச் சேர்ந்த நான்கு பாபேர் கொண்ட குழுவினர் எழும்பூர் ரயில் நிலையத்தில் சோதனை மேற்கொண்டனர். அப்போது ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் இருந்து ராமேஸ்வரம் செல்லும் வாராந்திர விரைவு ரயிலில் யாரும் உரிமை கோரப்படாத ஒரு பை இருந்துள்ளது. அந்த பையைத் திறந்து பார்த்த போது ஆறு பண்டல்களில் மொத்தம் 12 கிலோ கஞ்சா இருப்பதை கண்ட போலீசார் , கஞ்சா பண்டல்கள் பறிமுதல் செய்யப்பட்டு , மதுவிலக்கு அமலாக்கப் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதன் மதிப்பு 6 லட்சம் என தெரிவித்த போலீசார் , கஞ்சாவை ரயில் பெட்டியில் விட்டு சென்றவர்கள் குறித்து , சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்து விசாரிக்கப்பட்டு வருகிறது என ரயில்வே பாதுகாப்பு இன்ஸ்பெக்டர் ஜெபாஸ்டியன் தெரிவித்துள்ளார்.
மருத்துவமனைக்கு வெளியே நிறுத்தி சென்று ஆட்டோ திருட்டு
சென்னை திருவேற்காடு ஸ்ரீதேவி நகர் பகுதியைச் சேர்ந்தவர் கிஷோர்த்தம்மன் ( வயது 18 ) கடந்த 26 ம் தேதி கட்டிங் இயந்திரத்தை பயன்படுத்திய போது காயமடைந்த இவரது மாமாவை , கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு , தன் ஆட்டோவில் அழைத்து வந்துள்ளார். அப்போது அவசரத்தில் ஆட்டோ சாவியை எடுக்காமலேயே மாமாவை சிகிச்சைக்காக மருத்துவமனைக்குள் அழைத்துச் சென்றுள்ளார். பின் வெளியே வந்து பார்த்த போது ஆட்டோ திருடப்பட்டது தெரிய வந்தது. சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த கீழ்ப்பாக்கம் போலீசார் , தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில் பூந்தமல்லி பகுதியைச் சேர்ந்த ஜெய்சாம்ராஜ் ( வயது 38 ) என்பவர் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரிந்தது. அவரை கைது செய்த போலீசார் திருடிய ஆட்டோவை பறிமுதல் செய்தனர்.
வீடு புகுந்து நகைகளை திருடிய வெளி மாநிலத்தவர்கள்
சென்னை சைதாப்பேட்டை புஜகரா தெருவை சேர்ந்தவர் தியாகராஜன் ( வயது 60 ) கடந்த மாதம் 8 - ம் தேதி இவர் வீட்டில் புகுந்த இரண்டு பேர் 32 சவரன் நகையை திருடி சென்றனர். புகாரின்படி சைதாப் பேட்டை போலீசார் வழக்கு பதிந்து , தனிப்படை அமைத்து விசாரித்தனர். இதில் உத்தர பிரதேச மாநிலம் சிக்கம்மர் பகுதியை சேர்ந்த சன்முகம்மது ( வயது 35 ) நுார்முகமது ( 38 ) ஆகியோர் திருட்டில் ஈடுபட்டதும் நகைகளை விற்று சொகுசாக வாழ்ந்து வந்ததும் தெரிந்தது. அவர்கள் இருவரையும் கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.





















