NIA Raid: சென்னையில் அதிரடி காட்டும் என்.ஐ.ஏ! பல்வேறு இடங்களில் சோதனை! பெங்களூரு குண்டுவெடிப்பு காரணமா?
பெங்களூருவில் இருந்து வந்த என்.ஐ.ஏ. அதிகாரிகள் சென்னையில் மண்ணடி உள்பட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னையில் பல்வேறு இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் பரபரப்பு நிலவுகிறது.
சென்னையில் மண்ணடி, முத்தையால் பேட்டை உள்ளிட்ட இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். கடந்த மார்ச் 1ஆம் தேதி பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில் வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 9 பேர் காயமடைந்தனர். அவர்கள் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் சில நாட்களுக்கு முன்பு வெளியானது.
இந்த குண்டுவெடிப்புக்கு பின்னணியில் எந்த பயங்கரவாத அமைப்பு இருக்கிறது? என்ன காரணத்திற்காக குண்டுவெடிப்பு சம்பவத்தை நிகழ்த்த மர்மநபர் ராமேஸ்வரம் கஃபே ஓட்டலை தேர்வு செய்தார் என்பன போன்ற விஷயங்கள் தெரியாமல் மர்மமாக இருந்து வருகிறது. இதற்கிடையில் இந்த வழக்கு என்ஐஏ-வுக்கு மாற்றப்பட்டுள்ளது. சிசிடிவி காட்சிகள், குண்டு வெடிப்புக்கு பயன்படுத்தப்பட்ட பொருட்கள் ஆகியவற்றை அடிப்படையாக வைத்து என்ஐஏ அதிகாரிகள் விசாரணை தொடங்கி உள்ளனர்.
அதில் தொப்பி அணிந்த நபர் ஒருவர் வெடி குண்டு வைத்து செல்வது சிசிடிவியில் பதிவாகி இருந்தது. இதுதொடர்பாக தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கை தற்போது என்.ஐ.ஏ அதிகாரிகளும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் இந்த வெடி விபத்து தொடர்பாக இந்த சோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதேபோல் ராமேஷ்வரத்திலும் என்.ஐ.ஏ சோதனை நடைபெற்று வருகிறது. மேலும், பெங்களூரு சிறையில் உள்ள தீவிரவாதியின் வங்கி கணக்குக்கு ரூ. 1 லட்சம் ஹவாலா பணம் பரிமாற்றம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
7 மாநிலங்களிலும் என்.ஐ.ஏ சோதனை:
கேரளாவை சேர்ந்த நஷீர், சிறை கைதிகளை மூளைச்சலவை செய்து தீவிரவாத இயக்கத்துக்கு ஆள்சேர்த்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, சென்னை எழுகிணறு பகுதியில் வீட்டில் பதுங்கி இருந்த 5 பேரை என்.ஐ.ஏ அதிகாரிகள் பிடித்து சென்றனர்.
பெங்களூரு சிறை கைதிகளை தீவிரவாத இயக்கத்தில் சேர்த்த வழக்கு தொடர்பாக 7 மாநிலங்களில் என்.ஐ.ஏ சோதனை நடத்தி வருகிறது.
ராமநாதபுரம் அருகே கீழக்கரையில் என்.ஐ.ஏ சோதனை:
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பருத்திக்காடு தெரு பகுதியில் சம்சுதீன் என்பவர் வீட்டில் NIA சோதனை நடைபெற்று வருகிறது.
ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் தொடர்பில் இருந்ததாக இவர் மீது கடந்த 2023ல் தொடரப்பட்ட வழக்கின் அடிப்படையில், கீழக்கரையில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும், சமீபத்தில் பெங்களூரில் ராமேஸ்வரம் ஃகபேயில் நடந்த வெடிகுண்டு விவகாரத்தில் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையிலும், அவர் மீது ஹவாலா மோசடி புகார் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் NIA சோதனை நிறைவு: சிம்கார்டு,லேப்டாப் பறிமுதல்:
இன்று காலை முதல் கீழக்கரையில் இரண்டு இடங்களில் சோதனை நடைபெற்று வந்தது. இதில், அல் முபித் புது கிழக்கு தெரு பகுதியில் நடந்த சோதனையின் போது, அந்த வீட்டில் ஆறு சிம் கார்டுகள் ஒரு லேப்டாப் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், அங்கிருந்து ஒருவரை விசரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
பருத்திக்காரர் தெரு தெருவை சார்ந்த தமீம் ஆசிக் என்பவரது வீட்டில் சோதனையின் போது ஆதார்கார்டு மற்றும் கல்வி சான்றிதழ்களை பறிமுதல் செய்து கொண்டு சென்றுள்ளனர்.