மேலும் அறிய
அடுத்தாண்டு தொடக்கத்தில் 2ஆம் கட்ட மழைநீர் வடிகால் பணிகள் தொடங்கும் - அமைச்சர் சேகர் பாபு
சென்னை மாநகராட்சி மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளில் 95 சதவீதம் முடிவு பெற்றிருக்கின்றன.

அமைச்சர் சேகர் பாபு
சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் கொளத்தூர் தொகுதியில் தனியார் மருத்துவமனையின் மூலமாக கட்டணமில்லா பொது மருத்துவ முகாம்கள் கடந்த மூன்று நாட்களாக நடத்தப்பட்டு வருகிறது. நேற்று கொளத்தூர், வேல்முருகன் நகர், ராஜாஜி நகரைச் சேர்ந்த காமராஜர் தெரு, ஜெய்பீம் நகர் 1வது தெரு, ராஜா தெரு சமுதாயக் கூடம் ஆகிய இடங்களில் பொது மருத்துவ முகாம்களை இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்து, பார்வையிட்டதோடு, மருத்துவ சிகிச்சை பெற்றவர்களுக்கு மருந்து மாத்திரைகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன், மற்றும் மாநகராட்சி மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சிக்கு பின், நிருபர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர், “மழைக்கு பிறகு ஏற்படும் கழிவுநீர் அடைப்புகளை உடனடியாக அகற்றுவதற்கு பிரச்சனைகள் இல்லாத மண்டலத்திலிருந்து சூப்பர் சக்சன் போன்ற அதிநவீன இயந்திரங்களைக் கொண்டு, சரி செய்கின்ற பணி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. திருவிக நகர் சட்டமன்ற தொகுதி மற்றும் கொளத்தூர் சட்டமன்ற தொகுதிகளுக்கு 30 கொசு தெளிப்பான் வண்டிகள் வழங்கப்பட்டுள்ளது. அதோடு இல்லாமல் நீர் தேங்கி இருக்கின்ற பகுதிகளில் மருத்துவ முகாம்களை நடத்திட முதலமைச்சர் அறிவுறுத்தியபடி நேற்று முன்தினம் சென்னை பெருநகர மாநகராட்சியும் மக்கள் நல்வாழ்வுத்துறை இணைந்து 200 இடங்களில் சுமார் 82,000 பயனாளிகள் பயன்பெற்ற சிறப்பு மருத்துவ முகங்களை நடத்தியது. அதன் தொடர்ச்சியாக கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் நேற்று முன்தினம் முதல் தினந்தோறும் 4 இடங்களில் மருத்துவ முகாம்கள் நடைபெறுகின்றன. சுமார் 3 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் இந்த மருத்துவ முகாம்களிலே பயனடைந்துள்ளார்கள்.
சென்னை மாநகராட்சி மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளில் 95 சதவீதம் முடிவு பெற்றிருக்கின்றன. ஒரு சில இடங்களில் இணைப்பு கால்வாய்களைத்தான் ஏற்படுத்த வேண்டும். வரும் ஜனவரி அல்லது பிப்ரவரி மாதத்தில் இரண்டாம் கட்ட மழைநீர் வடிகால் கட்டுகின்ற பணிகளை சென்னை மாநகராட்சி துவங்க இருக்கின்றது. வருகின்ற 9ம் தேதி பெருமழை வந்தால் அதை எதிர்கொண்டு, மக்களுக்கு எவ்வித உபத்திரம் இல்லாமல் பாதுகாக்கின்ற பணிகள் நடைபெற்று வருகின்றன. ஏற்கனவே எங்கெல்லாம் மழைநீர் தேங்கிருந்ததோ அங்கே எல்லாம் மின்மோட்டார் பொருத்தப்பட்டிருந்தது. அவை பயன்பாட்டில் இல்லாமல் இருந்தாலும் அகற்றாமல் இருப்பதற்கு உத்தரவிடப்டுள்ளது. மேலும் மின்மோட்டார்கள் தேவையென்றாலும் அதற்கும் தயாராக உள்ளோம். போர்க்கால அடிப்படையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஏழ்மையானவர், வசதியானர் என்ற பாகுபாடு இல்லாமல் சமூக நீதியின் அடிப்படையில் சுமார் 2.5 இலட்சம் குடும்பங்களுக்கு நாளை(இன்று) முதல் கொசுவலை வழங்கப்பட உள்ளது.
ஆர். எஸ்.எஸ், இயக்கம் நீதிமன்றத்தை அணுகுகின்றபோது, தமிழக அரசை பொறுத்தளவில் நீதிமன்றத்தில் என்னென்ன கருத்துக்களை முன்வைக்க வேண்டுமோ அவற்றை எடுத்து வைக்க தேவையான நடவடிக்கைகளை முதலமைச்சர் தனது நேரடி கட்டுப்பாட்டில் மேற்கொண்டு, தமிழகம் தொடர்ந்து அமைதி பூங்காவாக இருப்பதற்கு தனது அனுபவ திறமையால் அனைத்து நடவடிக்கைளையும் எடுப்பார்” என்று கூறினார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்





















