பிரபல ரவுடி நாகேந்திரன் மகன் அஜித் ராஜ் மீது புகார் ! ரியல் எஸ்டேட் அதிபரை மிரட்டி கார் பறிப்பு
பிரபல ரவுடி நாகேந்திரனின் இரண்டாவது மகன் அஜித்ராஜ் மீது எம்.கே.பி நகர் காவல் நிலையத்தில் புகார். போலீசார் விசாரணை

பிரபல ரவுடி நாகேந்திரன் மகன் அஜித் ராஜ் மீது புகார் !! ரியல் எஸ்டேட் அதிபரை மிரட்டி கார் பறிப்பு !! பரபரப்பு விசாரணை
சென்னை அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்தவர் லோகநாதன் ( வயது 53 ) இவர் சொந்தமாக ரியல் எஸ்டேட் நிறுவனம் நடத்தி வருகிறார். கொளத்தூரைச் சேர்ந்த செங்கோடன் என்பவர் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு லோகநாதனை அணுகி கொளத்தூரில் உள்ள தனது நிலத்தை விற்க வேண்டும் என கேட்டுள்ளார்.
அதற்கு லோகநாதன் தனக்குத் தெரிந்த ஜானகிராமன் என்பவருக்கு அந்த நிலத்தை இரண்டரை கோடி ரூபாய்க்கு விற்க உதவி செய்துள்ளார். நிலத்தை விற்பனை செய்த பிறகு செங்கோடன் என்பவரின் மருமகள் பாரதி என்பவர் வியாசர்பாடியை சேர்ந்த உயிரிழந்த பிரபல ரவுடி நாகேந்திரனின் மகன் அஜித்ராஜ் என்பவரிடம் தனது சொத்து பிரச்சனைக்கு உதவி செய்யுமாறு கூறியுள்ளார்.
தனியாக வரவழைத்து சொகுசு காரை பறித்து சென்ற ரவுடி கும்பல்
அஜித்ராஜ் லோகநாதனை மிரட்டி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் 16 ஆம் தேதி மாலை அஜித்ராஜ் தரப்பில் இருந்து லோகநாதனை வியாசர்பாடி அம்பேத்கர் கல்லூரி சாலை அருகே வரச் சொல்லி உள்ளனர். லோகநாதன் அங்கு சென்றவுடன் அஜித் ராஜின் நண்பரான ராகுல் மற்றும் ஐந்து நபர்கள் சேர்ந்து லோகநாதனை மிரட்டி அவர் வைத்திருந்த சொகுசு காரை எடுத்துச் சென்று விட்டனர். மேலும் இது குறித்து வெளியே சொன்னால் பிரச்சனை ஏற்படும் என மிரட்டி உள்ளனர்.
அதனால் லோகநாதன் அப்போது வெளியே சொல்லாமல் , தற்போது எம்.கே.பி நகர் குற்றப் பிரிவில் புகார் அளித்துள்ளார். எம்.கே.பி நகர் குற்றப்பிரிவு போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் குறிப்பிட்ட அந்த நிலத்தை விற்பனை செய்த செங்கோடன் என்பதும் அவரின் மருமகள் பாரதி என்பவர் மத்திய குற்றபிரிவில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.
அதில் கடந்த 2007 ஆம் ஆண்டு கார் விபத்தில் அவரது கணவர் விஜயகுமார் இறந்து விட்டதாகவும் அவரின் இறப்பு சான்றிதழ் மட்டும் கொடுத்து கொளத்தூரில் உள்ள அவரது நிலத்தை விற்பனை செய்து விட்டதாகவும் எனவே தனக்கு தெரியாமல் தனது கணவரின் சொத்தை விற்பனை செய்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் அளித்த புகாரின் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து செங்கோடனை சிறையில் அடைத்தனர். இருப்பினும் பாரதி , அஜித்ராஜை வைத்து இந்த விஷயத்தில் லோகநாதனுக்கு அழுத்தம் கொடுத்துள்ளார்.
அதன் அடிப்படையிலேயே லோகநாதனை மிரட்டி அஜித்ராஜ் ஆட்களை வைத்து லோகநாதனின் காரை பறித்து சென்றது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது. தொடர்ந்து இது குறித்து எம்.கே.பி நகர் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.





















