Chennai Vellore NH: 4 மணி நேரம் வேண்டாம்..! வேலூருக்கு இரண்டரை மணி நேரம் போதும், சென்னை டூ பெங்களூரு 4 வழிச்சாலை - முழு விவரம்
Chennai Vellore NH 4 Lane Project: சென்னை - வேலூர் இடையேயான பயண நேரத்தை 2.5 மணி நேரமாக குறைக்கு, நெடுஞ்சாலை திட்டம் குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.

Chennai Vellore NH 4 Lane Project: சென்னை - வேலூர் இடையேயான நெடுஞ்சாலை திட்டத்திற்கு ஆயிரத்து 338 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
சென்னை - வேலூர் நெடுஞ்சாலை திட்டம்:
தமிழ்நாட்டை தொழில்துறைக்கு ஏற்ற மாநிலமாக மாற்றும் நோக்கில், உட்கட்டமைப்பை மேம்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து வருகின்றன. குறிப்பாக தொழில்துறை சிறந்து விளங்கும் நகரங்களை ஒன்றுடன் ஒன்றாக இணைக்கும் நோக்கில் ஏராளமான சாலை திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. அந்த வகையில் தான், தமிழ்நாட்டில் உள்ள தேசிய நெடுஞ்சாலை 40 இல் அணுகல் கட்டுப்பாட்டு நெடுஞ்சாலையை உருவாக்க, மத்திய அரசு 1,338 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டத்திற்கு அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது. 28 கி.மீ நீளமுள்ள இந்த 4 வழி நெடுஞ்சாலை, வாலாஜாபேட்டை/ராணிப்பேட்டையை தமிழ்நாடு-ஆந்திரப் பிரதேச எல்லையுடன் இணைக்கும். இந்தத் திட்டம் பிராந்திய இணைப்பை மேம்படுத்துவதையும், விரைவான பயணத்தை உறுதி செய்வதையும் நோக்கமாக கொண்டுள்ளது. மேலும், இந்தப் பகுதியில் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதையும் இலக்காக கொண்டுள்ளது.
நெடுஞ்சாலை திட்ட விவரங்கள்:
வரவிருக்கும் நெடுஞ்சாலையில் நடைபாதை பக்க இணைப்பு கொண்ட நான்கு வழி பிரதான பாதையும், இருபுறமும் இருவழி சர்வீஸ் சாலைகளும் இருக்கும். நன்கு திட்டமிடப்பட்ட இந்த வடிவமைப்பு நீண்ட தூர பயணிகள் மற்றும் உள்ளூர் பயணிகளுக்கான பயணத்தை எளிதாக்கும். வாலாஜாபேட்டை மற்றும் ராணிப்பேட்டை நகரங்களில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க 10 கிலோமீட்டர் தூரத்திற்கு புறவழிச்சாலை அமைப்பது இந்த திட்டத்தின் முக்கிய பகுதியாகும். திட்டத்தின் ஒரு அங்கமாக நான்கு பெரிய பாலங்கள் மற்றும் இரண்டு ரயில்வே மேம்பாலங்கள் கட்டுவதன் மூலம் பயணப் பாதுகாப்பையும் மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
150 நிமிடங்களில் வேலூர்:
புதிய வழித்தடமானது சென்னைக்கும் பெங்களூரு, திருப்பதி மற்றும் வேலூர் போன்ற நகரங்களுக்கும் இடையிலான இணைப்பை மேம்படுத்தும். அதன்படி, தற்போது சென்னையில் இருந்து வேலூர் பயணிக்க 4 மணி நேரம் ஆகும் சூழலில், புதிய நெடுஞ்சாலை பயன்பாட்டிற்கு வந்தால் வெறும் இரண்டரை மணி நேரத்திலேயே சென்னையில் இருந்து வேலூரை அடைய முடியும் என கூறப்படுகிறது. இதன் மூலம் அங்குள்ள சிஎம்சி போன்ற பிரபல மருத்துவமனையை அணுகுவது எளிதாகிறது. கூடுதலாக வர்த்தகம், சுற்றுலா மற்றும் பிற செயல்பாடுகளுக்கு வேலூரை எளிதாக அணுகக்கூடியதாக மாற்றி, மாவட்டத்தின் பொருளாதாரத்தை மேலும் அதிகரிக்கும்.
பெங்களூரு ட்ரிப் ஈசி:
இந்த நான்கு வழி அணுகல் கட்டுப்பாட்டு சாலை, சித்தூர் வழியாக பெங்களூருக்கு மாற்றுப் பாதையாகச் செயல்படும். சித்தூர்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையின் 180 கி.மீ நீளம் ஏற்கனவே நான்கு வழிச்சாலையாக விரிவுபடுத்தப்பட்டுள்ளது. மேலும், மேம்படுத்தப்பட்ட நெடுஞ்சாலையானது, வரவிருக்கும் சென்னை-பெங்களூரு விரைவுச் சாலையுடன் இணையும். இது திருவண்ணாமலை, ஆரணி, வெம்பாக்கம் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தின் மேற்குப் பகுதிகளிலிருந்து ஆற்காடு-திருவண்ணாமலை-திண்டிவனம் மாநில நெடுஞ்சாலை வழியாக வாகன ஓட்டிகளுக்கு ஒரு பாதையை வழங்கும்.
பொருளாதார வளர்ச்சி
இந்த நெடுஞ்சாலையானது BHEL நிறுவனத்தை ஆதரிக்கும் தோல் மற்றும் சிறிய அளவிலான பொறியியல் நிறுவனங்கள் உள்ளிட்ட உள்ளூர் தொழில்களுக்கு ஆதரவளிக்கும். ராணிப்பேட்டையில் 2025 ஆம் ஆண்டு நிறைவடையும் சிறப்பு பொருளாதார மண்டலத்துடன், இந்த திட்டம் கணிசமான பொருளாதார வளர்ச்சியை உறுதி செய்கிறது. திருப்பதி மற்றும் பெங்களூரு போன்ற அண்டை மாநிலங்களின் பிரதான நகரங்களுக்கான பயணத்தையும் எளிதாக்குவது, பொருளாதார வளர்ச்சிக்கு பெரிய தூண்டுதலாக கருதப்படுகிறது. அதே நேரத்தில் 2-வழி சர்வீஸ் சாலைகள் மூலம் உள்ளூர் போக்குவரத்து இயக்கத்தையும் உறுதி செய்கிறது. கடந்த ஆண்டு இறுதியில் மத்திய அரசு இந்த திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்ட நிலையில், விரைவில் பணிகள் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.





















