அசத்தும் கிளாம்பாக்கம்.. தவறை சரி செய்யும் அரசு.. பொங்கலுக்கு பிரச்சினை இல்லை
Kilambakkam Special Bus: கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் தொடர் விடுமுறையை முன்னிட்டு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு செல்லும் பொது மக்களுக்காக இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றனர். இதற்காக கிளாம்பாக்கத்தில் 500-க்கும் மேற்பட்ட அரசு பேருந்துகள் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
பொங்கல் பண்டிகை விடுமுறை
தமிழர்கள் கொண்டாட கூடிய மிக முக்கிய பண்டிகைகளில் ஒன்றாக தைப்பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது. 4 நாட்கள் கொண்டாடப்படும் இந்த தைப்பொங்கல் விழாவை முன்னிட்டு, எங்கு இருந்தாலும் அனைவரும் தங்களது பூர்வீக இடங்களுக்கு சென்று பொங்கல் பண்டிகையை கொண்டாடுவது வழக்கமாக உள்ளது.
உலகம் எங்கும் இருக்கும் தமிழர்கள் தை பண்டிகையை வெகு விமர்சையாக கொண்டாடுவார்கள். இதனால் மக்கள் சொந்த ஊரை நோக்கி படையெடுப்பதும் வழக்கமாக உள்ளது. அந்த வகையில் சென்னையில் தங்கியிருக்கும் ஏராளமான, பிற மாவட்டங்களை சார்ந்த பொதுமக்கள் சொந்த ஊரை நோக்கி படையெடுப்பது வழக்கம். இதற்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
சிறப்பு பேருந்துகள் இயக்கம்
பொங்கல் பண்டிகை விடுமுறையை முன்னிட்டு இன்று முதல் தமிழக அரசு சார்பில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. சென்னை கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம், கோயம்பேடு பேருந்து நிலையம் மற்றும் மாதவரம் பேருந்து நிலையங்களில் இருந்து வழக்கமாக இயக்கப்படும் 2092 பேருந்துகளுடன் கூடுதலாக 1445-பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
இதனால் விழுப்புரம், சேலம், கோவை, மதுரை, கும்பகோணம் மற்றும் திருநெல்வேலி உள்ளிட்ட மண்டலங்களை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட பேருந்துகள் கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இன்று காலை முதல் தென் மாவட்டங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வரும் நிலையில் கிளாம்பாக்கம் பேருந்து முனையம் கூட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகிறது. மேலும் இன்று மாலையில் அதிக அளவிலான பொதுமக்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
கிளாம்பக்கத்தில் இருந்து செல்லும் பேருந்துகள் ?
திண்டிவனம் மார்க்கமாக விழுப்புரம், உளுந்தூர்பேட்டை, விருத்தாசலம், திட்டக்குடி திருக்கோவிலூர், கள்ளக்குறிச்சி, சேலம், கோயம்புத்தூர் செல்லும் பேருந்துகள்.
திண்டிவனம் வழியாக பண்ருட்டி நெய்வேலி, வடலூர், சிதம்பரம், காட்டுமன்னார் கோயில் கும்பகோணம், நாகப்பட்டினம் செல்லும் பேருந்துகள் ஆகிய ஊருக்கு செல்லும் பேருந்துகள்.
திண்டிவனம் வழியாக புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் செல்லும் பேருந்துகள். திருச்சி, மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், தூத்துக்குடி, திருச்செந்தூர், செங்கோட்டை, திண்டுக்கல், பழநி, பொள்ளாச்சி செல்லும் பேருந்துகள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும்.
கிளாம்பாக்கம் மாநகரப் பேருந்து நிலையம்
செஞ்சி மார்க்கமாக திருவண்ணாமலை, போளூர், சேத்பட்டு, வந்தவாசி செல்லும் பேருந்துகள் கிளாம்பாக்கம் மாநகர பேருந்து நிலையத்திலிருந்து செல்ல உள்ளது. எனவே இந்த ஊர்களுக்கு செல்பவர்கள் கிளாம்பாக்கம், மாநகர பேருந்து நிலையத்திலிருந்து செல்லலாம்.
முன்பதிவு மையங்கள்
பொதுமக்கள் எளிதில் பேருந்துகளை முன் பதிவு செய்து செல்வதற்க்கு கூடுதலாக முன்பதிவு மையங்கள் திறக்கப்பட்டு உள்ளது. வழக்கமாக இரண்டு கவுண்டர்கள் மட்டுமே செயல்பட்டு வந்த நிலையில் தற்போது கூடுதலாக ஏழு முன்பதிவு மையங்கள் துவங்கப்பட்டு உள்ளது. மேலும் பேருந்து நிலைய நடைமேடைகளில் ஆங்காங்கே தானியங்கி பயணச்சீட்டு இயந்திரமும் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வைக்கப்பட்டுள்ளது.