அரசு திட்டத்திற்கு அம்மா பெயர் , நாங்கள் ஏதாவது கேட்டோமா ? - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
அம்மா உப்பு என அதிமுக ஆட்சியில் பெயர் வைத்தார்கள் ஆனால் எந்த கடையிலும் அம்மா உப்பு விற்றது போல தெரியவில்லை. அம்மா குடிநீர் என வைத்தார்கள். ஆனால் எங்கு விற்றார்கள் என்பது தெரியவில்லை.

தமிழ்நாடு அரசு பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் ரூ.62.60 லட்சம் கோடி செலவில் உட்கட்டமைப்பு மற்றும் உபகரணங்களை மக்கள் பயன்பாட்டிற்கு மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தொடங்கி வைத்தார்.
பின்பு செய்தியாளர்களை சந்தித்த அவர் ;
தமிழ்நாட்டின் பழம்பெரும் பல் மருத்துவக் கல்லூரி என்கிற வகையில் 72 ஆண்டுகளுக்கு முன்னாள் 15 மாணவர்களுடன் பல் மருத்துவப் பிரிவாக தொடங்கி பல்வேறு நிலைகளில் வளர்ச்சி பெற்று இன்று 100 இளங்கலை மருத்துவ மாணவர்கள் பயிலும் வகையிலும், 40 முதுகலை பல் மருத்துவ இடங்களுடன் மிகச் சிறப்பாக செயல்பட்டு வரும் மருத்துவக் கல்லூரி தமிழ்நாடு அரசு பல் மருத்துவ கல்லூரி. பழம் பெருமை வாய்ந்த இந்த கல்லூரியில் கடந்த 4.5 ஆண்டு காலத்தில் பல்வேறு வகையிலான புதிய மருத்துவ கட்டமைப்புகளும் அதிநவீன மருத்துவ உபகரணங்களும் தொடர்ச்சியாக செய்யப்பட்டு வருகின்றது. தமிழ்நாடு அரசு பல் மருத்துவக் கல்லூரியின் மூலம் கடந்தாண்டு 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் மருத்துவ பயன் பெற்றுள்ளார்கள்.
தினந்தோறும் இந்த மருத்துவக் கல்லூரியில் 1500 பேர் புறநோயாளி மற்றும் உள் நோயாளிகளாக பயன்பெற்று வருகிறார்கள். இன்று வாய் மற்றும் முக தாடை சிறப்பு ஊடுகதிர் பட கருவி மற்றும் ஒளி தூண்டும் ஸ்கேனர் வசதிக்காக நவீன கருவிகள் இயக்கி வைக்கப்பட்டுள்ளது.
புதிய இணையவழி நூலகமும் இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
சி.எஸ்.ஆர் நிதியுடன் 15 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் அமைப்பு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. 62 லட்சத்தி 60 ஆயிரம் மதிப்பீட்டில் தமிழ்நாடு அரசு பல் மருத்துவக் கல்லூரியில் பல்வேறு கட்டமைப்புகளை மக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்துள்ளேன். 261 கோடியே 83 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வகைகளான புதிய மருத்துவ கட்டமைப்புகள் இந்த கல்லூரி வளாகத்தில் கட்டப்பட்டு வருகிறது. மருத்துவக் கல்லூரி நடைபெற்று வரும் கட்டிட பணிகளை செப்டம்பர் 30 - ஆம் தேதிக்குள் முடிப்பதாக பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது.
எனவே செப்டம்பர் மாத இறுதிக்குள் மருத்துவக் கல்லூரி கட்டமைப்பு பணிகள் மருத்துவ பயன்பாட்டிற்கு வரும். பல் மருத்துவ கல்லூரிகளின் மருத்துவ தரத்தை சர்வதேச அளவில் உயர்த்த 4 கோடி 31 லட்சம் மதிப்பீட்டில் அதிநவீன மருத்துவ உபகரணங்கள் கொள்முதல் செய்யும் பணியும் நடைபெற்று வருகிறது.
