TN Electricity Board : அப்போ 60 கால்ஸ்.. இப்போ 75 கால்ஸ்.. தமிழ்நாடு மின்வாரியம் அளித்த அதிரடி அறிவிப்பு..
Tamilnadu Electricity : மின்துறை சார்ந்த குறைகளை தெரிவித்திட 24 மணிநேரமும் இயங்கும் ‘மின்னகம் சேவை மையம்’ செயல்பட்டு வருகிறது
வட கிழக்கு பருவ மழை தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னையில் கனமழை பெய்து வருகிறது. மாநகரில் நேற்றிரவு முதல் பெய்து வரும் கனமழையால் பல்வேறு பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளது. சென்னை மாநகராட்சி மழை நீரை வெளியேற்ற தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. மழை நேரத்தில் பொதுமக்கள் தொடர்பு கொள்ள உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் ‘மின்னகம் சேவை மையம்’ கனமழை பெய்து வருவதால் தற்போது ஒரே நேரத்தில் 75 அழைப்புகளை பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கையாக மின்னகம் வழக்கமாக பெறப்பட்டு வந்த 60-க்கு அழைப்புகளுக்கு பதிலாக, தற்போது 75 வரை அழைப்புகளை பெற வசதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்னகம் உதவி எண். 94987 94987
மின்துறை சார்ந்த குறைகளை தெரிவித்திட 24 மணி நேரமும் இயங்கும் ‘மின்னகம் சேவை மையம்’ தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.
சென்னையில் மழை - உதவி எண்கள் அறிவிப்பு:
சென்னையில் மழைநீர் தேங்குதல், மரம் விழுதல், மின்வெட்டு, மின் கசிவு போன்ற புகார்களுக்கு 1913,
044-25619206, 044-25619207, 044-25619208 ஆகிய எண்களில் புகார் அளிக்கலாம்.
‘நம்ம சென்னை செயலி' அல்லது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கம் வழியாகவும் தொடர்புக் கொள்ளலாம் என்று மாநகராட்சி அறிவித்துள்ளது.
மிக கனமழை வாய்ப்பு :
தமிழ்நாட்டில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் இன்று ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதன்காரணமாக, தமிழ்நாட்டில் நாளை முதல் அடுத்த நான்கு நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலசந்திரன் தென்மேற்கு வங்க கடல் பகுதியில் இலங்கை ஒட்டி உள்ள பகுதியில் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி நிலவுகிறது. கடந்த 24 மணிநேரத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் அனேக இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது என்றார்.
மேலும் அதிகபட்சமாக திருவள்ளூர், செங்குன்றம் 13 சென்டிமீட்டர் பெரம்பலூரில் 12 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது. சென்னை, திருவள்ளூர் காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும். டெல்டா மாவட்டங்களில் ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் ஒரு இடங்களில் கன மழை பெய்ய கூடும். மீனவர்களுக்கான எச்சரிக்கை தமிழக கடற்கரைப் பகுதிகள் மன்னார் வளைகுடா பகுதி மற்றும் அதனை ஒட்டி உள்ள தென்மேற்கு வங்க கடல் பகுதியில் மணிக்கு காற்றானது 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். எனவே மீனவர்கள் அடுத்த ஓரிரு தினங்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.
நவம்பர் ஒன்றாம் தேதி பதிவான மழை கடந்த 72 ஆண்டுகளில் பெய்த மூன்றாவது அதிகபட்சம் மழை. சென்னை பொருத்தவரை ஒன்றாம் தேதி முதல் இன்று வரை 20 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது. இது இயல்பை விட 29% குறைவு.
01.11.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், இராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, , புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, சேலம், நாமக்கல், தர்மபுரி, ஈரோடு, சிவகங்கை, இராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.
02.11.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.