''காய்கறி மாதிரி இறைச்சி விற்பனைக்கும் அனுமதி தாங்க'' - அரசுக்கு வியாபாரிகள் கோரிக்கை
காய்கறிகளை போலவே இறைச்சிகளை பொதுமக்கள் மற்றும் உணவகங்களுக்கு விற்பனை செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு இறைச்சி வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்
காய்கறிகளை போலவே இறைச்சி வகைகளையும் பொதுமக்களுக்கும் உணவகங்களுக்கும் வழங்க வேண்டும் என்று சென்னையை சேர்ந்த இறைச்சி வியாபாரிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்
உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் அத்தியாவசிய பொருட்களான மருந்து, பால், காய்கறிகள் மற்றும் உணவகங்களில் பார்சல் சேவை விற்பனைக்கு மட்டும் தமிழக அரசு விலக்கு அளித்துள்ளது. முன்னதாக தளர்வுகள் உடன் கூடிய பொதுமுடக்கத்தின் போது வார இறுதிநாட்களில் காசிமேடு, பட்டினப்பாக்கம், சிந்தாதிரிப்பேட்டை மீன் சந்தைகளிலும் இறைச்சி கடைகளிலும் கட்டுப்படுத்த முடியாத மக்கள் கூட்டம் இறைச்சி வாங்க கூடுவதும் அக்கூட்டத்தை கட்டுப்படுத்துவதும் அரசுக்கு பெரும் சவாலாக இருந்து வந்தது.
இந்த நிலையில் நடமாடும் காய்கறி வாகனங்கள் மூலம் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 200 வார்டுகளிலும் உள்ள தெருக்களுக்கு காய்கறிகள் எடுத்துச் செல்லப்பட்டு கொரோனா தொற்று விதிமுறைகளை பின்பற்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இறைச்சி விற்பனை செய்ய ஏற்பட்டுள்ள தடையால் சென்னையில் உள்ள பெரும்பாலான அசைவ உணவகங்களில் ஆட்டிறைச்சி மற்றும் கோழி இறைச்சிகள் கிடைப்பதில் கடும் தட்டுப்பாடு நிலவிவருகிறது. சென்னையில் செயல்பட்டு வரும் பெரும்பாலான சிறு அசைவ உணவங்கள் இதனால் கடும் சிரமத்திற்குள்ளாகி உள்ளன. இந்த நிலையில் இறைச்சி வகைகளையும் வீடுவீடாக கொண்டு சென்று விற்க தமிழக அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்று சென்னையை சேர்ந்த இறைச்சி வியாபாரிகள் கோரிக்கைவிடுத்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக சென்னை அயனாவரத்தில் இறைச்சி வியாபாரிகள் கூட்டமைப்பினர் செய்தியாளர்களை சந்தித்தனர். செய்தியாளர்களிடம் பேசிய அக்கூட்டமைப்பின் நிர்வாகி ஜலால், இறைச்சி விற்பனையில் ஈடுபடும் இ-காமர்ஸ் நிறுவனங்கள் ஆன்லைனில் இறைச்சி விற்பனை செய்து கொள்ள தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இந்த நிலையில் வீடுவீடாக காய்கறி விற்பனைக்கு தமிழக அரசு அனுமதி அளித்திருப்பது போலவே கடைகளில் இறைச்சி வியாபாரிகளையும் அனுமதிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். மக்களுக்கும் உணவகங்களுக்கும் இறைச்சி விநியோகத்தில் ஈடுபடும் சிறுவியாபாரிகள் பொதுமுடக்க காலத்தில் இறைச்சி விற்பனை செய்ய ஏற்பட்டுத்துள்ள தடையால் ஊரடங்கு காலத்தில் ஏற்பட்டுள்ள வருவாய் இழப்பு ஏற்பட்டு சிரமமப்படுவதாகவும் இறைச்சி வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழக அரசு காய்கறிகளுக்கு மட்டும் அனுமதி அளித்துவிட்டு ஆடு, கோழி, மீன் உள்ளிட்டவை விற்பனைக்கு விதித்துள்ள தடையை நீக்க வேண்டும் என பலர் சமூகவலைதளங்கள் வாயிலாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். அரசின் இந்த நடவடிக்கைகள் சைவ உணவு உண்பவர்களுக்கு ஆதரவானதாகவும் சைவ உணவு மட்டுமே அத்தியாவசிய உணவாகவும் சித்தரிக்கும் நடவடிக்கையாக உள்ளதாக நெட்டிசன்கள் பலர் தங்கள் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.