மேலும் அறிய
Advertisement
காஞ்சிபுரம் : 120 ஆண்டுகளுக்கு பிறகு பாலாற்றில் வரலாறு காணாத வெள்ளம்.. நிலவரம் என்ன?
காஞ்சிபுரம் பாலாற்றில், 1903-ஆம் ஆண்டுக்கு பின் தற்போது, வினாடிக்கு ஒரு லட்சம் கன அடி நீர் செல்கிறது.
காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் செல்லும் பாலாற்றில், ஒரு மாதமாகவே வெள்ள நீர் செல்கிறது.இந்நிலையில், வடகிழக்கு பருவ மழை துவங்கியது முதல், அதிக அளவில் தண்ணீர் செல்வதால், மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து, வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்து வருகிறது. காஞ்சிபுரம் செங்கல்பட்டு மாவட்டத்தில் மழை பெய்வதற்கு முன்பாக இருந்தே பாலாற்றில் வெள்ளம் சென்று கொண்டிருந்தது. இதற்கு காரணம் ஆந்திராவில் பெய்த மழையின் காரணமாக திறந்துவிடப்பட்ட நீரினால் தொடர்ந்து வெள்ளம் சென்று கொண்டிருந்தது. பாலாற்றில் சென்ற வெள்ளத்தை பயன்படுத்தி பொதுப்பணித்துறை அதிகாரிகள் திருப்பி அனுப்பி ஏரிகளை நிரப்பினர்.
ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை அருகில் உள்ள பாலாறு அணைக்கட்டிலிருந்து, அதிகளவில் தண்ணீர் வருவதால், காஞ்சிபுரம் பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. உத்திரமேரூர் அடுத்த திருமுக்கூடல் பகுதியில், பாலாற்றுடன் செய்யாறு மற்றும் வேகவதி ஆறும் கலப்பதால், அப்பகுதியில் இன்னும் அதிகளவு தண்ணீர் செல்கிறது.
வீணாக கடலில் கலக்கும் நீர்
மூன்று ஆறுகள் கலந்து செல்லும் போது, திருக்கழுக்குன்றம் பகுதியில் உள்ள எடையாத்துாரில் கிளியாறும் பாலாற்றுடன் கலப்பதால், வாயலூர் தடுப்பணையில் இருந்து சுமார் வினாடிக்கு ஒரு லட்சம் கன அடி நீர் கடலில் கலக்கிறது. கிட்டத்தட்ட, ஒரு நாளைக்கு, 5 டிஎம்சி தண்ணீர் கடலில் கலக்கிறது. இது போன்று பல டிஎம்சி கன அடி நீர் கடலில் கலப்பதற்கு, பல்வேறு இடங்களில் தடுப்பணை கட்டியிருந்தால், மழை நீர் வீணாக கடலில் கலப்பதை ஓரளவு தடுக்க முடியும் என, சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகின்றனர். பாலாற்றில் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு, இரு கரை தொட்டு தண்ணீர் செல்வதால், இரு கரையோரம் உள்ள மக்களுக்கு, மாவட்ட நிர்வாகத்தால் வெள்ள அபாய எச்சரிக்கை தொடர்ந்து விடுக்கப்படுகிறது.
போக்குவரத்துக்கு தடை
காஞ்சிபுரம் - உத்திரமேரூர் சாலையில் வெங்கச்சேரியில் செய்யாற்றின் குறுக்கே தரைப்பாலம் உள்ளது. இந்த தரைப்பாலம் கடந்த 2015ம் ஆண்டு பெய்த கனமழையால் உடைந்து சேதமானது. பின்னர் மணல் மூட்டைகளை அடுக்கி, தற்காலிகமாக பயன்படுத்தினர். அதன்மீது, தார்சாலை அமைத்து, கனரக வாகனங்கள் மெதுவாக இயக்கப்பட்டன. 2016ம் ஆண்டு கனமழை பெய்து செய்யாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, தற்காலிகமாக சீரமைக்கப்பட்ட பாலத்தில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதனால், உத்திரமேரூர் - காஞ்சிபுரம் இடையே 50- க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பாதிக்கப்பட்டனர்.
அதன்பின்னரும், இந்தப் பாலம் சீரமைக்காமல் விட்டதால், தற்போது பெய்த மழையில், பாலம் சரிந்து இடிந்து விழும் நிலையில் இருந்தது. அதன் மீது பொதுமக்கள் ஆபத்தை உணராமல் பயணம் செய்தனர். அரசு பஸ்களும் சென்று வந்தன. இதுகுறித்து நேற்றைய தினகரனில் படத்துடன் செய்தி வெளியானது. இதைதொடர்ந்து கலெக்டர் ஆர்த்தி, நேற்று காலை, செய்யாற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் பாதிப்படைந்த பாலத்தை பார்வையிட்டார். பின்னர், பாலத்தில் தடுப்பு வைத்து, போக்குவரத்துக்கு தடை செய்ய உத்தரவிட்டார். அதன்படி, போலீசார் தடுப்புகள் அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதையடுத்து, காஞ்சிபுரம் - உத்திரமேரூர் இடையே போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால், பொதுமக்கள் பஸ்கள் மூலம் வயலக்காவூர், வாலாஜாபாத் வழியாக, 40 கிமீ சுற்றி காஞ்சிபுரம் செல்கின்றனர். மேலும் பாாலத்தின் இருபகுதிகளிலும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள போலீசார் பொதுமக்கள் பாலத்தின் வழியே நடந்து செல்லக்கூட தடை விதித்துள்ளனர். இந்த பாலத்தை இடித்து, புதிதாக மேம்பாலம் கட்ட வேண்டும் என, வெங்கச்சேரி, மாகரல், ஆற்பாக்கம், காவாந்தண்டலம் உள்பட பல கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கல்வி
தமிழ்நாடு
உலகம்
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion