ரேஷன் கார்டு பயனர்களுக்கு முக்கிய அறிவிப்பு !! விரல் ரேகை பதிவு செய்ய கடைசி வாய்ப்பு !!
ரேஷன் கடைகளில் விரல் ரேகை பதிவு செய்யாத 36 லட்சம் பேரின் உண்மை சரிபார்ப்பு பணியை 2026 ஜனவரி 31க்குள் முடிக்க, தமிழகத்திற்கு மத்திய அரசு கெடு விதித்து உள்ளது.

விரல் ரேகை பதிவு - மத்திய அரசு கெடு
ரேஷன் கடைகளில் விரல் ரேகை பதிவு செய்யாத 36 லட்சம் பேரின் உண்மை சரிபார்ப்பு பணியை, 2026 ஜனவரி 31 - க்குள் முடிக்க தமிழகத்திற்கு மத்திய அரசு கெடு விதித்து உள்ளது.
தமிழகத்தில் 98.45 லட்சம் முன்னுரிமை கார்டுகளில், 3.01 கோடி உறுப்பினர்களும், 18.64 லட்சம் அந்தியோதயா கார்டுகளில், 62.88 லட்சம் உறுப்பினர்களும் உள்ளனர். முன்னுரிமை கார்டில் உள்ள ஒவ்வொரு உறுப்பினருக்கும் மாதம் தலா 5 கிலோ அரிசியும், அந்தியோதயா கார்டுதாரருக்கு, 35 கிலோ அரிசியும் இலவசமாக வழங்கப்படுகிறது.
அவர்கள் தங்களுக்கான அரிசி ஒதுக்கீட்டில், குறிப்பிட்ட அளவுக்கு கோதுமையையும் இலவசமாக வாங்கலாம். இதை தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு மத்திய அரசு இலவசமாக வழங்குகிறது. இரு வகை கார்டுகள் வைத்திருக்கும் பயனாளிகளை, ஆதார் சரிபார்ப்பு வாயிலாக உண்மை தன்மையை உறுதி செய்யுமாறு மத்திய அரசு கடந்த ஆண்டில் உத்தர விட்டது.
எனவே, இரு வகை கார்டுகளில் உள்ள ஒவ்வொரு உறுப்பினரும் ரேஷன் கடைக்கு சென்று, பாயின்ட் ஆப் சேல் எனப்படும் விற்பனை முனைய கருவியில் விரல் ரேகையை பதிவு செய்ய வேண்டும். ஆதார் சரிபார்ப்பு வாயிலாக கார்டில் உள்ள உறுப்பினர் தான் என்பது உறுதி செய்யப்படும். இந்த பணியை முடிக்க, மத்திய அரசு பல முறை அவகாசங்கள் அளித்தும், உண்மை சரிபார்ப்பு பணி, 100 சதவீதம் முடிவடையவில்லை. இன்னும், 36 லட்சம் உறுப்பினர்கள் விரல் ரேகை பதிவு செய்யாமல் உள்ளனர்.
இது குறித்து, உணவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது ;
விரல் ரேகை சரிபார்ப்பு பணியை, 2026 ஜனவரிக்குள் முடிக்குமாறு, தமிழகத்திற்கு மத்திய அரசு கெடு விதித்துள்ளது. பயனாளிகளை தொடர்பு கொண்டு, விரல் ரேகை பதிவு செய்யும் பணியை இம்மாதத்திற்குள் முடிக்க கூட்டுறவு இணை பதிவாளர்கள், மாவட்ட உணவு வழங்கல் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. இக்கார்டுதாரர்கள், மாநிலம் முழுதும் உள்ள எந்த ரேஷன் கடையிலும் சென்று விரல் ரேகை பதிவு செய்யலாம் என இவ்வாறு அவர் கூறினார்.





