பல் மருத்துவமனைகளில் மருத்துவர்கள் பற்றாக்குறை என்ற ஓபிஎஸ் கருத்துக்கு பதிலளித்த அமைச்சர் மா சுப்பிரமணியன் ;
ஏற்கனவே காலியாக உள்ள மருத்துவ பணியிடங்களை நிரப்ப தொடர்ச்சியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, 48 பல் மருத்துவ பணியிடங்களை நிரப்ப எம்ஆர்பி நடவடிக்கை எடுத்துள்ளது. ஓபிஎஸ் போன்ற தலைவர்கள் அறிந்து கொள்ள வேண்டும் அவர்களும் ஆட்சியில் இருந்து உள்ளார்கள். ஒட்டு மொத்தமாக தமிழ்நாட்டில் ஓபிஎஸ் காலகட்டத்தில் எத்தனை காலி பணியிடங்களை வைத்திருந்தார்கள் என்பது அவர்களுக்கு தெரியும். இந்திய மருத்துவ பணியிடத்தில் ஒரு பணியிடம் கூட காலி இல்லாத அளவிற்கு அனைத்து பணியிடங்களும் நிரப்பப்பட்டுள்ளது. பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத் துறை நிர்வாகத்தில் ஒரு காலி பணியிடம் கூட நிரப்பப்படாமல் இல்லை. 11,220 பேர் பல் மருத்துவ காலி பணியிடங்களுக்கு தேர்வு எழுதினார்கள், இதில் 8,700 பேர் தேர்ச்சி பெற்றுள்ளார்கள். ரேங்கிங் சான்றிதழ், வெரிஃபிகேஷன் முடித்து 48 பேர் தேர்வு நேற்றே முடிந்து விட்டது. 450 மருத்துவ சார்ந்த பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. முதல்வர் பணி நியமன ஆணைகளை வழங்க உள்ளார். வெளிப்படை தன்மையோடு மருத்துவ காலி பணியிடங்களை நிரப்பி வருகிறோம்.
இந்திய பல் மருத்துவ கவுன்சில் வருடா வருடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்புவது வழக்கம், அவர்களின் தலைமையில் நாம் இயங்குகிறோம் என்பதை காட்டுவதற்காக அவர்கள் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்புவது வழக்கம். வெளியிலிருந்து பார்க்கும் அரசியல் தலைவர்கள் மருத்துவர்கள் பற்றாக்குறை என்பதை பூதாகரமான பிரச்சினையாக தமிழ்நாட்டு மக்களிடம் ஏற்படுத்த வேண்டாம்.
அரசு திட்டங்களில் ஸ்டாலின் பெயர் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்திற்கு அதிமுக சென்றது குறித்த கேள்விக்கு பதில் அளித்த மா சுப்பிரமணியன்;
அதிமுக நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்தது விந்தை. அம்மா உப்பு என அதிமுக ஆட்சியில் பெயர் வைத்தார்கள். ஆனால் எந்த கடையிலும் அம்மா உப்பு விற்றது போல தெரியவில்லை. அம்மா குடிநீர் என வைத்தார்கள். ஆனால் எங்கு விற்றார்கள் என்பது தெரியவில்லை. அம்மா சாலையோர பூங்கா, அம்மா தீவு பூங்கா என எந்த திட்டத்தை தொடங்கினாலும் அம்மா என பெயர் வைத்தார்கள்.
அப்போது நாங்கள் யாரும் கேட்டோமா ? நலம் காக்கும் ஸ்டாலின், உங்களுடன் ஸ்டாலின் போன்ற திட்டங்கள் பெரிய திட்டங்கள். முகாம்கள் மூலம் லட்சக்கணக்கானோர் பயன் பெற்று வருகிறார்கள். திட்டங்கள் மூலம் தமிழக அரசுக்கு கூடிவரும் ஆதரவு பொறுத்துக் கொள்ள முடியாத காரணத்தினால் பொச்சரிப்பு என்னத்தோடு உச்ச நீதிமன்றத்தை அணுகியிருக்கிறார்கள்.
நாளை அறிக்கை வரும்
நாமக்கல் கிட்னி முறைகேடு விவகாரத்தில் நாளை சுகாதாரத்துறை சார்பில் முழு அறிக்கை வரும் என்றார்.






















