செங்கல்பட்டு : மீன் கூடையை பேருந்தில் ஏற்றியதற்காக பேருந்தில் இருந்து இறக்கிவிடப்பட்ட மீனவ மூதாட்டி
மீன் கூடையை பேருந்தில் ஏற்றியதற்காக பேருந்தில் இருந்து இறக்கிவிடப்பட்ட மீனவ மூதாட்டி
இந்தியா 73வது குடியரசு தினத்தை கம்பீரத்துடன் கொண்டாடி வரும் நிலையில் இன்று (26/01/2022) காலை 6.30 மணி அளவில் மீனவப் பெண் மூதாட்டி ஒருவர் மீன் கூடையை தனியார் பேருந்தில் ஏற்றியதற்காக அரசு நடத்துனரால் பேருந்தில் இருந்து இறக்கி விடப்பட்டார்.
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் வட்டம் மகாபலிபுரம் பேரூராட்சி கொக்கிலிமேடு கிராமத்தைச் சேர்ந்த செல்லம்மாள் (வயது 52) என்பவர் இன்று காலை மீன் வியாபாரத்திற்காக ரூபாய் 10 ஆயிரத்திற்கு மீனை ஏலம் எடுத்து அதனை மீன் கூடையில் வைத்து மகாபலிபுரம் பேருந்து நிலையத்தில் மகாபலிபுரத்தில் இருந்து தாம்பரம் வரை செல்லக்கூடிய (தடம் எண் 515 பேருந்து எண் TN-01-AN -1842) பேருந்தில் ஏறியுள்ளார். அப்பொழுது அப்பேருந்தின் நடத்துனர் அவர்கள் மீன் கூடையை எடுத்துக்கொண்டு பேருந்தில் ஏறக்கூடாது என்று கூறி அப்பெண்மணியை வலுக்கட்டாயமாக பேருந்தில் இருந்து இறக்கி விட்டுள்ளார்.
செங்கல்பட்டு: மீன் கூடையுடன் ஏறியதால் அரசு பேருந்தில் இருந்து இறக்கிவிடப்பட்ட மீனவ பெண் https://t.co/wupaoCzH82 | #Chennai #MTC #MKStalin @mkstalin @KanimozhiDMK pic.twitter.com/txbXAeMUra
— ABP Nadu (@abpnadu) January 26, 2022
இச்சம்பவம் குறித்து முதாட்டி கூறியதாவது;
நாங்கள் என்ன திருட வா போறோம், நாங்கள் பயணச் சீட்டுக்கு பணம் செலுத்த மாட்டோமா, மாநகரப் பேருந்து ஏழைகளுக்கானது இல்லையா, வசதி படைத்தவர்கள் தான் செல்ல வேண்டும் என்றால் அப்பேருந்து ஏன் எங்கள் கிராமத்திற்கு வர வேண்டும், வசதி படைத்தவர்கள் பயணம் செய்யும் போது அவர்கள் லக்கேஜ் ஏற்றுவது இல்லையா என கூறினார். நாங்கள் பேருந்தில் லக்கேஜுக்கான பணம் செலுத்தத் தயாராக இருக்கும் போது நடத்துனர்கள் ஏன் எங்களை ச்சீ இறங்கு என தரக்குறைவாக பேசியுள்ளார்.
MTC பேருந்தில் மீன் கூடைகளை ஏற்றக் கூடாது என்று அரசு சட்டம் ஏதாவது விதித்துள்ளதா என கேள்வி எழுப்பினார். மேலும் நாங்கள் பிழைப்பதற்காக தானே மீன் எடுத்துச் செல்கிறோம். எங்களை பேருந்தில் ஏற்றாமல் தரக்குறைவாக பேசி இறக்கி விடுவது வழக்கமாக வைத்திருக்கிறார்கள் இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லை என்றால் கோட்டைக்கு மனுவுடன் செல்வேன் என்று அந்த மூதாட்டி தெரிவித்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைதள பக்கங்களிலும் பின் தொடரலாம்