" ஆளுநர் மைக் ஆப் - மிகப் பெரிய புளுகு " அமைச்சர் ரகுபதி அதிரடி
எவ்வளவு தூரம் தாழ்ந்து போய் கேட்க முடியுமோ அந்த அளவுக்கு அரசால் தயாரிக்கப்பட்ட உரையை வாசியுங்கள் என்று சபாநாயகர் ஆளுநரிடம் கேட்டுள்ளார் - ரகுபதி

சட்டப்பேரவை கூட்டத் தொடருக்கு பிறகு கனிம வளங்கள்த்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் பேசியதாவது ;
தமிழ்நாடு சட்டமன்றத்தின் மரபு முதலிலே தமிழ் தாய் வாழ்த்து பாடுவது இறுதியிலே தேசிய கீதம் இசைப்பது. இது தான் தமிழ் நாட்டின் மரபு என்று எடுத்துச் சொல்லியும் கூட தேசிய கீதம் பாடவில்லை என்று ஆளுநர் வெளியேறியது மரபு அல்ல.
தமிழக அரசால் தயாரிக்கப்பட்ட அறிக்கையை ஆளுநர் வாசிக்காமல் தானாக எதையாவது கூறி அதன் மூலமாக சட்டப் பேரவையில் பிரச்சனையை எழுப்பலாம் என்று ஆளுநர் நினைத்துள்ளார்.
ஆளுநர் மைக் ஆப் - மிகப் பெரிய புளுகு
எவ்வளவு தூரம் தாழ்ந்து போய் கேட்க முடியுமோ அந்த அளவுக்கு அரசால் தயாரிக்கப்பட்ட உரையை வாசியுங்கள் என்று சபாநாயகர் ஆளுநரிடம் கேட்டுள்ளார். சட்டப் பேரவையில் ஆளுநரின் மைக் ஆப் செய்யவில்லை. இது மிகப் பெரிய புளுகு. ஆளுநரின் மைக்கை ஆப் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. எதிர்க் கட்சிகள் கூட சொல்லாத குற்றச் சாட்டுகளை எல்லாம் வரிந்து கட்டிக் கொண்டு எல்லாவற்றிற்கும் வக்காலத்து வாங்கிக் கொண்டு அரசுக்கு எதிராக ஆளுநர் செயல்படுகிறார்.
ஆளுநர் மாளிகை அறிக்கை - திட்டமிட்ட விஷயங்கள்
தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியை இரட்டை இலக்கத்திற்கு கொண்டு வந்திருக்கிறோம் என்று ஒன்றிய அரசே தெரிவித்துள்ளது. இதனை யாராலும் மறுக்க முடியாது. வேலை வாய்ப்பு தொழில் வளர்ச்சி குறித்து ஆளுநர் சொல்லியிருப்பது முற்றிலும் பொய்யானது. தமிழ்நாட்டின் மீது என்ன விரோதம் என்று ஆளுநருக்குத்தான் தெரியும். ஆளுநர் வெளியேறிய உடனே ஆளுநர் மாளிகையிலிருந்து அறிக்கை உடனடியாக வருகிறது என்றால், எல்லாம் திட்டமிட்ட படியே செய்த விஷயங்கள்.
கடந்த ஆட்சியில் புகார் கொடுத்தால் கேட்க நாதி இல்லை. ஆனால் இந்த ஆட்சியில் புகார் கொடுத்தால் உடனடியாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. பெண்களும் , குழந்தைகளும் தைரியமாக வாழ்வதற்கான சூழலை தமிழ்நாடு அரசு ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாட்டில் போதை பொருள் உற்பத்தியே கிடையாது. எந்த மாநிலங்களில் இருந்து போதை பொருட்கள் உற்பத்தியாகி தமிழ்நாட்டிற்கு கொண்டு வரப்படுகிறது என்பது அனைவருக்கும் தெரியும்.
தற்கொலைக்கு அரசு காரணம் இல்லை
போதை பொருள் உள்ளே வருவதை தடுக்க தமிழ்நாட்டின் எல்லைப் பகுதிகளில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் நடைபெறும் தற்கொலைகளுக்கு அரசு காரணம் அல்ல. தமிழ்நாட்டில் தற்கொலைக்கு பல்வேறு காரணங்கள் உள்ளது அதற்கு அரசு காரணம் அல்ல. தமிழ்நாட்டில் 20, 000 பேர் தற்கொலை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுவதை நாங்கள் ஏற்க மாட்டோம்.





















